Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நியூஸ் பைட்ஸ் - காதல் பாடம்

நன்றி குங்குமம் தோழி

டெல்லி பல்கலைக்கழகம் புதிதாக காதல் பாடம் குறித்த கோர்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிளஸ் 2 முடித்து, இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இதில் சேர முடியும். எப்படி நட்பு, காதல் போன்ற நெருங்கிய உறவுகள் உருவாகின்றன?, ஆரோக்கியமற்ற உறவுக்கான அறிகுறிகள் என்ன? போன்றவற்றை இதில் கற்றுக்கொள்ள முடியும். ‘கபீர் சிங்’, ‘டைட்டானிக்’ போன்ற காதல் படங்கள் குறித்து மாணவர்கள் விமர்சிக்க வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் நவீன உறவு முறைகள் பல சிக்கல்களுக்கு உட்பட்டுக் கிடப்பதாலும், உறவுகளின் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாலும் இந்த காதல் பாடம் அவசியமாகிறது என்கின்றனர். அர்த்தமுள்ள, நிலையான ஒரு உறவை எப்படி கட்டமைப்பது என்று மாணவர்கள் இந்த கோர்ஸ் மூலம் கற்றுக்கொள்ள முடியும் என்று உறுதியளிக்கின்றனர்.

பிஸ்கெட் பாக்கெட்டின் விலை ரூ.2,347

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு பிஸ்கெட், ‘பார்லேஜி’. ஐந்து ரூபாய்க்குக் கூட ஒரு பாக்கெட் கிடைக்கும். ஆனால், காஸா நகரில் 12 சிறிய பாக்கெட்டுகள் அடங்கிய பார்லே-ஜி பிஸ்கெட் பண்டலின் விலை 2,347 ரூபாய். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காஸா நகரில் உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பல மடங்கு விலை அதிகம். காஸாவைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகளுக்கு பார்லே -ஜி பிஸ்கெட் பிடிக்கும் என்று, 2,347 ரூபாய் கொடுத்து வாங்கித் தந்திருக்கிறார். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குகை மனிதன்

சீனாவைச் சேர்ந்த மின் ஹேங்சாய் என்ற மனிதனைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். திருமணமும், வேலை பார்ப்பதும் வாழ்க்கையை வீணடிக்காது என்று ஒரு குகையில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார் மின். நான்கு வருடங்களுக்கு முன்பு தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டார். குடும்பச் சொத்திலிருந்து ஒரு தொகை அவருக்கு கிடைத்திருக்கிறது. வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, நான்கு வருடங்களுக்கு முன்பு தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு குகையில் வாழத் தொடங்கினார். குகைக்கு முன்பு இருந்த இடத்தில் விவசாயம் செய்து, தனக்குத் தேவையான உணவையும் அவரே தயார் செய்து கொண்டார். குகை வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார் மின். இப்போது அவரை 40 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

டாப் காலை உணவுகள்

சமீபத்தில் உலகின் சிறந்த காலை உணவுகளின் பட்டியலை ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற தளம் வெளியிட்டது. இதில் இந்தியாவின் சிறப்புமிக்க காலை உணவான சோலா பூரி, மகாராஷ்டிராவின் மிஸல், பராத்தாவும் இடம் பிடித்துள்ளது. கவால்ட்டி, கோம்ப்லெட் லெபிஞ்சா, கொரைசைன்ட், ஜெயின்பிங்க், ரொட்டி கனாய், ஜெல்னிக் போன்ற புகழ்பெற்ற வெளிநாட்டு காலை உணவுகளும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

வைரல் வீடியோ

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியாகி, 28 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது இந்த வீடியோ. ஓர் இளம் பெண் ‘ஓலா’ பைக் புக் செய்கிறார். அந்தப் பெண் இருக்கும் இடத்துக்கு பைக் வருகிறது. டிரைவர் ஓடிபியை இடுகிறார். அடுத்த தெருவுக்கு, அதாவது, 180 மீட்டர் தொலைவுக்கு அந்தப் பெண் செல்ல வேண்டும். நடந்து சென்றாலே இரண்டு நிமிடத்தில் சென்றுவிடலாம்.

ஆனாலும், அவர் ஓலா பைக்கில் செல்கிறார். காரணம், அவர் செல்லும் வழியில் தெரு நாய்கள் இருக்கின்றன. நாய்க்கடிக்குப் பயந்து 180 மீட்டர் செல்ல பைக் புக் பண்ணியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை அப்படியே வீடியோவாக்கியிருக்கின்றனர். தினந்தோறும் நாய்க்கடி சம்பந்தமான செய்திகள் வருவதால் இந்த நிகழ்வு பேசுபொருளாகிவிட்டது.

தொகுப்பு: த.சக்திவேல்