நன்றி குங்குமம் தோழி
தீபாவளி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘விளக்குகளின் வரிசை’ என்று பொருள். அன்றைய தினம் பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதன்மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும். தீபாவளி அன்று, மாலை வீட்டின் முன் குறைந்தபட்சம் இரண்டு அகல் விளக்குகளாவது ஏற்ற வேண்டும். அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்மிடமுள்ள தீய விஷயங்கள் அனைத்தும் அழிந்து நல்ல விஷயங்கள் நடக்கும். அதில் சிறிதளவு பசும்பால் கலந்து குளித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கப் பெறும்.
வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். இந்த பூஜையில் ஐந்து பழங்கள் மற்றும் மூன்று பூக்கள் படைக்க வேண்டும். குறிப்பாக செவ்வாழை, பெருநெல்லி மற்றும் மாதுளையும், பூக்களில் மல்லிகை, தாமரை மற்றும் வாழைப்பூ கட்டாயம் இடம் பெற வேண்டும். புத்தாடைகள் அணிந்து பெரியவர்களிடம் ஆசி பெற சகல செளபாக்கியமும் நிலைத்திருக்கும்.
அன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது முக்கியமானது. அன்று செய்யப்படும் பூஜையும், படையல்களும் நம் முன்னோர்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள். அட்சய திரிதியை சமயத்தில் வீட்டிற்கு நகைகள் வாங்கி வந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். ஆனால், வடநாட்டில் தீபாவளி அன்றுதான் நகைகள் வாங்குவார்கள். தங்கம் வாங்க முடியாதவர்கள் சிறு வெள்ளியாவது வாங்குவார்கள். எதையும் வாங்க முடியாதவர்கள் கல் உப்பை வாங்கி வீட்டில் வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும்.
வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வரும். சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். சங்கு பூஜை செய்தும் வழிபடலாம். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நல்ல பலன்கள் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகும். வீட்டை மலர்கள் கொண்டு குறிப்பாக சாமந்திப் பூக்களை கொண்டு அலங்கரித்தால் வீட்டில் அதிர்ஷ்டம் தங்கும்.
தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன், மதுரை.