Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

பயண உறவுகள்!

குடும்பத்தில் தானே உறவுகள், பயணத்தில் எப்படி உறவுகள் ஏற்படும் என்று நினைக்கலாம். குடும்பத்தில் தலைமுறையினர் வளர வளர, உறவுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கொள்ளு தாத்தா-பாட்டி, தாத்தா-பாட்டி இவர்களுக்கு அடுத்து அப்பா-அம்மா. அவர்களின் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, திருமணம் முடிந்தால், மற்றொரு வீட்டிலிருந்தும் உறவுகள் கிடைக்கும். தலைமுறைகள் இப்படியே வளர்ந்து கொண்டிருக்கிறது. இருபது வயதுகளில் திருமணமானவர்கள் தங்கள் கொள்ளு தாத்தா, பாட்டியுடன் கொஞ்சி விளையாடிய காலங்கள் காணாமல் போய்விட்டன.

2000 ஆண்டையொட்டி, அதன் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டிகளின் அரவணைப்பு கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறுபிள்ளைகள், பயம் தெரியாதவர்கள், கள்ளம்-கபடம் இல்லாதவர்கள் என்ற காலம் மாறி மூன்று வயது எல்.கே.ஜி. குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. காரணம், அவர்கள் வளரும் சூழல். முக்கியமாக, பெரியவர்கள் இல்லாமல், தாய்-தந்தையுடன் வளரும் குழந்தைகள் இதனை சந்திக்கிறார்கள்.

கூட்டுக்குடும்பமாக இருக்கும் போது இந்த சூழலை குழந்தைகள் எளிதாக கடந்துவிடுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து பாசம் கிடைத்துக் கொண்டே இருக்கும், அதனால் சூழலுக்கு ஏற்ப புரிதலையும் தரும். இப்படிப்பட்ட உறவுகள் குடும்பங்கள் மூலம் கிடைக்கப்பெற்றாலும் வேற இடங்களுக்கு பயணம் செய்யும் போது நட்பாக தொடங்கி ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு உறவுகளாக மாறி இருப்பார்கள்.

நாம் வாழும் காலத்தில் காணப்படும் உறவினர்களைத்தான் நமக்குத் தெரியும். முன்பு மறைந்துவிட்ட உறவினர்களின் பரம்பரையிலிருந்து நம் வயதையொத்தவர்கள், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என யாரையாவது சந்திக்க நேரும் பொழுது, மகிழ்ச்சிக்கு அளவிருக்காது. கடல் கடந்து பயணிக்கும் போது அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் அதுதான் வாழ்நாள் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கெங்கோ உறவுகள் மறைந்தும், திடீரென தெரியவரும் பொழுது அத்தகைய உறவு மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கடல் கடந்தால் என்ன, உலகத்தை விட்டேப் போனாலும் சந்ததிகளில் யாராவது அங்கங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் அமெரிக்காவின் ‘கமலா ஹாரிஸ்’ எடுத்துக் கொள்ளுங்கள்.

இளம் வயதில் குடிபெயர்ந்தாலும் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் திருவாரூரில் இருக்கவில்லையா? அவர் அமெரிக்காவில் பதவிக்கு வந்ததும், நம் நாடே அதை நினைத்து பெருமைப்பட வில்லையா? பெருமை பேசவும், சிறப்புக்களை எடுத்துரைக்கவும் உறவினர்களால் மட்டுமே சாத்தியம். வெளியிலிருந்து பார்த்துப் பழகினால் மட்டும் ஒருவரின் குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியாது. கூட குடும்பத்தில் ஒன்றாகப்பழகி சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் பொழுது சில நற்சொற்களை பேசுவதன் மூலம், பிறருக்கு உதவிகள் புரிவதன் மூலம் உறவினர் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

நம் பெரியவர்கள் அந்தக் காலத்திலேயே உறவு முறைகளை வளர்ப்பதற்காகவே வாழ்க்கை முறையில் எத்தனையோ யுக்திகளைக் கையாண்டார்கள். குடும்பமாக உல்லாச யாத்திரை மேற்கொண்டார்கள். இடத்தைப் பொறுத்து, எடுத்துச் செல்ல வேண்டியப் பொருட்களை சேகரிப்பார்கள். பிள்ளைகளுக்கு தரக்கூடிய உணவினை வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்துச் செல்வார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, பகிர்ந்து உண்ணுதல், பெரியோர் சொல் கேட்டு மதித்து நடத்தல் என அனைத்து குணங்களும் நடைமுறை வாழ்க்கையில் பாசத்தோடு உணர்த்தப்பட்டது.

பக்கத்து ஊர் செல்வதனால் கூட மாட்டு வண்டிகளில் சாப்பாடு கட்டிக் கொண்டு செல்வது தான் பழக்கமாக இருந்தது. இத்தகைய பழக்க வழக்கங்கள் நம் மூதாதையருடன் முடிந்துவிட்டது. அடுத்த தலைமுறையினர் ஒன்றாகச் சேர்ந்து தாய்-தந்தையுடன் குல தெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டார்கள். வருடம் ஒருமுறை என்றாலும் குடும்பங்கள் கூடி மகிழ்ந்தன. பிள்ளைகள் பாசத்தைக் காட்டிக் கொண்டனர். பயணத்தாலும் உறவுகள் நெருக்கமாக காணப்பட்டது.

இப்போது எல்லோருமே தனிக்குடுத்தனத்தில் இறங்கிவிட்டதால் குடும்பங்கள் சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிட்டது. உறவுகள் வலுப்பெற கொண்டாடப்படும் பண்டிகைகள் கூட இன்று தனித்துக் கொண்டாட ஆரம்பித்து விட்டோம். அடுத்து வரும் தலைமுறைகளுக்கு நம்மைப் பற்றி மட்டும் தெரியுேம தவிர, நம் முன்ேனார்கள் பற்றி தெரியாமலேயே போய்விடும். அதை நம் அனுபவங்கள் மூலம் சொல்லிக் கொடுப்பது அவசியம். உறவும், நட்பும் இல்லாமல் இவ்வுலகில் யாருமே தனித்து வாழ முடியாது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ  நிவாசன்