Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என் அனுபவமே எனக்கான பாடமாக மாறியது!

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக வீட்டை காவல் காப்பதற்காக நாயினை வளர்த்து வந்தார்கள். ஆனால், இன்று நாய், பூனை, கிளி, சுகர் கிளைடர் என பலவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். அவைகள் வீட்டில் ஒரு நபராக வலம் வருகிறார்கள். ஒரு குழந்தையை எவ்வளவு பத்திரமாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்கிறோமோ அதேபோல்தான் செல்லப்பிராணிகளையும் மிகவும் கவனமாக பேணிக்காத்து வருகிறார்கள் இன்றைய பெட் பெற்றோர்கள்.

அவர்களுக்கான உணவு, மருத்துவம் மற்றும் அழகு பராமரிப்பு என ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார்கள். இவர்களின் தேவையை புரிந்து கொண்டுள்ளார் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன். இவர் செல்லப்பிராணிகளை அழகுப்படுத்துவது மட்டுமில்லாமல், அவர்களின் உணவு, விளையாட்டுப் பொருட்கள், மருத்துவம் என அனைத்தும் ஒரே கூரைக்குள் இருக்கும்படி ‘நோபல் பாஸ்’ என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறார்.

‘‘பொறியியலில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கிறேன். தற்போது அதில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறேன். எனக்கு வெட்னரி மருத்துவராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அதற்கான மதிப்பெண் இல்லாததால் படிக்க முடியவில்லை. செல்லப்பிராணிகள் மேல் எனக்கு தனிப்பட்ட பிரியம் இருப்பதால்தான் டாக்டருக்கு படிக்க விரும்பினேன். அது நிறைவேறவில்லை என்பதால் செல்லப்பிராணிகளுக்காக அனைத்தும் செயல்படுத்தக்கூடிய கிளினிக்கை துவங்க திட்டமிட்டேன். இதற்கு நான் வெட்னரி டாக்டருக்கு படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பயிற்சி பெற்ற மருத்துவர்களை வேலைக்கு நியமித்து நிர்வகிக்கலாம். என்னதான் திட்டம் பலமாக இருந்தாலும், அதற்கு முன்பு எனக்கு பிராணிகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்’’ என்றவர், கிளினிக் துவங்குவதற்கு முதல் கட்டமாக செல்லப்பிராணிகளுக்கான க்ரூமிங் ஸ்டுடியோவினை ஆரம்பித்துள்ளார்.

‘‘என்னால் டாக்டர் படிக்க முடியவில்லை. ஆனால், டாக்டருக்கு படிச்சவங்களை வேலைக்கு வைத்து அவர்கள் மூலம் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க நினைத்தேன். அதனால் வெட்னரி கிளினிக்காக இல்லாமல் செல்லப்பிராணிகளுக்கு தேவையான க்ரூமிங், ஸ்பா, சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் உணவுகள் அனைத்தும் ஒரே கூறைக்குள் அமைத்தேன். அதில் வாரத்தில் ஒருநாள் தெருவில் உள்ள நாய்கள் குட்டிப்போடுவதை தடுக்க அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்கிறோம். அரசும் இதனை கடைப்பிடித்து வந்தாலும் எங்களால் முடிந்தளவு சமூகத்திற்கு நன்மை செய்ய நினைத்துதான் இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சைகள், தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறோம். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு இலவச கன்சல்டேஷன் செய்கிறோம்.

க்ரூமிங் என்பது அழகுப்படுத்துவது. ஒருவருக்கு எவ்வாறு முடித்திருத்தம், ஷேவிங், ஃபேஷியல் எல்லாம் செய்து அழகுப்படுத்துகிறோமோ அதேபோல்தான் செல்லப்பிராணிகளுக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்துகிறோம். அவர்களை குளிப்பாட்டி, முடிகளை திருத்தி, நகங்களை கத்தரித்து, பற்களை துலக்கிவிடுவது என அனைத்தும் இதில் அடங்கும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான மருந்துகள், அலங்காரம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், உணவுகள், சாப்பிட பயன்படுத்தப்படும் கிண்ணங்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது. ஒருவர் தன் செல்லப்பிராணியினை இங்கு அழைத்து வந்தால், க்ரூமிங் மட்டுமில்லாமல் சிகிச்சைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

உணவுகளைப் பொறுத்தவரை அவற்றை தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று அங்கு சுத்தமான முறையில் தயாரிக்கிறார்களா என்று பார்த்து வாங்கி வருகிறோம். அந்த உணவினை முதலில் எங்க வீட்டு நாய்க்குட்டிகளுக்கு கொடுப்போம். அவர்கள் விரும்பி சாப்பிட்ட பிறகுதான் அதனை கடையில் விற்பனைக்கு கொடுக்கிறோம்’’ என்றவர், செல்லப்பிராணிகளுக்கான அனைத்து விஷயங்களையும் அனுபவப்பூர்வமாக கற்றுள்ளார்.

‘‘நான் இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் முன்பு இது குறித்து அடிப்படை விஷயங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. அதனால் முதலில் பெட் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு ஒவ்வொரு விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகள் முதல் அவர்களுக்கான உணவுகள், பராமரிக்கும் முறை என அனைத்தும் தெரிந்து கொண்டேன். அதைத் தொடர்ந்து நாய்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அங்கு சென்று செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களிடம் அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். பெட் பேரன்ட்ஸ் அவர்களை வீட்டில் ஒரு உறுப்பினராகத்தான் பார்ப்பார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் உடைகள் எல்லாம் தைத்து போடுவார்கள். ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வார்கள். இந்த அனுபவங்களே எனக்கு ஒரு பாடமாக அமைந்தது’’ என்றவர், இது மட்டுமில்லாமல் தொழில் சார்ந்த விஷயங்களையும் அனுபவப்பூர்வமாக கற்றுள்ளார்.

‘‘செல்லப்பிராணிகள் சார்ந்த பிசினஸ் என்று முடிவு செய்தாயிற்று. அதே சமயம் அந்தத் தொழிலை எவ்வாறு திறம்பட செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள நிறைய இடங்களில் வேலை பார்த்தேன். கட்டிட வேலை முதல் பிளம்பிங், ஏன் உணவு ெடலிவரி வேலை கூட பார்த்திருக்கிறேன். சிறிய அளவில் தினசரி நாளிதழ்கள் போடும் கடையும் வைத்தேன். எந்த தினசரி போகும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது.

சில நாளிதழ்கள் விற்கவில்லை என்றால் திரும்ப எடுத்துக் கொள்வார்கள். சிலர் அவ்வாறு செய்ய மாட்டார்கள். அது எவ்வளவு பொருட்களை வாங்க வேண்டும்,ஸ்டாக் எப்படி செய்யணும்னு தெரிந்து கொள்ள உதவியது. இவ்வாறு ஒவ்வொரு கட்ட அனுபவத்திற்குப் பிறகுதான் இந்த ஸ்டுடியோவினை திறந்தேன்.

முதலில் ெசல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையினைதான் ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து க்ரூமிங் மற்றும் கிளினிக்கும் வைத்தேன். ஆரம்பித்த போது நானேதான் செல்லப்பிராணிகளுக்கு க்ரூமிங் செய்து வந்தேன். தற்போது ஒருவரை நியமித்து இருக்கேன். அதே போல் அவர்களுக்கான டாக்டர்களும் இங்குள்ளனர். இதனைத் தொடர்ந்து நிறைய கிளைகளை திறக்க இருக்கிறோம். அடுத்து 24 மணி நேரமும் மருத்துவ உதவியினை கொடுக்கும் எண்ணம் உள்ளது.

செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை இரண்டு விஷயம்தான். அவர்களுக்கு ஒருவரை பிடித்தால் வாலாட்டும், இல்லைன்னா கடிச்சிடும். ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும் நாய்களுக்கு வாயில் பாதுகாப்பு கவசம் போடச் சொல்லிடுவோம். அந்த நாய், தொடர்ந்து வரும் போது நம்முடன் பழகிடும். ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளித்தாலும் பலன் இருக்காது. அதனால் வீட்டில் அதனை தனிமைப்படுத்தி வைக்க சொல்லிடுவோம். பத்து நாட்களுக்கு மேல் ரேபீஸ் தாக்கப்பட்ட நாய் உயிருடன் இருக்காது.

அதே சமயம் அந்த நாய் இருக்கும் வரை வீட்டில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்க ஆலோசனையும் வழங்குவோம். வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகு உடனடியாக கையினை கழுவிட வேண்டும். அதை நாங்க எங்க

ஸ்டுடியோவில் ரொம்ப ஸ்ட்ரிக்டாக பின்பற்றி வருகிறோம்.

நான் இந்த பிசினஸை ரிஸ்க் எடுத்து தான் ஆரம்பிச்சேன். அம்மாவின் செயினை அடகு வச்சுதான் திறந்தேன். முதலில் பெரிய அளவில் பிசினஸ் இல்லை என்றாலும், படிப்படியாக என்னைப்

பற்றி மக்களுக்கு தெரிய வந்தது. இப்போது பிசினஸ் நல்லபடியாக இருக்கு. காரணம், ஒரு விஷயத்தை விரும்பி செய்யும் போது கண்டிப்பா அது கை கொடுக்கும்’’ என்றார் விஸ்வநாதன்.

தொகுப்பு: ரிதி

படங்கள்: கிருஷ்ணமூர்த்தி