Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அம்மா, மாமியார் தந்த ஊக்கம்தான் நான் தொழில்முனைவோராக காரணம்!

நன்றி குங்குமம் தோழி

‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ என்ற பழமொழி உடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆடைகள் எல்லோருக்குமானது என்றாலும் பெண்களுக்கு குறிப்பாக நம்பிக்கை, அடையாளம் மற்றும் பண்பாட்டு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் உடல்அமைப்புக்கு ஏற்ப உடைகளை தேர்வு செய்து அணியும் போது அவர்கள் மேலும் அழகாக தென்படுவார்கள். அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ஆடை மேல் அதிகளவு கவனம் செலுத்துகிறாள்.

இன்றைய ஃபேஷன் உலகம் பெண்களின் சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் உலகளாவிய அடையாளங்களை வெளிப்படுத்தும் கருவியாக உருவெடுத்துள்ளது. ஃபேஷன் மாறினாலும், நம்முடைய பாரம்பரிய அடையாளத்தை கைவிட பெண்கள் தயாராக இல்லை. தீபாவளி பண்டிகைக்கு ஃபேஷன் உடைகள் என்றால், பொங்கலுக்கு பட்டுப்பாவாடை, தாவணி, புடவை என பாரம்பரிய ஆடைகளை தேர்வு செய்கிறார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் சீசனுக்கு ஏற்ப உடைகளை அறிமுகம் செய்து வருகிறார், பள்ளிக்கரணையை சேர்ந்த ‘பிளஷ் பொடிக்’ உரிமையாளர் சௌமியா செல்வராஜ்.

‘‘மயிலாடுதுறை பூர்வீகம். திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறிவிட்டோம். கணவருக்கு ஐ.டி வேலை. பேங்கில் வேலை பார்க்க வேண்டும் என்று எம்.பி.ஏ படிச்சேன். ஆனால், பள்ளி ஒன்றில் நூலகப் பொறுப்பாளராக வேலைக்கு சேர்ந்தேன். வேலைதான் மாறியது. உடையை தேர்வு செய்வதில் என்னுடைய சிந்தனை மாறவே இல்லை. ஒவ்வொரு உடையும் பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன். எனக்கு திருப்தியா இருந்தாதான் அந்த உடையை வாங்குவேன். என் அம்மா டெய்லர் என்பதால், ஆடைகள் மீதான ஈர்ப்பே என்னை இந்த ஆடைகள் விற்பனை பிசினஸுக்கு கொண்டு வந்திருக்குன்னு சொல்லணும். நான் ரெடிமேட் உடைகளை வாங்கியதே இல்லை. என்னுடைய அளவுக்கு ஏற்ப அம்மா கனகச்சிதமா தைத்து கொடுப்பாங்க’’ என்றவர், ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளமோ படித்துள்ளார்.

‘‘திருமணத்திற்குப் பிறகு ரெடிமேட் ஆடைகள் அணிய ஆரம்பித்தேன். அதில் பல வகை டிசைன்கள் இருந்தாலும் அளவு அடிப்படையில் எனக்கு திருப்திகரமாக இல்லை. என் அளவிற்கான உடைகளை அணிந்து பழகியதால் எனக்கு ரெடிமேட் உடைகள் சரியான பொருத்தம் இல்லாதது போல் இருந்தது. அதனால் அந்த உடைகளை என்னுடைய அளவிற்கு ஏற்ப மாற்றி அமைத்து தைத்துக் கொள்வேன். அதனால் பலரும் நான் என் அளவிற்கு தைத்து அணிவதாக நினைத்தார்கள். நான் போடும் டிரஸ்கள் ரெடிமேட் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

நான் உடை அணிவதைப் பார்த்த பலரும் ‘ஒரு பொட்டிக் வைக்கலாமே’ன்னு பொரியை கிளப்பி விட்டாங்க. என் அம்மாவும், மாமியாரும்... ‘நாங்கதான் எதுவும் செய்யல... நீயாவது உனக்குப் பிடிச்சதை செய்’ன்னு சொன்னாங்க. என்னை தைரியமா துவங்க சொல்லி ஊக்கமும் கொடுத்தாங்க. 2022ல் என் நகையை அடமானம் வச்சு குறைந்த முதலீட்டில் ‘பிளஷ் பொடிக்’ ஆரம்பிச்சேன். என்னுடைய முக்கிய நோக்கம் என் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஃபிட்டிங்கான உடைகளை தைத்து தரணும் என்பதாக இருந்தது.

எங்களிடம் உடை எடுப்பவர்களுக்கு இலவசமாக தைத்து தருகிறோம். மேலும், அவர்கள் எங்களிடம் எடுக்கும் ரெடிமேட் உடைகளையும் கை, இடுப்பு பகுதியினை முழுதும் பிரித்து அவர்களின் உடல் அளவிற்கு ஏற்ப தைத்து தருகிறோம். தையல் பிரித்து அப்படியே தைக்கதானே போகிறோம் என்று நினைக்கலாம். ஆனால், ஒரு முழு சல்வாரினை தைக்கும் அளவிற்கு வேலை இருக்கும். என்ன துணியினை கட்டிங் செய்யும் வேலை மட்டும் இருக்காது.

அதற்கு துணியினை எடுத்து அதை சல்வாராக தைத்து தந்துவிடலாமே. எதற்கு இந்த எக்ஸ்ட்ரா வேலைன்னு பலரும் கேட்டாங்க. எனக்கான வாடிக்கையாளர்கள் அதிகமானதே நாங்க இதனை செய்து தருவதால்தான். பிடித்த உடையினை பொருத்தமான அளவில் தைத்து போடும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதை என் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறேன். அதற்காகத்தான் இவ்வளவு உழைப்பும்’’ என்கிறார் சௌமியா.

‘‘என் வாடிக்கையாளர்கள் பலரில் பாலூட்டும் தாய்மார்கள்தான் அதிகம். காரணம், டிசைனர் உடையில் பாலூட்ட வசதியாக ஜிப் வசதியினை நாங்க அமைத்து தருகிறோம். இதுதான்

அவர்களின் பெரிய குறையாக இருந்தது. சின்ன ஆல்ட்ரேஷன் வேலைதான். ஆனால், அது தாய்மார்களுக்கு பெரிய ரிலீஃபினை கொடுக்கும். டிசைனர் உடைகளை பாலூட்டும் தாய்மார்களுக்காக வடிவமைத்து தருவதில் நாங்க ஸ்பெஷலிஸ்ட்.

இந்தியா முழுதும் உள்ள தரமான டிசைனர் ரெடிமேட் உடைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். அதில் டெல்லியில்தான் புதுப்புது டிசைன்களில் உடைகள் இருக்கும். காட்டன் உடைகளுக்கு

பெங்களூர் பெஸ்ட். ஆரம்பத்தில் நானும் பல நஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். சில உடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வேன். அதற்கான கட்டணமும் அனுப்பிடுவேன். ஆனால், அவர்கள் பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றிவிடுவார்கள். அந்த இழப்பு எனக்கு பலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறது’’ என்கிறார் சௌமியா.

‘‘தற்போது ரெடிமேட் ஆடைகளை கஸ்டமைஸ் செய்து விற்பனை செய்கிறேன். சேலைகளுக்கு என பிரத்யேக கடை ஒன்றினை திறக்க வேண்டும். சென்னை மற்றும் வெளிநாட்டிலும் எனக்கான வாடிக்கையாளர்கள் இருக்காங்க. ஆன்லைன் விற்பனையை விட நேரடி விற்பனைதான் அதிகம். எங்களிடம் முழுமையாக தைக்கப்பட்ட சல்வார், சராரா, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய குர்த்தாக்கள், காட்டன் மற்றும் சிந்தடிக் டாப்ஸ்கள் என பல வகை உடைகள் உள்ளன. மேலும், திருமணம் போன்ற விழாக்களுக்கு பிரிமியம் கவுன்ஸ், லெஹங்கா செட்டும் எங்களிடம் இருக்கிறது. இவை அனைத்தையும் வாடிக்கையாளர்களின் அளவுக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து தருகிறோம்.

பெண்கள் அனைவருக்கும் தனிப்பட்ட திறமை ஒளிந்திருக்கும். அதை அவர்கள் தயங்காமல் வெளியே கொண்டு வரணும். அவர்களின் விருப்பத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைத்தாலே போதும், அனைத்து பெண்களும் சாதனையாளர்கள்தான். நான் இந்த இடத்திற்கு வர என் குடும்பத்தினர்தான் காரணம்’’ என்றார் பெருமிதத்தோடு சௌமியா செல்வராஜ்.

தொகுப்பு: கலைச்செல்வி