நன்றி குங்குமம் தோழி
இனிய இசையுடன் நல்ல வார்த்தைகளின் சங்கமம்தான் பாட்டாகிறது. பாடலைக் கேட்பது, பாடுவது இரண்டுமே மனசுக்கும் உடலுக்கும் சுகம் தரும். அதுவே காதல் பாடல்கள் என்றால் மனம் குஷியாகிடும். சோகப் பாடல்கள் மனசுக்கு அமைதியை தரும். பக்தி பாடல்கள் நம்முள் விவரிக்க முடியாத உணர்வினை ஏற்படுத்தும். சில நேரங்களில் மருந்து செய்யாததை கூட இந்தப் பாடல்கள் செய்திடும். தமிழர்களின் வாழ்க்கையில் பிறப்பு தொடங்கி இறப்பு வரை எல்லாமே பாட்டுதான்.
பாடல்கள் பல இருந்தாலும் அதில் குறிப்பாக பக்திப் பாடல்கள் மிகவும் சிறப்புமிக்கவை. அதுவும் நமக்குப் பிடித்த கடவுளின் பாடல்களை கேட்க கேட்க பக்திப் பரவசம் நம்முள் தொற்றிக் கொள்ளும். அந்த பக்திப் பாடல்களை குழந்தை பாடும் ேபாது... தெய்வமே அக்குழந்ைத வடிவில் நம்முன் நிற்பதாக உணர்வோம். அப்படிப்பட்ட பக்திப் பாடல்கள், குறிப்பாக முருகப்பெருமானை நினைத்து இந்த சின்னஞ்சிறு வயதில் பாடல்களை பாடி வருகிறார் தியா. அழகான வார்த்தை உச்சரிப்பு, குரல் வளம் ெகாண்ட தியா இதுவரை 110 மேடைகளை ஏறியுள்ளார். குட்டி பாட்டு ராணியைச் சந்தித்த போது பாடல் பாடி நம்மை வரவேற்றாள்...
‘‘நான் பிறந்தது மதுரை. ஆனா, இப்போ படிப்புக்காக சென்னையில செட்டிலாயிட்டோம். அம்மா, அப்பா இருவரும் ஐ.டியில் வேலை பார்க்கிறார்கள். எங்க வீட்ல எப்பவும் சாமி பாட்டு ஓடிக் கொண்டிருக்கும். சாமிக்கு பூஜை செய்யும் போது அம்மா, பாட்டி எல்லோரும் பாட்டு பாடிக் கொண்டுதான் பூஜையே செய்வாங்க. நானும் அவர்கள் பாடுவதைக் கேட்பேன். அப்படித்தான் நானும் பாட ஆரம்பித்தேன். அப்ப எனக்கு மூணு வயசு இருக்கும். பாட்டி எனக்கு திருப்புகழ் மற்றும் சின்னச் சின்ன ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்தாங்க.
ஒருமுறை மதுரைக்கு விடுமுறைக்காக சென்றிருந்தேன். அங்கு ஒரு முருகன் கோயிலில் நடந்த கச்சேரியில் எனக்கு முதன் முதலாக பாட வாய்ப்பு கிடைச்சது. அப்ப எனக்கு 5 வயசு. ‘நீயல்லால் தெய்வமில்லை’... சீர்காழி கோவிந்தராஜன் பாடின முருகன் பாட்டை பாடினேன். அவரின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய பாட்டுக்கு நிறைய கைத்தட்டல் கிடைத்தது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அங்கிருந்துதான் என்னுடைய இந்தப் பயணம் ஆரம்பமாச்சு. இப்ப எட்டு வயசாகுது. 110 மேடைகளில் பாடி இருக்கிறேன்’’ என்று குதூகலிக்கிறாள் குட்டி அழகி.
‘‘என் இஷ்ட தெய்வம் வடபழனி முருகன். நான் எது கேட்டாலும் கொடுத்திடுவார். முருகனோட பாடல்கள் மட்டும் கிட்டத்தட்ட 100 பாடல்கள் மேல் தெரியும். இப்போதுதான் முறையாக நான் பாடல்களை பயின்று வருகிறேன். அம்மாவும் பாட்டியும் சங்கீதம் படிச்சவங்க. அதனால அவங்கதான் பாடல்கள் குறித்த சந்தேகங்களை எல்லாம் சரி செய்வாங்க. இதுவரை நான் பாடின பாடல்களை நான் முறையாக பயிலவில்லை. கேள்வி ஞானம் மட்டுமே. ஒரு பாடலை ஒரு முறை கேட்டால் போதும் அப்படியே பாடிடுவேன்’’ என்று கூறும் தியாவிற்கு திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற இலக்கிய பாடல்களும் அத்துபடியாம். ‘‘எனக்கு முருகர் பிடிக்கும் என்பதால் அவருடைய பாடல்களைதான் நிறைய பாடுவேன்.
கடந்த வருடம் பழனி கோயிலில் முருகன் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நான் பாடினேன். அதுதான் என் வாழ்க்கையின் டர்னிங் பாய்ன்ட். அன்று முதல் அறநிலையத்துறை சார்பாக எல்லா விழாக்களுக்கும் என்னை அழைக்கிறாங்க. கோயில் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு விருந்தினரா வரச் சொல்றாங்க. தொடர்ந்து திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கும் அழைப்பு வந்தது. அது என்னுடைய 100வது மேடையாக அமைந்தது. அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது. அது மட்டுமில்லை, ஈஸ்வரி அம்மாவின் அம்மன் பாடல்களை பாடும் போது என்னை அறியாமல் ஒரு உத்வேகம் ஏற்படும்.
நான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் பள்ளிப் பாடங்களை எல்லாம் முடித்திடுவேன். அப்புறம் புத்தகங்கள் படிப்பேன். எங்க வீட்ல டி.வியை ஆன் செய்து பல வருடங்கள் இருக்கும். செல்போனும் இன்ஸ்டா பக்கத்திற்கு மட்டும்தான். அதுவும் அம்மா பார்த்துப்பாங்க. ஹார்ட் சர்ஜனாகணும்னு விருப்பம். அதற்காக நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். பக்தி புராணங்களும் படிக்கிறேன். அதில் உள்ள சிறப்பான கருத்துகள், கதைகளை நான் பாடும் மேடைகளில் சொற்பொழிவுகள் மூலம் எல்லோருக்கும் சொல்றேன்’’ என்ற தியா இறையருட்செல்வி, ஏழிசை கலையரசி, பக்தி இளவரசி, இளம் சாதனையாளர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
‘‘தனியார் பிறந்தநாள் விழாக்களில் பாட கூப்பிடுறாங்க. நான் அங்கு பாடுவதில்லை. கடவுளை எண்ணி மட்டுமே பாடணும் என்பதில் உறுதியா இருக்கிறேன். சினிமா பாடல்களில் இளையராஜா பாடல்கள் கேட்க பிடிக்கும். முருகப் பெருமானுக்கு ஸ்பெஷலா ஒரு ஆல்பம் ரெடி பண்ணணும். என் குரல் எல்லா கோயில்களிலும் ஒலிக்கணும் என்பது தான் என்னோட கனவு’’ என்று சிரிக்கிறார் தெய்வக் குழந்தை தியா.
தொகுப்பு: கலைச்செல்வி
படங்கள்: கணேஷ்குமார்