நன்றி குங்குமம் தோழி
டிரைவர் அம்மா
கேரளாவைச் சேர்ந்த மணியம்மாவைப் பற்றி பலருக்கும் தெரியும். கார், டிரக், கிரேன் என்று 11 விதமான வாகனங்களை இயக்குகின்ற உரிமத்தை வைத்திருக்கும் ஒரே பெண் இவராகத்தான் இருக்க முடியும். இவரை எல்லோரும் ‘டிரைவர் அம்மா’ என்று அழைக்கின்றனர். மட்டுமல்ல, கேரளாவில் டிரைவிங் ஸ்கூலை வேறு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் துபாய் சாலைகளில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை மணியம்மா ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியர் ஒருவர் துபாயில் வாகனம் ஓட்ட வேண்டுமென்றால் சர்வதேச வாகன ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும். இந்த உரிமத்தைப் பெறுவது சுலபமல்ல. மணியம்மாவுக்கு சர்வதேச உரிமம் கிடைத்திருப்பதுதான் இதில் ஹைலைட். இப்போது அவரது வயது 72. சர்வதேச வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அதிக வயதானவரும் இவரே.
சிறந்த நகரங்கள்
சமீபத்தில் ஜென் இஸட் தலைமுறையைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேலானவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், ‘‘உலகில் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் எது..?’’ என்ற கேள்வி அவர்களிடம் வைக்கப்பட்டது. ஜென் இஸட் தலைமுறையினர் தாங்கள் விரும்பும் 10 சிறந்த நகரங்களைத் தேர்வு செய்திருக்கின்றனர். இந்தப் பத்து நகரங்களில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுபோக மெல்போர்ன், நியூயார்க், கேப்டவுன், லண்டன் ஆகிய உலகின் முக்கிய நகரங்களும் ஜென் இஸட் தலைமுறையினரின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை
உலகிலேயே அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூபர், மிஸ்டர் பீஸ்ட். அனைவருக்கும் நல்ல குடிநீர் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, ஒரு குழுவினருடன் சேர்ந்து லைவ் நிகழ்ச்சியை நடத்தினார் பீஸ்ட். பார்வையாளர்கள் நல்ல குடிநீருக்காக நன்கொடை வழங்கலாம். இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் 100 கோடி ரூபாயைத் திரட்டிவிட்டார் பீஸ்ட். ஒரு நிகழ்ச்சி மூலம் அதிக தொகையை நன்கொடையாக திரட்டியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துவிட்டார்.
உலகைச் சுற்ற வயது தடையில்லை
கேரளாவைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்மணி தனியாகவே 35 நாடுகளுக்குப் பயணம் செய்து அசத்தியிருக்கிறார். அதுவும் 70 வயதில். ஆம்; தனது 60 வயதில்தான் முதல் பயணத்தைத் தனியாக மேற்கொண்டார். கடந்த 2010-ம் வருடம் இந்திராவின் கணவர் மரணமடைந்துவிட்டார். அதற்குப் பிறகு ஒருவித தனிமையில் அகப்பட்டுவிட்டார் இந்திரா. சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஏதோவொரு வெறுமை இந்திராவை வாட்டியது. தன் வயதுக்கு நிகரான வயதுடைய முதியவர்களை அடிக்கடி சந்தித்தார். அந்த முதியவர்கள் மத்தியில் ஒரு குழு உண்டானது.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து பயணம் போக திட்டமிட்டனர். அந்தக் குழுவில் ஒருவர் இந்திராவையும் தங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய அழைத்தார். இதுதான் இந்திராவின் ஆரம்பம். இந்தப் பயணம் அவருக்கு நம்பிக்கையை கொடுக்கவே, தனியாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார். இதுவரை 35 நாடுகளைச் சுற்றிப்பார்த்துவிட்டார். இப்போது அடுத்த பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
செல்ஃபி மரணத்தில் முதலிடம்!
செல்ஃபி எடுக்கும்போது மலையிலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார்; தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார் என்று செல்ஃபி மரணங்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இப்படி செல்ஃபி எடுக்கும்போது நிகழும் 100 மரணங்களில் 40 மரணங்கள் இந்தியாவில்தான் நிகழ்கிறது என அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு. காரணம், இந்தியாவில் பெரும்பாலும் செல்ஃபி எடுக்கும் இடங்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன; அதே நேரத்தில் ஆபத்தானவை என்றும் சொல்கின்றனர்.
தொகுப்பு: த.சக்திவேல்