Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கின்னஸ் சாதனை

ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்தவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார், சக்காரியா ஸ்வோப். அமெரிக்காவைச் சேர்ந்த சக்காரியா, 2022-ம் வருடம் முதல் 2023-ம் வருடம் வரையிலான 365 நாட்களில், திரையரங்குக்குச் சென்று 777 திரைப்படங்களை பார்த்திருக்கிறார். இதற்கு முன்பு பிரான்ஸை சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் ஒரு வருடத்தில் 715 படங்களைப் பார்த்திருந்ததே சாதனையாக இருந்தது. இன்னமும் யாரும் சக்காரியாவின் சாதனையை முறியடிக்கவில்லை.

மனிதர்களின் வேலையை பறிக்கும் AI

இன்னும் ஐந்து வருடங்களில் அதாவது, 2030க்குள் கம்ப்யூட்டர் உட்பட முக்கியமான தொழில்துறைகளில் பணியாற்றுபவர்களில் 99% வேலையை செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ பறித்துவிடும் என்ற அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றனர். இதுபோக 2027-ல் ஏஜிஐ எனும் ஆர்ட்டிபீசியல் ஜெனரல் இண்டலிஜென்ஸ் எனும் தொழில்நுட்பமும் பரவலாக வந்துவிடும். இதுவும் மனிதர்களின் பல வேலைகளை பறித்துவிடும். ‘‘மனிதர்களின் உடல் உழைப்பின்றி செய்யப்படும் அனைத்து வேலைகளையும் ஏஐ வசம் போய்விடும்’’ என்று எச்சரிக்கிறார் ஏஐயின் காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் ஜெப்ரி ஹின்டன்.

ஓட்டப்பந்தய வீராங்கனை

உலகப்புகழ் பெற்ற ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் கூட 31 வயதிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், இத்தாலியைச் சேர்ந்த எம்மா மரியா மசேங்காவோ, 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூட ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு, பல சாதனைகளை படைத்து வருகிறார். இப்போது எம்மாவுக்கு வயது 92.

கடந்த 2024-ம் வருடம், 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. சர்வதேச அளவில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 51.47 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனைப் படைத்தார் எம்மா. இன்று அடுத்த மாதம் நடைபெறும் போட்டிக்காக தயாராகி வருகிறார். தனது உடல் ஆரோக்கியத்துக்காக உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார் எம்மா. பாஸ்தா அல்லது அரிசி சோறுடன் சேர்ந்த அவிச்ச முட்டை, மீன், மாட்டுக்கறிதான் அவருடைய முக்கியமான உணவு.

புத்தக சொர்க்கம்

உலகம் முழுவதும் சுமார் 28 லட்சம் நூலகங்கள் இருக்கின்றன. இதில் பள்ளிகளில் மட்டுமே 22 லட்ச நூலகங்கள் உள்ளன. பொது நூலகங்களின் எண்ணிக்கை, 4.10 லட்சம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை, 85,623. இவற்றிலிருந்து முற்றிலும் வேறான தனித்துவமான ஒன்று, அங்கே கவுடா என்பவர் உருவாக்கிய நூலகம். கர்நாடகாவில் உள்ள இந்த நூலகத்தை புத்தக சொர்க்கம் என்று சொல்வதே சரியாக இருக்கும். இந்த நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

விருப்பப்பட்ட புத்தகங்களை எடுத்து நூலகத்திலேயே வாசிக்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது. நூலகத்தில் இருக்கும் 20 லட்சம் புத்தகங்களில், 5 லட்சம் புத்தகங்கள் வெளிநாட்டைச் சேர்ந்த அரிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக பல்வேறு மொழிகளில் 5 ஆயிரம் டிக் ஷனரிகள் இருக்கின்றன. இவையெல்லாம் அங்கே கவுடாவின் நூலகத்தைத் தனித்துவமாக

மாற்றுகிறது. இப்போது அவரது வயது 75.

கணவர்களுக்கான பள்ளி

செனகல் நாட்டின் பெண்கள், குடும்பம், பாலினம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகமும், ஐநா சபையும் இணைந்து, கடந்த 2011ம் வருடம் செனகலில் கணவர்களுக்கான பள்ளியை உருவாக்கியுள்ளது. செனகல் நாட்டில் காலம் காலமாக ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சாரத்தின் மீதான பார்வையை மாற்றியமைப்பதும், குடும்பத்தில் ஆண்களுக்கான பொறுப்பை அதிகரிப்பதும் இந்தப் பள்ளியின் முதன்மையான நோக்கம்.

அதாவது, மனைவி மட்டுமே செய்து வந்த வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதையும், எல்லா வகையிலும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதையும், குடும்ப உறவை ஆரோக்கியமானதாக மாற்றுவதையும், குடும்ப வன்முறையை தவிர்ப்பதையும் இந்தப் பள்ளி கற்றுக்கொடுக்கிறது. இந்தப் பள்ளியின் வருகைக்குப் பிறகு செனகலில் பெண்களின் மீதான வன்முறைகள் குறைந்திருப்பதாகச் சொல்கின்றனர்.

தொகுப்பு:த.சக்திவேல்