நன்றி குங்குமம் தோழி
இவரின் தந்தையை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் சிரித்த வசீகர முகம் இன்றும் பல வாடிக்கையாளர்களின் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. அவர் இப்பூவுலகில் இல்லை என்றாலும், அவரின் பெயர் என்றும் நிறைந்திருக்கும் வகையில் அனைவரின் மனதிலும் பரிச்சயமாக உள்ளார். அவர் வேறு யாருமில்லை... வசந்த் அண்ட் கோ நிறுவனத்தினை நிறுவிய வசந்தகுமார். அவரின் மகளான தங்கமலர் தற்போது அப்பா விட்டுச் சென்ற ராஜ்ஜியத்தின் இயக்குனராக, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு குறிப்பாக பெண் ஊழியர்களின் உயிர் தோழியாக வலம் வருகிறார்.
‘‘திருநெல்வேலியில்தான் நான் பிறந்தேன். என் பாட்டியின் பெயர் தங்கம்மை. அவரின் நினைவாக அப்பா எனக்கு தங்கமலர் என்று பெயர் வைத்தார். பிறந்தது நெல்லையில் என்றாலும், படிச்சது சென்னையில் தான். எம்.காம் முடித்துவிட்டு டைலரிங் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி பயின்றேன். அப்பா ஆரம்பித்த நிறுவனம். கடந்த 47 வருடங்களாக உலகத்தரம் வாய்ந்த அனைத்து வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் எளிய தவணை முறையிலும் வழங்கி வருகிறோம்.
இந்த நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அம்மா. நானும் என் சகோதரர்கள் மூவரும் இதனையும் தொலைக்காட்சி நிறுவனத்தையும் தலைமை பொறுப்பில் இருந்து கவனித்து வருகிறோம். அதில் நான் நிதித்துறை, செலவினங்கள், பட்ஜெட், பொருட்களை வாங்குவது, தவணைத் திட்டங்களை பார்த்துக் கொள்கிறேன்’’ என்றவர் தன் அப்பாவிற்கு தொழில் மேல் இருந்த பக்தியைப் பற்றி விவரித்தார்.
‘‘அப்பா ரொம்ப சுறுசுறுப்பாக தேனி போல் வேலை செய்வார். இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்ய தயங்கமாட்டார். அதனால்தான் அவரால் இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தது. அப்பாவின் கடுமையான உழைப்பு மற்றும் உன்னதத் தன்மை, எனக்கும் பிசினஸில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் இருந்தே மனதில் பதிந்துவிட்டது. படிப்பு முடித்ததும் நிர்வாகப் பொறுப்பு ஏற்க விரும்பினேன். ஆனால், அப்பா எனக்கு திருமணம் ஏற்பாடு செய்துவிட்டார்.
என் கணவர் பெங்களூரில் ஏற்றுமதி, இறக்குமதி பிசினஸ் செய்து வந்தார். அதனால் திருமணத்திற்குப் பிறகு நான் அங்கு செட்டிலாகிட்டேன். குழந்தைகளும் சிறியவர்களாக இருந்ததால், அப்போது பிசினஸில் ஈடுபட முடியவில்லை. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அதனால் பெங்களூரில் உள்ள கிளையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். அப்பாவின் மறைவிற்குப் பிறகு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு நான், அம்மா மற்றும் என் சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அப்பா உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தை நிர்வகித்து வருகிறோம்.
பெங்களூரு, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 84 கிளை கொண்ட எங்க நிறுவனம் தற்போது 127 கிளைகளாக வளர்ந்திருக்கிறது. இங்கு இல்லங்களுக்கு தேவைப்படும் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கும். ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்பதுதான் அப்பாவின் கனவு. அதை நிறைவேற்ற மாதத் தவணை முறைகளில் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இந்தத் தொழிலில் போட்டிகள் பல இருந்தாலும், ‘என்றும் முதலிடம்’ என்ற பெயரை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றவரை அவர் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் அனைவரும் ‘தங்க மனசு தங்கமலர்’ என்று அழைக்கிறார்கள்.
‘‘எங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை என்னுடைய உயிர் சகோதரிகளாகத்தான் நினைத்து பழகி வருகிறேன். அவர்களும் என்னை அப்படித்தான் பார்க்கிறார்கள். ெசால்லப்போனால் என்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் அவர்கள் பயணிக்கிறார்கள். எங்க நிறுவனத்தில் 80% பெண் ஊழியர்கள்தான் வேலை பார்க்கிறார்கள். அலுவலகம், கடைகளிலும் அவர்களுக்கு அதிகளவில் வேலை வாயப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறேன்.
என்னுடைய இந்த வெற்றிக்கு என் அப்பா மற்றும் என் கணவர்தான் காரணம். மற்றவர்கள் சொல்வதை அலட்சியம் செய்யாமல் கவனமுடன் கேட்டுக் கொள்வேன். அதில் என் பிசினஸிற்கு தேவையானதை மட்டும் செயல்படுத்த வேண்டும். வேகம், விறுவிறுப்பு இருந்தாலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். யோசித்து சரியான முடிவு எடுக்க வேண்டும். மன தைரியம், தன்னம்பிக்கை மிக மிக அவசியம் என்று அப்பா எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். என்னுடைய வழிகாட்டி, ஆசான் அவர்தான். அவரை வணங்கிவிட்டுதான் என் அன்றாடப் பணிகளை துவங்குவேன்.
அவரின் ஆசீர்வாதம் தான் எங்களை வளர்ச்சி அடைய செய்து வருகிறது. அப்பாவிற்கு பிறகு எனக்கு சப்போர்ட்டாக என் கணவர் இருந்து வருகிறார். தற்போது 127 கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதனை 300 கிளைகளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறோம். மேலும், பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்று கூறும் தங்கமலர், சிறந்த பெண் தொழில் அதிபர், நவ சாந்தி போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: விஜயா கண்ணன்