Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

தோள் கொடுக்கும் உறவுகள்!

நம் வாழ்நாள் முழுவதும் உடன் பயணித்துக் கொண்டிருப்பதுதான் உறவுகள். வயது முதிர்ந்து சில உறவுகள் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவர்களின் வழிவந்த உறவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். புது சந்ததிகள், தலைமுறை தொடங்கும். அதனால்தான் உறவுகள் என்பது ‘வாழையடி வாழையாக’ வளர வேண்டும் என்பார்கள். உறவுகள் நம்மால் அமைத்துக் கொள்ளக்கூடியதல்ல.

பல்வேறு உறவுப் பெயர்களில் நமக்குக் கிடைக்கும் ரத்த பந்தம் என்று கூட சொல்லலாம். இத்தகைய உறவுகளை உதறித் தள்ளவோ வேண்டாமென்று விட்டு விடவோ முடியாது. சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் இவற்றால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படலாம். ஆனால் அது நீடிக்காது. வீட்டில் விசேஷமோ, வேறு அசந்தர்ப்பமோ நடந்தால், பிரிந்த உறவு சேர்ந்து விடும். நண்பர்கள் உறவாக மாறுவதும் நடைமுறையில் காணப்படுகிறது. ஒரு எல்லைவரை சந்தோஷம் தரும் என்றாலும் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை.

காரணம், நாம் எங்கு சென்று வசித்தாலும் நம் உறவுகள் மாறாதது. நட்பாகப் பழகி உறவாக ஏற்றுக் கொண்டவர்கள் நிறைய பேர் இருந்தாலும், குறிப்பிட்ட சடங்கு முறைகள் முக்கிய உறவுகளால் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. காரணம், நட்பு நம்மால் அமைத்துக் கொள்வதாகும். யாரிடம் வேண்டுமானாலும் நட்பாகப் பழகி உறவு முறையாக சொல்லிக் கொள்ளலாம். படிக்கும் காலத்தில், உத்தியோகத்தில், திருமணமான பின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நட்பு என வெவ்வேறு வகைகளில் இருக்கும்.

வசிக்கும் இடம் மாறுபடும் பொழுது, சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு நண்பர்களை மாற்றிக் கொள்ளக்கூட வாய்ப்புண்டு. நெருங்கிய நண்பர்களை உடன் பிறந்தவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஒரு வகை. ஆனாலும் உறவுகள் என்றும் நிரந்தரம்.

வீடு நிறைய தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா, பெரியப்பா-சித்தப்பா, அத்தை-மாமா என்று உறவினர் கூடும்பொழுது நமக்குள் இனம்புரியா ஒரு மனத்தெம்பு ஏற்படுகிறது. கவலைகள் மறைந்து மனம் லேசாகிறது. வீடு நிறைய மனிதர் கூட்டம் இருக்கும் பொழுது அறியாதவர் யாரும் வீட்டிற்குள் நுழைந்து சிறிய துரும்பைக் கூட எடுத்துச்செல்ல முடியாது. உறவுகள் என்று சொல்லும் பொழுது நம் ரத்த பந்தம் மட்டும் கிடையாது. உறவுகளின் உறவுகள் கூட நமக்கு ஆதரவு தந்து தக்க சமயத்தில் உதவுவார்கள்.

ஒரு குடும்பத்தில் பையன், வேறு ஒரு மதப்பெண்ணை காதலித்தான். ஆனால் அவன் தாய்-தந்தை விருப்பமில்லாமல் திருமணம் நடைபெறக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தான். பெற்றோரிடம் விஷயத்தை சொல்ல, அவர்கள் பெண்ணிடம் பேசினார்கள். பையனின் திறமை அவளை ஈர்த்ததாகவும், மற்ற விஷயங்கள் இருவருக்கும் ஒத்துப்ேபாகும் எனவும் உறுதியோடு சொன்னாள். அப்பா, அம்மா என்றாலே பிள்ளைகள் மேல் உயிர்தானே.

உள் மனது சிறிது கஷ்டப்பட்டாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்தனர். நெருங்கிய உறவினர்களிடம் விஷயத்தை கூறிய போது, சிலர் பதில் எதுவும் சொல்லவில்லை. சிலர் ‘அப்படியா’ என்று மட்டும் கேட்டுக் கொண்டனர். சிலர் ‘இது சரியா வருமா?’ என குழப்பினர். மொத்தத்தில் முழு மனதுடன் யாருமே ஆதரிக்கவில்லை.

கல்யாண விஷயம் கூட சந்தோஷம் தராமல், பிறர் ‘என்ன சொல்வார்களோ’ என்ற பயத்தையே தந்தது அவர்களுக்கு. ஆனால், இரண்டாவது தலைமுறை உறவினர்கள் வீட்டிற்கும் சென்ற போது, அவர்கள் அப்பா, அம்மாவின் பெருந்தன்மையை பாராட்டினார்களாம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் நிலையை புரிந்துகொண்டு பெற்றோர் சம்மதித்திருப்பதால், தங்களின் முழு ஆதரவு இருப்பதாக கூறினார்கள். உறவினர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாவிடினும், விட்டுக் கொடுக்காமல் வந்து திருமணத்தை நடத்தித் தந்துள்ளார்கள். முதலில் சங்கடத்தில் ஆரம்பித்தாலும் அனைத்தும் சுபமாக முடிந்தது.

நம்மிடம் கோபிக்க உரிமை எடுத்துக் கொள்பவர்கள் நம் உறவினர்கள். இந்தப்புரிதல் நமக்கு ஏற்பட்டுவிட்டாலே போதும். நல்லதை அனைவரும் பாராட்டும் பொழுது எப்படி மகிழ்ச்சி கிடைக்கிறதோ, அதுபோல் ஒரு சில சமயங்களில் சிலர் மட்டும் குறையாக பேசுவது இயல்புதான். ஆனால் விட்டுக் கொடுக்காத உறவுமுறை உள்ள வரை அவர்கள் தொடர்பு நீடிக்கும் வரை பாச பந்தமும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

தம்பதிக்கு குழந்தைகள் பிறந்ததும், குறைகள் பேசுவதும் குறைந்தது. கவனங்கள் திசை மாறும் பொழுது குறைகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். நிறைய திருமணங்களில் அப்பா, அம்மா கூட தங்கள் பிள்ளைகளுடன் பேசாமல் இருந்திருக்கிறார்கள். நல்லபடியாக வாழ்ந்து வம்சம் தழைத்தவுடன் கோபங்கள் மாறி பாசத்துக்கு அடிமையாக்கப்படுகிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எத்தனையோ பேர் அதுபோல் தங்கள் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டிருக்கிேறாம். எப்படிப் பார்த்தாலும் உறவுகள் நம்மை விட்டுக் கொடுக்காமல் கட்டிக் காக்கிறார்கள். இத்தகைய பாடங்களை நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லி உணரவைக்க வேண்டும். வாழ்க்கையில் உள்ள உறவு முறைகளையும், பாச பந்த உணர்வுகளையும் நாம்தான் பிள்ளைகளுக்கு தினம் தினம் ஊட்டி வளர்க்க வேண்டும். தப்பை செய்து விட்டு மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அண்ணன், தம்பிகளுக்குள் பழி சொல்லி சண்டையிடுதல், அக்கா, தங்கையாக இருந்தால் துணி-மணிகளை மாற்றிப் போடுவது முதல் ரிப்பன் ‘பூ’ வரை சண்டை, அனைத்தும் மிகவும் ஆரோக்கியமாக செல்லமான சண்டைகளாக இருந்தன.

பெரியவர்கள் அவற்றைப் பார்த்து ரசிக்கவும் செய்தார்கள். இன்று வசதிகள் பெருகிவிட்டன. ‘கைப்பேசியில்’ ஆரம்பிக்கும் சண்டை சகோதரர்களுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தி பேசாமல் இருக்கக் கூடச் செய்கிறது. இதெல்லாம் ஒன்றுமில்லை. வாழ்க்கையின் அடித்தளமே ‘அன்புதான்’ என்பதை புரியவைத்து, கூடி வாழ்வதின் மகத்துவத்தை எடுத்துரைப்பது நம் கடமையாகும். கூட்டாக வாழ்ந்த நாம் இன்று எத்தனையோ சிரமங்களை எதிர் கொள்கிறோமென்றால், தனித்து வாழும் இன்றைய பிள்ளைகள் நாளை எவ்வளவு சிரமங்களை தாங்குவார்கள், இதை மட்டும் நினைத்து அவர்களுக்கான வாழ்வு முறை, உறவு முறை இவற்றை சொல்லித்தர வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்றிரண்டு பிள்ளைகள் ஏதாவது ஒரு நாட்டில் இருக்கிறார்கள். உத்தியோகம், படிப்பு அனைத்தும் நல்லவிதத்தில் அமைந்துவிட்டால், அங்கேயே வாழ்க்கையைத் தொடருகிறார்கள். திருமணம் வரை பெற்றோர் போய்ப் பார்த்து வருகிறார்கள். திருமணம் என்று வரும் போது, அவர்கள் இருக்கும் இடத்திலேயே பெண்ணோ, மாப்பிள்ளையோ அமைந்து விட்டால் எதிர்காலத்திற்கு நல்லது என யோசிக்கிறார்கள்.

பையனைப் பற்றியோ, பெண்ணைப் பற்றியோ, அவர்கள் குடும்பம் பற்றியோ உறவினர்கள்தான் விசாரித்துச் சொல்கிறார்கள். காரணம், அவர்கள் கூறும் ேபாது, நம்பிக்கை கிடைக்கிறது. எங்கு போய் என்ன செய்தாலும் கடைசியில் நம் உதவிக்கு உறவினர்தான் வருகிறார்கள்.எந்த ஒரு நல்லதும், கெட்டதும் உறவினர் இல்லாமல் நடைபெறுவதில்லை. நமது நம்பிக்கையின் கைகள் உறவுகள்தான்.