Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்- டாப் 10 நகரங்கள்

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் உலகின் தலைசிறந்த 100 நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது, ‘ரிசோனன்ஸ்’ எனும் நிறுவனம். இப்பட்டியலில் தொடர்ந்து 11வது முறையாக முதலிடத்தைப் பிடித்திருக்கிறது, லண்டன். வாழ்க்கைத் தரம், மக்களின் விருப்பம், செழிப்பான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை தேர்வு செய்திருக்கின்றனர். செழிப்பான தன்மையில் முதலிடத்தையும், வாழ்க்கைத் தரத்தில் மூன்றாம் இடத்திலும், மக்கள் விருப்பத்தில் இரண்டாம் இடத்தையும் லண்டன் பிடித்திருக்கிறது. ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் முதலிடம்.

தலைசிறந்த இரண்டாவது நகரம் என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறது நியூயார்க். செழிப்பிலும், வாழ்க்கைத் தரத்திலும் இரண்டாம் இடத்தையும், மக்களின் விருப்பத்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது, நியூயார்க். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் ஓர் இடம் முன்னேறியிருக்கிறது நியூயார்க். பாரீஸ், மாட்ரிட், சிங்கப்பூர், ரோம், துபாய், பெர்லின், பார்சிலோனா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

விலையுயர்ந்த வீதி

சமீபத்தில் உலகின் விலையுயர்ந்த டாப் 10 வீதிகளின் பட்டியல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீதிகளில் எல்லாம் உலகின் முன்னணி பிராண்டுகளின் கடைகள் அலங்கரிக்கின்றன. வாடகை அடிப்படையில் இந்த வீதிகளை பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் லண்டனில் உள்ள நியூ பாண்ட் ஸ்ட்ரீட் முதல் இடத்தில் உள்ளது. இங்கே ஒரு சதுர அடிக்கு வருட வாடகையாக 2 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது, 100 சதுர அடியில் சிறிய கடையை வைத்திருந்தாலுமே கூட, வருட வாடகை 2 கோடி ரூபாய் வந்துவிடும்.

ஆனால், இங்கே சிறிய கடைகளே 10000 சதுர அடியில் இருக்கும். ‘லூயி விட்டோன்’, ‘ரால்ஃப் லாரன்’, ‘பலேன்சியாகா’, ‘சேனல்’ போன்ற டாப் பிராண்டுகளின் கடைகளும் இந்த வீதியில் இருக்கின்றன. லண்டனுக்குச் செல்லும் பிரபலங்கள் எல்லாம் முதலில் செல்லக்கூடிய இடமே இந்த வீதிதான். அதனால் முக்கிய சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது இந்த விலையுயர்ந்த வீதி.

முதல் இந்தியப் படம்

சமீபத்தில் இந்தியாவின் மெகா இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘வாரணாசி’ படத்தைப் பற்றிய அறிவிப்புதான் திரையுலகில் ஹாட் டாக். காரணம், ஐமேக்ஸின் ஒரிஜினல் ஃபார்மேட்டில் வெளியாகப் போகும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான். இதற்கு முன்பு நிறைய இந்தியப் படங்கள் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும், அவை எதுவும் ஒரிஜினல் ஃபார்மேட்டில் வெளியாகவில்லை. அந்தப் படங்கள் எல்லாம் டிஜிட்டல் ஐமேக்ஸுக்கு மாற்றப்பட்டு வெளியாகின. அவை நேரடியாக ஐமேக்ஸ் திரையரங்குகளுக்காகவும் படமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வாதிகாரி

பாகிஸ்தானின் வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவ அதிகாரி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார், ஃபீல்டு மார்ஷல் அசீம் முனீர். சமீபத்தில் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், அந்நாட்டின் உச்சபட்ச அதிகாரங்கள் எல்லாம் அசீமிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமர், ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியை விட அதிக அதிகாரங்களுடன் அசீம் இருப்பார்.

மட்டுமல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் முப்படைகளின் தலைமை தளபதியாக அசீம் பொறுப்பு வகிப்பதோடு, கட்டளையிடும் அதிகாரமும் அவருக்கே உரியது. இனிமேல் உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே கையாளும். அதாவது, பாகிஸ்தானின் புதிய சர்வாதிகாரியாக பொறுப்பேற்கிறார் அசீம். அவருக்கு இவ்வளவு அதிகாரங்கள் அளிக்கப்பட்டதை, ‘ஜனநாயகத்துக்கு இறுதிச்சடங்கு’ என்று அரசியல் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.

72 வயது மலையேற்ற வீராங்கனை

ஒவ்வொரு மலையேற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் கனவுகளில் ஒன்று, கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏறுவது. டான்சானியா நாட்டில் அமைந்திருக்கும் இந்த மலையின் உயரம், 5,895 மீட்டர். ஆப்பிரிக்காவிலேயே உயரமான மலை இதுதான். இந்த மலையில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் வித்யா சிங். அவரது வயது 72. கிளிமஞ்சாரோவில் ஏறிய அதிக வயதுடைய இந்தியப் பெண்ணும் இவர்தான்.

தொகுப்பு: த.சக்திவேல்