Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

NEETக்கு நோ Age Limit...

நன்றி குங்குமம் தோழி

மகள் சொல்லித்தர நீட் தேர்வில் ஜெயித்த அம்மா! தாயின் கனவை நிறைவேற்றிய மகள்!

அம்மா-பொண்ணு காம்போன்னா உடைக்கு மாடலா வருவாங்க... இல்ல நடனத்துக்கு மாடலா வருவாங்க. இதென்ன புதுசா இருக்கு..? இந்த அம்மா-பொண்ணு காம்போ நீட் தேர்வுல பாஸாயிட்டாங்களா? அதுவும் அம்மாக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடச்சுருச்சா..? எப்படி இதெல்லாம்..? ஆயிரம் கேள்விகள் மண்டைய குடைய... அம்மா அமுதவல்லி, மகள் சம்யுக்தா கிருபாளினி இருவரைத் தேடிப் பிடித்ததில்... விரிவாக... விளக்கமாக பேச ஆரம்பித்தார் அமுதவல்லி.

‘‘எலிஜிபிளிட்டி கிரைட்டீரியாவில் நீட் தேர்வுக்கு ஏஜ் லிமிட் கிடையாது. 75, 80 வயதினரும் எழுதலாம். எனக்கு இப்ப வயது 49. நான் எனது கல்லூரி படிப்பை முடித்தே 30 வருடம் கடந்தாச்சு. 1994ல் +2 முடித்தேன். அப்பவெல்லாம் +2 மதிப்பெண், தமிழ்நாடு மெடிக்கல் என்ட்ரென்ஸ் மதிப்பெண் இரண்டை மட்டுமே பார்ப்பார்கள். நான் மெரிட் ஸ்டூடென்ட் என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்கல. பாராமெடிக்கல் படிப்பான பிசியோதெரபியை தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்து முடித்து, பிறகு பிசியோதெரபிஸ்டாக பயிற்சி, திருமணம், கணவர், குழந்தை, சொந்தமாக கிளினிக் என வாழ்க்கை திசை மாறினாலும், நிராசையான எம்.பி.பி.எஸ் கனவு உள்ளே கனன்று கொண்டே இருந்தது.

+2 முடித்த என் மகள் நீட் தேர்வை எழுதத் தயாரான நிலையில், என் மெடிக்கல் கனவு மீண்டும் விழித்துக்கொள்ள, மகளோடு சேர்ந்து நீட் தேர்வுக்கு முயற்சிப்போமே என யோசிக்கத் தொடங்கினேன். என் எம்.பி.பி.எஸ் கனவையும், நுழைவுத் தேர்வெழுத என் அம்மா என்னை அழைத்து சென்ற பழைய நினைவுகளையும் என் மகளிடத்தில் அடிக்கடி சொல்லி எனது ஆசை நிராசை ஆனதையும் பகிர்ந்திருக்கிறேன். ஆனால், நீட் குறித்த விழிப்புணர்வு இன்மையால், நம்மால் எழுத முடியாது என்கிற எண்ணம் ஆக்கிரமித்தது.

நீட் தேர்வுக்கு மகள் சம்யுக்தா செலுத்தும் கடின முயற்சிகளை அருகில் இருந்தே பார்த்த நிலையில், நீட் பாடங்களை நானும் புரட்டிப் பார்க்கத் தொடங்கியதில், நாமும்தான் எழுதிப் பார்ப்போமே என்ற எண்ணம் எழ ஆரம்பித்தது. என் மகளிடம் பேசியதில்... ‘சரி, நீங்க ஒரு பாடத்தை படிங்க... நான் ஒரு பாடத்தை படிக்கிறேன். மாற்றி மாற்றி படிப்போம்’ என என்னோடு கைகோர்த்தாள். காரணம், பாடங்களை வாய்விட்டு சொல்லிச் சொல்லி படிப்பது அவள் ஸ்டைல் என்பதால், இதனை அவளுக்கானதாகவும் அடாப்ட் செய்து கொண்டாள்.

நான் படித்ததோ ஸ்டேட் போர்டு தமிழ் மீடியம் சிலபஸ். நீட் தேர்வு இருப்பதோ சிபிஎஸ்சி சிலபஸ் அடிப்படையில். எனக்கு இதுவொரு கடினமான முயற்சிதான். 30 வருடத்திற்குப் பிறகு மீண்டும் படிப்பை கையிலெடுத்து, மகளின் ஸ்டெடி மெட்டீரியலை படிக்கத் தொடங்கியதில், ஆரம்பத்தில் எதுவுமே புரியல. இந்த நிலையில்தான், ‘படிக்கிறத இப்படி ஆழமாகப் புரிஞ்சு படிங்க’ என டிப்ஸ்கள் பலவற்றை அள்ளிக் கொடுக்கத் தொடங்கினாள் என் மகள். ஆனாலும், கடினமான முயற்சியை கையில் எடுத்திருக்கிறேன் என்ற எண்ணம் தேர்வை எழுதும் வரை இருந்தது.

நான் நீட் தேர்வெழுதியது அருப்புக்கோட்டை பள்ளி. என் மகள் எழுதியது விருதுநகர் பள்ளி. ‘கேள்வி புரிந்து விடை தெரிந்தால் மட்டும் எழுதுங்க. தெரியலனா ஸ்கிப் பண்ணுங்க’ என டிப்ஸ் கொடுத்திருந்தாள். ‘தவறான பதிலுக்கு மார்க் மைனஸ் ஆகும்’ என அவள் சொன்னது நினைவிருந்தது. ஒவ்வொரு வினாவையும் படித்து புரிந்துகொள்ளவே இரண்டு நிமிடம் எடுத்தது. சரியான பதிலை தேர்ந்தெடுக்க இரண்டு நிமிடமென, கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தேர்வை முடிப்பது சவாலான விஷயமே.

நீட் தேர்வில் என் மதிப்பெண் 147. முதல் முயற்சியிலே தேர்வாகிவிட்டேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிதான். அத்துடன், நான் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. முதல் கட்டமாக ஜூலை 30ல் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் (PWD) பங்கேற்று, விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. மறுநாளே விருதுநகர் சென்று இடத்தை உறுதிப்படுத்தினேன்.

மகள் சம்யுக்தா நீட்டில் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த முறை இட ஒதுக்கீட்டிற்கான அதிகபட்ச மதிப்பெண் 441 என்பதால், சம்யுக்தாவுக்கு கூடுதலாக பத்து மதிப்பெண்கள் இருக்கிறது. அவருக்கும் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அவருக்கான கல்லூரி எது என்பதையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.இனி வரவிருக்கும் ஐந்தாண்டுகளும் நான் ஒரு மருத்துவக் கல்லூரியிலும், மகள் ஒரு மருத்துவக் கல்லூரியிலுமாக எம்பிபிஎஸ் படிக்கப் போகிறோம்.

விருதுநகர் மருத்துவக் கல்லூரி மாணவியாக, இந்த தலைமுறை Gen Z கிட்ஸ்களுடன் இணைந்து என் மருத்துவப் படிப்பு இருக்கப் போகிறது...’’ புன்னகைக்கிறார் அமுதவல்லி.‘‘50 வயதில் மருத்துவக் கல்லூரிக்குள் படிக்க நுழைவது நானாகத்தான் இருப்பேன். இந்த வயதுக்கு மேல் கல்லூரிக்குப் போவது... கல்லூரி மாணவியாக ஐந்தாண்டுகள் வலம்வரப் போவது... இந்தத் தலைமுறையோடு இணைந்து படிப்பது... இதற்கெல்லாம் என்னைத் தயார்படுத்துவது என, எனக்கும் இந்த அனுபவம் புதுசுதான். அலாட்மென்ட் கடிதத்தை ஹெல்த் மினிஸ்டர் என்னிடம் வழங்கும்போது, ‘இந்த வயதில் மருத்துவக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை பெற்றதில் நீங்கள்தான் முன்னோடி’ என்று குறிப்பிட்டார். விருதுநகர் மருத்துவக் கல்லூரி டீனும் என் முயற்சியை வியந்து பாராட்டினார்.

படிப்பை பொறுத்தவரை, ஏற்கனவே நான் பிசியோதெரபி முடித்திருப்பதால், முதல் இரண்டு ஆண்டுகளுக்கான அனட்டாமி, பிசியாலஜி என, 50 சதவிகிதம் பாடத்தையும் படித்து தாண்டியிருக்கிறேன். இனி நான் தெரிந்துகொள்ள இருப்பது மீதமுள்ள, மருத்துவம் சார்ந்த 50 சதவிகித பாடத்தை மட்டுமே. எனவே, சுலபமாக மருத்துவப் படிப்பை என்னால் அடாப்ட் செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படிப்பை நான் முடிக்கும் போது வயது 55 கடந்திருக்கும். நான் நடத்தி வருகிற பிசியோதெரபி கிளினிக்குடன், எம்.பி.பி.எஸ் ஜென்ரெல் மெடிசன் துறைக்குள் கால் பதிக்க நினைக்கிறேன். இனி நான் டாக்டர் அமுதவல்லி என்கிற அடைமொழிக்கு மாறிவிடுவேன். இது என் 30 ஆண்டு கனவு.

சி.பி.எஸ்.ஸி. சிலபஸ் அடிப்படையிலான நீட் தேர்வுக்கு ஸ்டேட்போர்ட் சிலபஸில் படித்த நம்மைப் போன்றவர்கள் முயற்சிப்பதில் வேறுபாடுகளை நிறையவே உணர முடிந்தது. என் மகள் எனக்கு சொல்லிக் கொடுக்கத் தொடங்கியபோது, ‘பாடத்தின் அடி ஆழம் வரை புரிந்து, ஆழ்ந்து படிக்கணும்மா. கூடவே வில் பவர் இருக்கணும். முடியலையா விட்டுறுங்க’ என்றாள். நீட் தேர்வுக்கு நான் தயாரான இந்த 6 மாதத்தில், அவள் எனக்கு ஆசிரியராகவும்... நான் அவளின் மாணவியாகவும் மாறிப்போனோம்.

என் மகளின் வழிநடத்தலோடு இந்தக் கிணறை எப்படியாவது தாண்ட முடிவு செய்தேன். இரவு 2 வரை அவள் கண் விழித்துப் படிக்கும் போது, நானும் அவளோடு இணைந்து படிப்பேன். எனக்கு பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி கடினமாகவும், பயாலஜி சுலபமாகவும் இருந்தது. பயாலஜியில் எதைப் படிக்கணும், எப்படி படிக்கணும் என்கிற தெளிவைக் கொடுத்தது என் மகள்தான். ஏற்கனவே பிசியோதெரபி ஃபீல்டில் நான் இருப்பதால், அதன் அடிப்படையிலும் படிச்சு தேர்வாயிட்டேன்னு சொல்லலாம்.

நீட் தேர்வை எல்லோரும் கஷ்டம் என்றதால் நானும் அதைப் பார்த்து பயந்தேன். என் மகள் நீட் தேர்வுக்குள் வரவில்லையெனில் நானும் பயந்து ஒதுங்கியிருப்பேன். பயந்து பார்க்கும் அளவுக்கு

நீட் கடினமானது கிடையாது. அதற்காக நீட் தேர்வு சுலபம்னு நான் சொல்லல. நீட் தேர்வு குறித்த சரியான பார்வையை மாணவர்களுக்கு நாம கொடுக்கல என்றுதான் சொல்வேன்.

நீட்டைப் பார்த்து மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை. மனப்பாடம் செய்து படிப்பதை மாணவர்கள் தவிர்த்து, மருத்துவ நுழைவுத்திட்ட பாடங்களின் அடிப்படையை புரிந்து, ஆழ்ந்து படித்தால் வெல்வது சுலபம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

ராஜா சிதம்பரம்

சப்ஜெக்ட் அறிவு சார்ந்தது நீட் தேர்வு!

- ராஜராஜன், கல்வி ஆலோசகர்.

‘‘நீட் தேர்வு எழுத வயது தடையில்லை. பிசியோதெரபி படித்து முடித்து அதற்கான கிளினிக் நடத்தி வரும் ஒரு நபர், மருத்துவ கல்விக்கான இடத்தை முயற்சித்துப் பெற்றது மகிழ்ச்சியான செய்தி. ஆர்வமாக படித்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவரை நாம் வாழ்த்த வேண்டும்.பிசியோதெரபி என்பதே ஜுவாலஜிதான். ஏற்கனவே அவர் ஹுயூமன் அனட்டாமி படித்திருப்பார். நோயாளிகளையும் சந்தித்தவர். அவர் பணியும் ஹுயூமன் பிஸியாலஜிதான். நீட் தேர்வில் பாட்டனி ஜுவாலஜி இணைந்து 90 கேள்விகள் இருக்கும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்.

90 கேள்விகளை 4 ஆல் பெருக்கினால் 360 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த மதிப்பெண் அவரின் படிப்பு மற்றும் பணி சார்ந்து இருப்பதால் அவருக்கு சாதகமாக அமைந்திருக்கும். இனி அவரின் பிசியோதெரபி கிளினிக் பொது மருத்துவமாகவும் மாறலாம். சிறப்பாக மருத்துவப் பணியாற்றுவார். மாணவர்களுக்கு நாம் இதில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில், நீட் தேர்வு என்பது சப்ஜெக்ட் அறிவு சார்ந்தது. சப்ஜெக்ட் நாலேஜ் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாய் நீட் தேர்வு எழுதலாம். மனப்பாடம் செய்து குறுட்டுத்தனமாக படிப்பது நீட்டிற்கு ஒருநாளும் உதவாது.’’