Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரசவத்திற்காக 24 மணி நேரமும் என் கார் இயங்குகிறது!

நன்றி குங்குமம் தோழி

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்று நம் சான்றோர் வாக்கிற்கேற்ப, ஏழை எளிய குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார் தீபா பிரபு. சமூக சேவகி, எழுத்தாளர் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் மக்களின் அப்போதைய தேவை என்ன என்று அறிந்து அவரால் என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறார்.‘‘என்னுடைய பூர்வீகம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு. படித்தது திருப்பத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில். அங்கு +2 வரை படித்தேன். அதன் பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலமாக இளங்கலையில் பட்டம் பெற்றேன். படிப்பு முடித்த பிறகு திருமணம். என் கணவர் புதுக்கோட்டை தமிழ்நாடு காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

எனக்கு சின்ன வயசில் இருந்தே சமூகத்திற்கு என்னால் ஈன்ற உதவியினை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. திருமணம் முடிந்தவுடன், நான் என் கணவரிடம் வைத்த கோரிக்கையும் அதுதான். மனித சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அவரும் என் விருப்பத்தை புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு உற்ற துணையாகவும் இன்று வரை உறுதுணையாகவும் இருந்து வருகிறார். மேலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் எனக்கு ஊக்கம் கொடுத்தார். ஆனால், அப்போது அதற்கான நேரம் எனக்கு அமையவில்லை’’ என்றவர் தன்னுடைய பிரசவத்திற்குப் பிறகு முழு தீவிரமாக சேவையில் ஈடுபட துவங்கியுள்ளார்.

‘‘என் கணவருக்கு சென்னையில் பணி மாற்றம் கிடைத்ததால் நாங்க சென்னையில் குடிபெயர்ந்தோம். அப்போது குழந்தையின்மை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தேன். பிரசவ நேரத்தில் எனக்கு அதிகப்படியான ரத்தம் தேவைப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் ரத்த தானம் செய்தும் போதிய அளவு கிடைக்கவில்லை. எனக்காக பல இடங்களில் என் தோழிகள், கணவர் மற்றும் அவரின் நண்பர் என அனைவரும் ரத்தம் கேட்டு அலைந்தார்கள். எனக்காக அவர்கள் கஷ்டப்படுவதை நினைத்து நான் மிகவும் மனம் நொந்து போனேன்.

இருந்தாலும் அவர்களின் முயற்சியால் எனக்கு ரத்தம் கிடைத்து நல்ல முறையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது இருந்தே ரத்த தானம் செய்வது மட்டுமில்லாமல் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குழந்தைக்கு ஒரு வயதான பிறகு என்னைப் போல் மற்றவர்களும் ரத்தத்திற்காக அலையக்கூடாது என்று 2020ல் ‘சமூக மாற்றத்தின் விதை’ என்ற பெயரில் அறக்கட்டளையை துவங்கினேன். அதில் முதலில் நான் செய்தது ரத்த தானம் முகாம்.

இதுவரை 736 யூனிட் ரத்தத்தினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சைகளுக்கு அளித்துள்ளோம். பல கர்ப்பிணி பெண்கள் தடுமாற்றத்தில், எங்களை தொடர்பு கொள்வார்கள். எந்த நேரம் அழைத்தாலும், உடனே அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கி விடுவோம். 24 மணி நேரமும் பிரசவத்திற்கு இலவசமாக என்னுடைய கார் செயல்படும். இரு முறை இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி, அதில் 234 பேருக்கு கண் அறுவை சிகிச்சையும், 84 பேருக்கு இலவச கண்ணாடியும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தேவையான சிகிச்சைகளுக்கு ஏழை மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி இருக்கிறோம். அதில் குறிப்பாக சிறுநீரக மாற்று, இதய அறுவை சிகிச்சை, விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் என இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேல் நிதி உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். சிகிச்சைக்காக மட்டுமில்லாமல் நலிந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கும் வாழ்வாதாரம் ஏற்படுத்தி வருகிறோம். கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளி சகோதரிக்கு மளிகைக் கடை அமைத்து கொடுத்தோம். மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தாலும், அதில் மிகவும் முக்கியமானது அவர்கள் வாழும் சுற்றுச்சூழல்.

அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு மரம் நடுவது அவசியம். இதனால் நம்முடைய சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதால், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களிடம் கொடுத்து நட செய்திருக்கிறேன். இன்று அந்த மரம் வளர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. மக்களை மட்டுமில்லை அவர்கள் வாழும் பூமியையும் பாதுகாப்பது அவசியம். இதனை என்னைப் போன்று ஒருவரால் மட்டுமே செய்ய முடியாது. மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு கை கோர்த்து தன்னலமில்லாமல், ஒரு சிறு செயலுக்கு முன் வந்தாலே, நம் சமூகமும், நம் பூமியும் இன்னும் நலமாக மலரலாம்’’ என்றவர் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக நரிக்குறவர் குடியிருப்புப்  பகுதியைச் சேர்ந்த 12 ஆண்களை வேலையில் சேர்த்துள்ளார்.

இவை தவிர சாலைகளை சீரமைப்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் பேச்சு மற்றும் கலை சார்ந்த போட்டிகளை நடத்தி அவர்களை ஊக்குவித்து வருகிறார். 10 மற்றும் +2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கிறார். மேலும் நூலகம், டியூஷன் மற்றும் வார இறுதி நாட்களில் ஹிந்தி மற்றும் கையெழுத்துப் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

‘‘இன்றைய காலத்தில் திருமணமான சில மாதங்களில் விவாகரத்து கோருகிறார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து நல்வாழ்வினை அமைத்து தருகிறேன். போதைப் பழக்கத்தில் உள்ளவர்களின் மனநிலையை மாற்றவும் தன்னால் முடிந்த வகையில் உதவி செய்து வருகிறார். நான் செய்யும் இந்த பொதுச்சேவையினை மிகவும் மனநிறைவுடன் செய்து வருகிறேன்.

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை என்பது பழமொழி. அது போல என்னால் முடிந்த, பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை ஒருங்கிணைத்து எனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளேன். என்னைப் போல் இந்தக் காலத்து இளைஞர்களும் இந்த மகத்தான பொதுநல சேவையில் ஈடுபட வேண்டும் என்பது தான் என் விருப்பம். அந்த மனநிலையில் உள்ள பல இளைஞர்களையும்.

தோழிகளையும் இணைத்து பணியில் ஈடுபட்டு வருகிறேன். காரணம், எனக்குப் பிறகும் இந்த சேவை தொடர வேண்டும் என்பதுதான் என் குறிக்கோளாக உள்ளது. ஒரு பெண்ணாக இது போன்ற வேலையில் ஈடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆண் சேவையில் ஈடுபட்டால் பாராட்டும் இந்த உலகம், பெண் செய்தால் ஏளனமாகப் பார்க்கின்றனர். என்னுடைய அறக்கட்டளையில் 60 நபர்கள் நிரந்தர உறுப்பினர்களாகவும். 436 பேர் குழுவில் இணைந்து பயணிக்கின்றனர்’’ என்றார் தீபா பிரபு.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்