Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

என்றோ பார்க்கும் உறவுகள்!

உறவினர்கள் எல்லோருமே தனித்தனி இடங்களில் வாழ்ந்தாலும், அவ்வப்போது சந்திப்பதும், சிரித்து மகிழ்வதும் நடைமுறையில் காண்பது. இன்று அனைத்துமே மாறிவிட்டது. வீட்டில் நடைபெறும் விசேஷங்களுக்கு கூப்பிட்ட மரியாதைக்காக தலைகாட்டுவதும், அசம்பாவித நிகழ்வுக்கு காரியம் முடியும் வரை இருந்து விட்டு வந்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு இடைவெளி அதிகமாகிவிட்டது.பெண்கள் திருமணமாகி சென்றாலும், தாய் வீட்டிலிருந்து பொடி வகைகள், அப்பளம், வடகங்கள் என வருடம் முழுவதும் வந்து கொண்டேயிருக்கும். பிறந்த ஊரிலிருந்து எங்கு சென்றாலும் குடும்ப வழக்கங்களும், பாரம்பரியங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

நம் பிள்ளைகளின் தலைமுறையில் பாரம்பரியங்கள் முற்றிலும் மாறிவிட்டது. பழைய சம்பிரதாயங்கள் புதிய வடிவில் அனுசரிக்கப்படுவதால், ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்படுகின்றன. அனைத்துப் பொருட்களும் சந்தையில் கிடைப்பதால் ஊர்ப் பெரியவர்கள் செய்து தரும் பொருட்களை நாம் எதிர்பார்ப்பதில்லை. பெரிய பெரிய ஜாடிகளில் நார்த்தங்காய், ஆவக்காய் என பெரியவர்கள் ஊறுகாய் போட்டு குடும்பப் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்தார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால், அனைத்துமே ஏதோ தூக்கத்தில் நடைபெற்ற கனவுகள் போல் காணப்படுகிறது. கிராமங்களில் பிறப்பிலிருந்து வாழ்ந்து வரும் சிலர் நகரங்களுக்கு வருவதேயில்லை.

மற்றவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு நகரவாசிகளாக மாறிவிட்டனர். கிராமத்தில் குடும்பத்தில் பெரியவர் முக்கியமாக கருதப்படுவார். அவருக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை குறையாதது. அவர் விசேஷத்திற்கு வருகிறார் என்றால் அவரைப் பார்க்கவே அனைத்து உறவுகளும் ஒன்று சேரும். பெரியப்பா வராமல் காரியம் நடக்குமா என்றுதான் சொல்வார்கள். நகரத்தில் நடைபெறும் செயல்கள் அவர்களுக்கு புதுமையாக தோன்றலாம். தோட்டத்து வெற்றிலையும், பொடித்த களிப்பாக்கையும் அவர்கள் போட்டு வாயை மெல்வார்கள்.

நாம் அதையே ‘பீடா’ என்ற பெயரில் ருசிகரமாக மாற்றி இருக்கிறோம். பச்சை குத்திக் கொள்வது, ‘டாட்டூ’வாக மாறிவிட்டது. அதேபோல் மருதாணி இன்று ‘மெஹந்தி’ என்று பெயர் பெற்றது.

பழமையில் ஊறியவர்களுக்கு புதுமையான விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஒரு உடைந்த சைக்கிளை போட்டி போட்டுக் கொண்டு பிள்ளைகள் சுற்றினார்கள். இன்று நகரத்தில் எடையைக் குறைக்க ‘ஜிம்’ சென்று சைக்கிள் ஓட்டுகிறோம். அதுதான் வித்தியாசம். நம் பெரியோர்கள் கட்டுக்கோப்பான உடல் பராமரிப்பிற்கு அனைத்தையும் அமைத்துத் தந்தார்கள்.

அவர்களும் இன்று வரை நம்மைவிட ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்கள். மற்றொரு விஷயம் கிராமத்து உறவினர்களிடம் நாம் கவனிக்க வேண்டியது, இரண்டு மணி நேரப்

பயணமாக இருந்தால் கூட, கையில் சாப்பாடு கட்டித் தராமல் விடமாட்டார்கள். வெகுளித்தனமான அன்பை நாம் கிராமத்து உறவினர்களிடம்தான் பார்க்க முடியும். தெருமுனையில் ஒரு கார் வந்து விட்டால் போதும், அனைவர் வீடுகளிலிருந்தும் தலைகள் எட்டிப் பார்க்கும். சிறிது நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கிராமம் முழுமைக்கும் பரவி விடும். உச்சி முகர்ந்து முத்தமிடுவது என்பார்களே, அதுதான் நடக்கும்.

உறவுகள் சூழ, இயற்கையான காற்று, ஆற்றங்கரை, கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரும் பிள்ளைகள் என அனைத்தும் ஒருவருக்கு ஆறுதல் தரக்கூடியது. மாலை நேரங்களில் வீட்டுத் திண்ணைகளில் அறுவடை குறித்தும் அடுத்து என்ன பயிரிடலாம் என்பது குறித்தும் நிறைய பேசுவார்கள். பெண்கள் ஒன்றாக அமர்ந்து புதிய படம் பார்க்க எப்போது ஒன்றாகப் போகலாம் என பேசுவார்கள். கிராமத்தில் இருப்பவர்களுக்கு, நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒரு ஓரமாக கதவை அடைத்துக் கொண்டு வாழ்வது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். நாம் வெளிநாடு செல்ல எவ்வளவு ஏற்பாடுகள் செய்வோமோ அது போல்தான் அவர்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவது.

வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டகை என்றால், முன்புறம் திண்ணைப் பகுதியில் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும். யாரும் எப்பொருளையும் தொடமாட்டார்கள். வெளியூர் செல்ல நேரிட்டால் கூட மாடுகளை பார்த்துக் கொள்ளவும், வயலுக்கு நீர் பாய்ச்சவும் ஆட்கள் இருப்பார்கள். இதனை நாம் சிறுவர்களாக இருந்த போது பார்த்து அனுபவித்ததுதான். இன்று ‘சுவிட்ச்’ போட்டால் துணி துவைப்பது முதல் தரை சுத்தம் செய்வது வரை நடக்கிறது.

ஆனால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா என்றால் இல்லை. காரணம், நாம் உறவுகளை மறந்து விட்டோம். தனித்து வாழும் போது, சிறிய விஷயங்கள் கூட நமக்கு பேரிழப்பாகத் தெரியும். ஓரளவு அனைத்தையும் அனுபவித்த நமக்கு மாற்றத்தின் வித்தியாசம் இவ்வளவு தெரிகிறது என்றால், இவைகளை கண்டிராத நம் பிள்ளைகள், அவர்களின் வாரிசுகளும், எதிர்காலத்தில் உறவுகள் இல்லாமல் எப்படி சங்கடங்களை எதிர்கொள்ளப் போகிறார்கள். உறவுகளைப் பற்றி பிள்ளைகளிடம் நிறையப் பேசுவோம்.

உறவுகளுடன் ஒன்றாகக் கூடிப் பழகும் பிள்ளைகள் என்றுமே பிறரிடம் விட்டுக் கொடுத்து பழகுவார்கள். எப்படிப்பட்ட கஷ்டத்தையும் சமாளிக்கத் தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய சூழலில் வளரும் பிள்ளைகள் சிறிய விஷயங்களுக்குக்கூட மன அழுத்தம் கொள்கிறார்கள். கணவன்-மனைவி உறவு அந்தரங்கம் ஆனாலும், தாங்கிப் பிடிக்க உறவுகள் தேவைப்படுகிறது. பலமான வேர்கள் இல்லாத மரம் காற்றடித்தாலே கிளைகள் உடைந்து விழும். அது போல்தான் அரவணைக்கும் உறவுகள் இல்லாத குடும்பம். ஆணிவேர் போன்ற பெரியவர்கள் அமைத்துத் தராத குடும்பங்கள் முழுமையான சந்தோஷத்தை அடைய முடியாது. பாசத்தையும் அன்பையும் உறவினர்கள் மட்டும்தான் தர முடியும். இதை நடைமுறை வாழ்க்கைதான் புரியவைக்கும்.

விடுமுறைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல், வர இயலாத உறவினர்களையும், பழமையில் ஊறிய ஊர்ப் பெரியவர்களையும் சென்று பார்க்க சமயம் ஒதுக்கிக் கொள்ளலாம். அவர்களால் நம் வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்கள் கிடைக்கப்படுவதோடு வாழையடி வாழையாக உறவுகள் வளரவும் வாய்ப்பாகுமே! நாம் மனம் வைத்தால், என்றோ பார்க்கும் உறவுகளை அருகிலேயே வைக்கலாம்.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்