Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

உறுதுணைபுரியும் உறவுகள்

இன்று நம் வீடுகளில் பெரியவர்கள் கிடையாது. எங்கோ ஒரு சில வீடுகளில்தான் பெரியவர்களை காண முடிகிறது. அவர்களும் சில காரிய காரணங்களுக்காக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதாலோ, சொந்த தொழில் நடத்துபவர்களாகவோ இருந்தால், இரண்டு, மூன்று பிள்ளைகள் இருக்குமிடத்தில் பெரியவர்கள்தான் அவர்களை பார்த்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு நேரத்திற்கு வேலைக்குச் செல்வது, பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் கல்வி பயிலச் செல்வது, அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது போன்ற பலவிதமான காரியங்களுக்கு ஆட்களை அமர்த்துவது என்பது இயலாத காரியம். வீடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைத்து செயல்களும் சுமுகமாக நடைபெற வேண்டுமானால், நம் பெரியவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். காலையில் ஏழு மணிக்கு வேலைக்குப் போகும் மருமகளுக்கு சாப்பாடு கட்டி அனுப்ப வேண்டும்.

எட்டு மணிக்கு பள்ளிக்குப் போகும் குழந்தைகளை தயார் செய்து, சாப்பாடு கொடுக்க வேண்டும். அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பத்து மணிக்கு கம்பெனி கிளம்பும் மகனுக்கு அனைத்தும் செய்து அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் இவர்கள் சாப்பிடுவார்கள். அடுத்து சமையற்கட்டில் அனைத்தையும் சரி செய்து முடித்து மதிய உணவு சாப்பிட்டு முடிக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் பள்ளி முடிந்து, அழைத்து வர வேண்டும். பிள்ளைகளுக்கு மாலை தின்பண்டம் ஏதாவது செய்து தரணும். இப்படியாக இரவு படுக்கும் வரை தினசரி காரியங்கள் இருக்கும். அதை கேட்கவே நமக்கு பொறுமை இருக்காது. வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் வீட்டில் இருப்பவர்கள்தான் வேலைக்கு செல்பவர்களை விட பிசியாக இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்குத்தான் எத்தனை வேலை?

இதுபோல் உறவுகள் அமைந்துவிட்டால் நமக்கு பாக்கியம்தான். உறவுகளும் அமையாமல், வாரிசுகளும் இல்லாவிடில் வாழ்க்கையை நம்மால் அனுபவிக்கவே முடியாது. வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவசியம் உறவுகள் முக்கியம். உறவினர்தான் அவர்களுக்கு வாரிசாகவும் அமைந்து விடுகிறார்கள். அந்த உறவினர்களின் ஒத்துழைப்புக்கு நாமும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது முக்கியம். ஊர்களில் ஒரு தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் அவர் தன் தங்கை மற்றும் மைத்துனர் பிள்ளைகள் மேல் பாசம் காட்டி வளர்ப்பார்கள். அவர்களுக்கு வாரிசு இல்லை என்றாலும், அவர்கள் வீட்டில் எப்போதும் குழந்தைகள் நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.

நல்ல விருந்தோ, எந்த ஒரு ‘ஸ்பெஷல்’ அயிட்டம் செய்தாலும் அவர்கள் வீட்டிற்குதான் பிள்ளைகள் சாப்பிட வருவார்கள். கணவன்- மனைவி இருவரும் தங்கள் இருவர்களுக்கு மட்டும் சமைத்ததே கிடையாது. ஒரு பக்கம் தங்கை குழந்தைகள், பெரியப்பா, பெரியம்மா என பாசம் காட்ட, மற்றொரு பக்கம் மைத்துனர் பிள்ளைகள் சித்தி, சித்தப்பா என்று பாசத்தைக் கொட்ட அவர்கள் தங்கள் குழந்தையில்லாக் குறையை மறந்தே விடுவார்கள். ஐந்து, ஆறு பிள்ளைகளில் யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் இவர்கள் வீட்டில்தான் கொண்டாடப்படும்.

இந்தக் குழந்தைகளுடன் நாத்தனாரின் பெண்ணும் சேர்ந்து விடுவாள். மாமா, மாமி என உறவு சொல்லி அன்பை பொழிவாள். காலங்கள் உருண்டோட, பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்குச் சென்றார்கள். பிள்ளைகளின் பெற்றோர் திருமண வரன்கள் பார்க்க, அனைத்தும் வளர்த்த அப்பா-அம்மா முன்னிலையில்தான் நடைபெற்றது. தங்களிடம் இருக்கும் சேமிப்பில் அனைவருக்கும் சமமாக செலவு செய்தனர். பிள்ளைகளும் இவர்கள் முதிர்ச்சி அடையும் பொழுது அரவணைத்துக் காப்பது அவர்களின் கடமை என்பதை ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டனர்.

திருமணமாகி தனித்தனியாக அவர்கள் சென்றுவிட்டாலும், அவ்வப்பொழுது ஒருவர் மாற்றி ஒருவர் வந்து வேண்டிய மருந்துகளையும், தேவைகளையும் கேட்டறிந்து பூர்த்தி செய்தார்கள்.

பிள்ளைகள் வெளியே சென்றாலும், அவர்களைப் பார்க்க உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஆதரவும், அன்புக் கரங்களும் அரவணைத்துக் கொண்டேயிருந்தன. வெளிநாடு செல்லும் உறவினர் யாராக இருந்தாலும் அங்கு வந்து தங்கி விட்டுதான் புறப்படுவார்கள்.

அவர்களுக்குத் தேவையான அப்பளம், பொடி வகைகள், ஊறுகாய்கள் என அனைத்தும் வருபவர்களுக்கு கொடுத்து அனுப்புவார்கள். பொதுவாக பிள்ளைகள் வளர்ந்தவுடன் அவர்கள் தாய், தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் நடத்தித் தருவது வழக்கம். ஆனால் இவர்களுக்கு, வளர்ந்த பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து பிரமாண்டமாக அறுபதாம் கல்யாணம் நடத்தினார்கள். அது மட்டுமில்லாமல் எழுபது வயதிற்கும் அவர்களை மேடையில் அமர வைத்து, சாஸ்திர, சம்பிரதாயங்களை செய்தார்கள்.

இன்றைய சூழலில் இதெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நம்மால் முடிவதில்லை. என்ன விதை விதைக்கிறோமோ, அதுதான் பலன் தரும் என்பார்கள். குழந்தைகளை அவர்கள் பெத்த பிள்ளை

களாக வளர்த்து பாசம் காட்டினார்கள். அவர்கள் இன்று வளர்ந்து பெத்த பிள்ளைகளுக்கு மேல் செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பங்களில் ஏதாவது ‘பிரச்னை’ ஏற்பட்டால் பிள்ளைகள் ‘வளர்ப்பு சரியில்லை’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனாலும் இது போன்ற உறவுகள் இருந்தால் கவலைதான் ஏது?

அதில் கணவருக்கு வேலை போய் சொத்துக்களை விற்கும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவன், தன் தாய்-தந்தை வீடு ஒன்று உள்ளதாகவும், அதிலேயே அவர்கள் இனி இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறி அவ்வீட்டுச் சாவியை அவர்களிடமே ஒப்படைத்தான். இத்தகைய உதவிகள் கேட்காமலேயே கிடைக்கப்பட்டது. பல இடங்களில் பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை சரிவர கவனிப்பதில்லை என கேள்விப்படுகிறோம்.

அப்படியிருக்கையில் பெறாத பிள்ளைகள் அவர்களைத் தாங்குகிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு அமைந்த கணவன்மார்களும், மனைவிமார்களும் கூட ஒத்துழைத்திருக்கிறார்கள். இவர்கள் பெருமையாக “உங்களுக்கெல்லாம் 2-3 குழந்தைகள். எங்களுக்கு 5-6 பேர்...” இது போன்று உறுதுணை புரியும் உறவுகள் அமைந்தால், நாம் வாழ்க்கையை இன்பமாகவே அனுபவிக்கலாம்.

உறவுகளே இல்லாமல் யாருமே தனியாக வாழ்வதில்லை. காலப்போக்கில் நம் உறவுகள் காணாமல் போயிருக்கும் சமயம் இது. தூரத்து உறவினர்களை அக்கா-அண்ணன் உறவு சொல்லி அழைப்போம். கோடை விடுமுறையில் அவர்கள் டவுனுக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் போது உறவுகளுக்கும் வாங்கித் தருவார்கள். என்ன ஒரு அற்புத உறவு!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்