Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கைப் பொருட்களே எனது மூலதனம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘முதன் முதலில் தொழில் தொடங்கிய போது இரண்டு பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்தேன். தற்போது 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறேன். என் தயாரிப்புகள் அனைத்தும் 100% இயற்கையான மூலிகைகளால் செய்யப்பட்டது. நஞ்சில்லாத பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கையாக கிடைக்கும் மூலிகைகள் கொண்டு என்னுடைய பயன்பாட்டிற்காக பொருட்களை தயாரித்தேன்.

பின்னர் இதையே தொழிலாக மாற்றினால் என்ன என்கிற எண்ணமே ‘பிரீத்தி ஹெர்பல்ஸ்’ உருவாக காரணம்’’ என்கிறார் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த சாதனா பிரீத்தி. ஈரோடு கோபி மட்டுமில்லாமல் இவரின் பொருட்கள் பல இடங்களில் விற்பனையில் உள்ளது.

தொழில்முனைவோர்...

சிறுவயதிலிருந்தே ஏதாவது தொழில் துவங்கி நடத்த வேண்டும் என்பது என் கனவு. திருமணம், குழந்தைக்குப் பிறகு அந்தக் கனவினை எப்படியாவது நினைவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். முழுமூச்சாக என் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். தற்போது வெற்றிகரமாக இதனை நடத்தி வருகிறேன். இந்தத் தொழில் துவங்க எனது கணவரும் மகளும்தான் முக்கிய காரணம். எனது முயற்சிகளுக்கு தற்போது வரை என் குடும்பத்தினர் அனைவரும் தரும் ஊக்கம்தான் என்னால் இதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறது.

தொழில் முன்னேற்றத்தின் காரணம்...

இந்த இரண்டு வருஷத்தில் ஒரு டன்னுக்கு மேல் மூலிகை சீயக்காய் மற்றும் குளியல் பொடிகளை விற்பனை செய்திருக்கிறேன். இதுவரை 5000 ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன் என்பதே என்னுடைய தொழிலின் வெற்றியாக நான் கருதுகிறேன். என் பொருளை பயன்படுத்திய பிறகு வாடிக்கையாளர்கள் எனக்கு அளிக்கும் ஆதரவே என்னை இந்தத் தொழிலை மேலும் உத்வேகத்தோடு செயல்பட வைக்கிறது. தரமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் கண்டிப்பாக மக்கள் நமக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று புரிந்துகொண்டேன்.

இயற்கை ஹேர்டை...

இன்றைய நவீன யுகத்தில் அழகாக இருக்கவே பெண்கள் விரும்புவார்கள். குறிப்பாக அழகா நீளமான கருகரு முடி. முடியினை பல வண்ணங்களில் கலர் செய்தாலும், கடைசியாக அவர்கள் விரும்புவது கருமையான கூந்தல். ஆனால் இன்றைய சுற்றப்புறச்சூழல் காரணமாக பலருக்கு இளமையிலேயே முடி நரைத்து விடுகிறது. அதனால் டை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செயற்கை சாயங்களை தொடர்ந்து உபயோகித்தால், தலைமுடியின் ஆரோக்கியம் பெரிதும் பாதிப்படையும். நரைத்த வெள்ளை முடியை கருப்பாக மாற்ற அனைவருக்கும் ஆசை. ஆனால் கெமிக்கல் டையை உபயோகிக்கும் போது அதனால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமோ என்ற பயமும் உள்ளது.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சாயத்தைக் கொண்டு நரைமுடியையும், முடி உதிர்வையும் தடுக்கமுடியும். அவுரி, மருதாணி, கடுக்காய், நெல்லிக்காய், பாதாம் மற்றும் பல அரிய வகை மூலிகைகள் கொண்டுதான் நாங்க இந்த ஹேர் டையினை தயாரிக்கிறோம். இதை பயன்படுத்துவது எளிது, கையில் ஒட்டாது. நூறு சதவீதம் இயற்கையானது. மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டதால் தலை மற்றும் முடிக்கு மிகவும் பாதுகாப்பானது. இந்த டையினை பயன்படுத்திய பிறகு மூலிகை சீயக்காய் பொடி கொண்டு அலசினால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்.

உங்களின் பொருட்கள்...

மூலிகை சீயக்காயை நன்கு நீரில் குழைத்து 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து, பின்னர் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். உபயோகப்படுத்தும் போது பேஸ்ட் பதத்தில் இருக்க வேண்டும். 17 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சீயக்காய் தூளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் போது, தலைமுடி வலுவாகவும், பளபளப்புடன் இருக்கும். சில நேரங்களில் ஷாம்புகள் பயன்படுத்தும் போது தலையில் வறட்சி ஏற்படுவதோடு பொடுகு பிரச்னையும் ஏற்படக்கூடும். எனவே ஷாம்பிற்குப் பதிலாக வாரத்திற்கு இருமுறையாவது இந்த சீயக்காய் தூளைப் பயன்படுத்த முயற்சிப்பது நல்லது.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே மூலிகை சீயக்காய் தூளை பயன்படுத்தும் போது தலைமுடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பொடுகு, பேன், தலை அழுக்கு, பிசுபிசுப்பு, தலையில் ஏற்படும் சொரியாசிஸ் போன்ற பல தோல் நோய்களை போக்கும். முடி பளபளப்பாகும். முடிக் கொட்டுவதை தடுக்கும்.

செக்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம், கேரட், குங்குமப்பூ மற்றும் சில மூலிகைப் பொருட்கள் சேர்த்து பக்குவமாக காய்ச்சி எடுத்த எண்ணெய் தான் முகப்பொலிவு எண்ணெய். இரவு படுக்கும் முன் இரண்டு சொட்டுகள் எடுத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அல்லது குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தடவி குளியல் பொடி கொண்டு கழுவலாம். இது நல்ல பளபளக்கும் முகப்பொலிவினை தரும்.

இயற்கையான முறையில் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் பொருட்களைக் கொண்டு வலி நிவாரணி எண்ணெயை தயாரிக்கிறோம். மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தசைப்பிடிப்புகளையும் சமாளிக்க உதவுகிறது. நரம்புகள் தொடர்பான வலிக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தலாம். பிரசவத்திற்குப் பிந்தைய நாட்களில் ஏற்படும் வலிக்கும் பலன் தரும். இடுப்பு தசைகளை பராமரிக்க உதவும். உடல் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.

தொழில்முனைவோராக நினைக்கும் பெண்களுக்கு...

சொந்தமாக தொழில் துவங்க நினைப்பவர்கள் முதலில் சிறிய அளவில் துவங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்த பின்னர் பெரிய அளவில் தொழிலை விரிவு படுத்தலாம். குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலை தேர்வு செய்யலாம். ஓய்வு நேரங்களில் முதலில் செய்ய துவங்கினாலே போதும். அப்புறம் கொஞ்சம் உழைப்பினை கொடுத்தால், அதுவே நம் கைபிடித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும். கையில் ஒரு சுயதொழிலும் பொருளாதார சுதந்திரமும் கிடைத்தாலே நமக்கான மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயரும்” என்கிறார் சாதனா பிரீத்தி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்