Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நியூஸ் பைட்ஸ்- சாக்குப்பை கோட்

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு ஃபேஷன் ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கோட் தான் சமூக வலைத்தளங்களில் செம வைரல். அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இந்த கோட்டை பாஸ்மதி அரிசியைப் போட்டு வைக்கும் சாக்குப்பையில் தைத்திருக்கின்றனர். ஆம்; நாம் மழை ஈரத்தை உறிஞ்ச வாசற்படியில் போட்டு வைத்திருக்கும் அதே சாக்குப்பையில்தான் இந்த கோட்டை வடிவமைத்திருக்கின்றனர். இதன் விலை 1.6 லட்ச ரூபாய் என்பதுதான் இந்த கோட் வைரலாக முக்கிய காரணம்.

ஃபார்முலா 2 சாம்பியன்

உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு கார் பந்தயம், ஃபார்முலா 2. இந்தப் போட்டியில் காலம் காலமாக ஐரோப்பியர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மொனோக்காவில் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஸ்பிரின்ட் பிரிவில் போட்டியிட்டு, சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் குஷ் மைனி. ஃபார்முலா 2 போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார் குஷ் மைனி. இவர் பெங்களூரைச் சேர்ந்தவர்.

குஷ் மைனியின் தந்தையும், அண்ணனும் கார் பந்தய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடை குறைப்பில் சாதனை

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், ரேயன் க்ரூவல். 2023-ம் வருடத்தில் அவருடைய எடை, 220 கிலோவாக இருந்தது. எடையைக் குறைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். பிறகு துரித உணவு வகைகளையும், இனிப்பு மற்றும் மதுவையும் கைவிட்டார். ஆனாலும், அவர் நினைத்த மாதிரி எடை குறையவில்லை. நண்பர் ஒருவர் சைக்கிளிங் செல்லுமாறு ஆலோசனை வழங்கியிருக்கிறார். தினமும் காலையில் ஒரு மணி நேரம் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கடைபிடித்தார் ரேயன். 23 மாதங்களில் 124 கிலோவைக் குறைத்துவிட்டார் ரேயன். இந்த எடை குறைப்பு மிஷினை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர, வைரலாகிவிட்டார் ரேயன்.

புதிய சிஹெச்ஓ

பொதுவாக ஒரு நிறுவனத்தில் சிஇஓ, சிஎஃப்ஓ போன்ற அதிகாரிகள் இருப்பது வழக்கம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் சிஹெச்ஓ என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தலைமை மகிழ்ச்சிக்காக அதிகாரி(Chief Happiness Officer) என்பதன் சுருக்கம்தான் சிஹெச்ஓ. இந்தப் பதவிக்கு கோல்டன் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாயை நியமித்திருக்கிறது அந்த நிறுவனம். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அதன் முக்கியப்பணி. இப்படி பணிச்சூழலை மகிழ்ச்சிகரமாக மாற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை வேலைக்கு நியமிப்பது வழக்கம். அதுமாதிரி இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறை. இதன் வெற்றியைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் செல்லப்பிராணிகளை வேலைக்கு நியமிக்கலாம்.

வைரல் சம்பவம்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிகழ்வு இது. பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர், விடுமுறை நாளில் ஊபர் டாக்ஸியை புக் செய்திருக்கிறார். அந்தப் பெண் இருக்கும் இடத்துக்கு டாக்ஸியும் வந்துவிட்டது. பின் நம்பரைச் சொல்லும்போது அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி. ஆம்; அந்தக் காரில் டிரைவராக பணிபுரிபவர், அந்தப் பெண் வேலை செய்யும் நிறுவனத்தில் டீம் லீடராகவும் இருக்கிறார். லட்சக்கணக்கில் அவருக்கு வருமானம் வேறு. அப்படியிருக்க ஏன் ஊபரில் கார் ஓட்டுகிறார் என்பது அதிர்ச்சிக்குக் காரணம். அதை நேரிடையாகவே அந்தப் பெண் கேட்டுவிட, ‘‘வேலை கொடுக்கும் சலிப்பில் இருந்து விடுபடவே கார் ஓட்டுகிறேன்...’’ என்றிருக்கிறார் அந்த டீம் லீடர். இந்தச் சம்பவம் டுவிட்டரில் வெளியாகி, முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தொகுப்பு: த.சக்திவேல்