Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

என் அம்மாவும் அப்பாவுமே என் இரு கண்கள்!

நன்றி குங்குமம் தோழி

பூமியில் மனிதராய் படைக்கப்பட்ட எல்லோருக்கும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கிறது. சிலருக்கு மனதளவில், சிலருக்கு உடலளவில். வாழ்க்கை தரம் உயரவில்லையே என மனதளவில் பலர் கலக்கம் அடைகின்றனர். அந்த கஷ்டங்களை போக்க பல வழிகள் இருக்கின்றன. ஆனால், பிறவி அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனம் அவர்களின் மனநிலையினை பெரிய அளவில் பாதிக்கிறது. அதிலிருந்து மீண்டு, வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த பிரியவதனா.

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கு ஏற்ப சோதனைகளை சாதனைகளாக்கி மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சொல்லப்போனால் உடலால் எல்லா விதத்திலும் தகுதியானவர்கள் கூட செய்ய முடியாத வேலைகளை இவர்கள் சத்தமின்றி செய்து வருகிறார்கள்.

‘‘உடலில் எந்தக் குறைகள் இருந்தாலும் அடுத்தவர் துணை தேவைப்படாது. ஆனால், கண் பார்வை இல்லையெனில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு அடியும் வாழ்க்கை கடினமே. அந்தக் கஷ்டம் எனக்கில்லை. என் அப்பாவும் அம்மாவுமே என் இரு கண்கள்’’ என்கிறார் பிரியவதனா. இவர் சென்னை, திருவான்மியூர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோயிலில் ஓதுவாராக பணியாற்றுகிறார். பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான இவர் பல திறமைகளைத் தன்னுள் கொண்டுள்ளார்.

“எங்களுடையது சிறிய அழகான குடும்பம். அப்பா, அம்மா, நான், +2 படிக்கும் தம்பி. சென்னைதான் எங்க சொந்த ஊர். நான் பிறக்கும் போது 650 கிராம் எடைதான் இருந்தேன்னு அம்மா சொன்னாங்க. எடை மிகவும் குறைவு என்பதால் பிழைக்க மாட்டேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இருந்தாலும் நான் முதல் குழந்தை என்பதால் அம்மா ரொம்பவே போராடி என்னை காப்பாற்றினாங்க. 5 மாசத்திற்கு பிறகுதான் எனக்கு கண் பார்வை இல்லை என்று தெரிய வந்தது. விழித்திரை விலகாததால் பார்வை இல்லன்னு சொன்னாங்க. நாங்க பார்க்காத டாக்டர்கள் இல்லை. சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நான் பார்வை இல்லைன்னு வருத்தப்படல. என் வாழ்க்கை இதோடுதான்னு தெரிந்துவிட்டது. அதை எவ்வாறு நம்பிக்கையுடன் கடக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

‘‘நான் குழந்தையா இருக்கும் போது, பார்வைக்கான சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது, அங்குள்ள டாக்டர், ‘பார்வையை கொண்டு வர முடியாது. ஆனால், அவளின் காதுகள் கண்களாக செயல்படும்’ என்றார். அவர் சொன்ன மாதிரி எனக்கு காதுகள்தான் எல்லாமே. கடவுள் எனக்கு எல்லா கதவுகளையும் மூடல. என் காதுகள் மூலமா பல கதவுகளை திறந்து வெச்சுருக்கார். குழந்தையில் பாட்டு சத்தம் கேட்டுதான் நகர்வேன், சாப்பிடுவேன், தூங்குவேன். எனக்கு எல்லாமே இசைதான். அதைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன்.

இசைதான் எனக்கு எல்லாம் ஆனதால், எங்க வீட்டில் என்னை வீட்டருகில் உள்ள நடனப் பள்ளியில் சேர்த்தாங்க. நடனத்திற்கான பாடல்கள் மற்றும் ஜதிகளை கேட்டு நானே பாட ஆரம்பிச்சேன். எளிமையான வார்த்தைகள் என்றால் ஒருமுறை கேட்டாலே பாடிடுவேன். கொஞ்சம் கடினமான வார்த்தைகள் என்றால், திரும்பத் திரும்ப கேட்பேன். அதன் பிறகு பலரிடம் பாட்டு பயின்றேன். கேள்வி ஞானம் என்பதால், பிரைல் படிக்க வரல, வகுப்பில் பாடங்களை கேட்டுக் கொள்வேன். வீட்டில் அம்மா திரும்பத் திரும்ப எனக்கு வாசித்து காண்பித்து சொல்லித் தருவாங்க.

கர்நாடக இசை, ராகம் எல்லாம் படிச்சேன். சினிமா பாடல்களும் எனக்கு அத்துப்படி. 10ம் வகுப்புக்கு பிறகு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 3 வருட இசைக் கலைமணி டிப்ளமா படிப்பு பயின்றேன். இசை ஆசிரியைப் பயிற்சியும் முடித்தேன். இசையில் இளங்கலையும் படித்தேன். தனிப்பட்ட முறையில் தேவாரம், திருவாசகம் பயின்றேன். தமிழ் தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு மொழி பாடல்களையும் சரளமாக பாடுவேன்’’ என்று ஆச்சரியப்படுத்துகிறார் பிரியவதனா.

“குரு பிரம்மா, குரு விஷ்ணு”தான் நான் முதன்முதலா சொன்னதா அம்மா சொல்வாங்க. அம்மா தினமும் 3 மணி நேரம் எனக்கு வீட்ல பயிற்சி கொடுப்பாங்க.. அப்பாவும் உதவுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல்கள்னு பிரிச்சு பயிற்சி எடுப்பேன். தேவாரம், திருவாசகம் என 400க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடத் தெரியும். பல கச்சேரிகள்லயும் பாடியிருக்கேன். அது மட்டுமல்லாமல் அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்ட அனைத்து பக்திப் பாடல்களிலும் கவனம் செலுத்தினேன்.

அப்பதான் அம்மாவோட தோழி மூலமா கோயில்களில் ஓதுவாருன்னு ஒரு பணி இருப்பதாகவும், அதற்கான தகுதி எனக்கு இருப்பதாக சொன்னார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் என் மனுவை பரிசீலனை செய்து பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு ஓதுவார் பணிக்கு என்னை நேரடி நியமனம் செய்தனர். பணி நியமன ஆணையை தமிழ்நாடு முதல்வர் கையில் பெற்றது எனக்கும் என் பெற்றோருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஓதுவார் பணி என்பது சாமிக்கு தினமும் இருவேளையும் அபிஷேகம் நடக்கும் போது பாடல்கள் பாடணும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒரு பாடல் பாடுவேன். நான் பாடின பிறகுதான் அபிஷேகம் பண்ணுவாங்க. ஐந்து வகையான அபிஷேகம் நடக்கும். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானுக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்களை பாடுகிறேன். அபிஷேகம் முடிந்த பிறகு பிற பக்தி பாடல்களையும் பாடுகிறேன்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் என் பாடல்களைக் கேட்டு பாராட்டுறாங்க. அவர்களும் சில பாடல்களை பாடச் சொல்லிக் கேட்பாங்க. ஓதுவார் பணியில் மிகவும் மனநிறைவுடன் இருக்கிறேன். என் அப்பா, அம்மா இல்லைனா நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பேனானு தெரியல. அவங்க எனக்கு வரம். நிறைய பேர் எங்களை அவமானப்படுத்தியிருக்காங்க. ‘எதுக்கு தேவையில்லாம அவள படிக்க வைக்கிற’னு அம்மாவிடம் சொல்வாங்க. இப்போது அவங்களே எங்களை பாராட்டுறாங்க. கடவுள் சன்னதியில் பாடுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், பெருமை’’ என்றவர் தன்னைப்போல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

“தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய சலுகைகள், திட்டங்களை வகுத்திருக்காங்க. அதை என்னைப் போன்று மாற்றுத்திறன் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேறணும். தங்கள் திறமைகளை முடக்கி வைக்காமல் ஊக்குவிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பயணித்து இந்த சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக மாற வேண்டும்.

பாடல் தவிர எனக்கு வீணை, வயலினும் வாசிக்க தெரியும். இதற்கான தனிப்பட்ட பயிற்சி எல்லாம் எடுக்கல. கேள்வி ஞானம்தான். சினிமா பாடல்களையும் வாசிப்பேன். எனக்கு இசையில் முதுகலை படிக்க ஆசை. அதற்காக அடுத்த கட்டத்திற்கு தயாராகின்றேன்’’ என மற்றவர்களுக்கு உதாரணமாக வலம் வருகிறார் பிரியவதனா.

தொகுப்பு: கலைச்செல்வி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்