Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்னை மேரி என்னிடம் வருகிறார்!

நன்றி குங்குமம் தோழி

அருந்ததி ராய் புக்கர் பரிசு வென்ற புகழ்பெற்ற எழுத்தாளர், நாவலாசிரியர், அரசியல் கட்டுரையாளர். ‘The God of Small Things’ அவர் எழுதிய முதல் நாவல். தன்னுடைய இளமைப் பருவத்தை இந்த நாவலில் குறிப்பிட்டிருப்பார். இந்த நாவலுக்கு புக்கர் பரிசு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 20 வருடங்களுக்குப் பிறகு ‘The Ministry of Utmost Happiness’ என்ற தலைப்பில் மற்றொரு நாவலை எழுதினார்.

ஏழை விவசாயிகளை வெளியேற்றிய நிலச் சீர்திருத்தம் முதல் போபால் பேரழிவு, 2002 கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி வரை நவீன இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை இந்த நாவலில் குறிப்பிட்டிருந்தார். தற்ேபாது ‘Mother Mary Comes To Me’ என்ற தலைப்பில் தனக்கும் தன் தாய்க்கும் இடையே உள்ள சிக்கலான உறவினை இந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.

அருந்ததியின் தாயாரான மேரி ராய் கல்வியாளர் மட்டுமல்ல பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் போராளியாகவும் இருந்துள்ளார். மேரி 1967ம் ஆண்டு கேரளா, கோட்டயத்தில் ‘பள்ளிக்கூடம்’ என்ற பெயரில் பள்ளி ஒன்றை நிறுவினார். சுதந்திர சிந்தனை, படைப்பாற்றல், கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்க்கவும், ஊக்கவிக்கவும் இந்தப் பள்ளியினை அவர் நிறுவினார். பாடங்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இன்றும் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

கேரளத்தில் சிரியன் கிறிஸ்தவப் பெண்களுக்கு ஆண்களுக்குச் சமமான சொத்துரிமை வேண்டும் என்று நீதிமன்றங்களை அணுகி, இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றார். பள்ளியில் இயேசு நாதர் குறித்த நாடகம் அரங்கேற்ற தடை செய்யப்பட்டது. அதை எதிர்த்து நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றது மட்டுமில்லாமல் நாடகத்தை அரங்கேற்றியும் காட்டினார்.

சிரியன் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், இயேசு நாதர் குறித்த நாடகம் அரங்கேற்ற நீதிமன்றங்களைஅணுகியதும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் மேரியை விமர்சித்தனர். 89ம் வயதில் மேரி இறந்த போது அவரை தேவாலய வளாகத்தில் புதைக்கவில்லை, அவரின் பள்ளி

வளாகத்திலேயே எரியூட்டப்பட்டார்.

அருந்ததி ராய் தன் புத்தகத்தில் மேரி ராயை குறித்து உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ளார். அந்தப் புத்தகத்தை குறித்தும் தன் தாயைப் பற்றியும் பகிர்ந்தார்.

‘‘நானும் என் அண்ணாவும் அம்மாவை Mrs.Roy என்றுதான் அழைப்போம். அப்படித்தான் பழக்கப்படுத்தி இருந்தார்கள். காரணம், அவர்கள் ஆரம்பித்த பள்ளியில்தான் நானும் அண்ணாவும் படித்து வந்தோம். அவரின் பிள்ளைகள் என்பதால், எங்களுக்கு தனிப்பட்ட கவனம் இருக்கக்கூடாது. மற்ற பள்ளி மாணவர்களைப் போல் எங்களையும் நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.

நான் இந்தப் புத்தகத்தில் அவரின் குறைகளை சுட்டிக் காட்டவில்லை. இரண்டு வளர்ந்த பெண்களுக்கு இடையே உள்ள உறவு பற்றிதான் எழுதி இருக்கிறேன். யோசித்து பார்த்தால் சின்ன வயதிலேயே நான் அவர்களுக்கு ஒரு அம்மாவாகத்தான் இருந்திருக்கிறேன். எனது அம்மா வழி தாத்தா இந்தியாவில் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். மிகவும் கோபக்காரர். அம்மா தில்லி, சென்னை போன்ற இடங்களில் படித்ததால், ஆங்கிலம் சரளமாக பேசுவார்கள்.

தன் அப்பாவின் கோபத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் ெகாள்ள அம்மா அசாமில் தேயிலைத் தோட்டத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த ரஜீப் ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணனும் நானும் அசாமில்தான் பிறந்தோம். ஆனால், சில ஆண்டுகளில் அப்பாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு அம்மா எங்களை ஊட்டிக்கு அழைத்து வந்துவிட்டார். அங்கு தாத்தாவின் வீடு இருந்தது. அவர் ஆசிரியர் வேலைக்கு சென்றார்.

எங்களது குழந்தைப் பருவத்தில் நாங்க அம்மாவின் கோபத்தைதான் நிறைய பார்த்திருக்கிறோம். அவருக்கு கோபம் வந்துவிட்டால் அடித்துவிடுவார். அண்ணன் ரொம்ப அமைதியானவன்.

மேரி ராய்க்கு ஆஸ்துமா பிரச்னைஉண்டு. ஊட்டியில் இருந்ததால் அடிக்கடி அவருக்கு அந்தப் பிரச்னையால் உடல் பாதிப்படையும். அப்போதெல்லாம் குருசம்மாள் என்பவர்தான் எங்களைப் பார்த்துக் கொண்டார். எங்களை குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது எல்லாம் அவர் தான் எங்களுக்கு செய்வார். அவர் நன்றாக சமைப்பார். புழுங்கல் அரிசி சாதத்தில் உப்பு, பச்சை மிளகாயுடன் சேர்த்து அவர் சாப்பிட கொடுக்கும் போது அமிர்தமாக இருக்கும்.

அப்போது ஒருநாள் என்னுடைய தாய் மாமா, பாட்டியுடன் எங்க வீட்டிற்கு வந்தார். திருமணமான சிரியன் கிறிஸ்துவப் பெண்ணுக்கு அப்பா சொத்தில் பங்கில்லை. அதனால் எங்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னார். கேரளச் சட்டம் தமிழ்நாட்டில் செல்லாது, மீறி பிரச்னை செய்தால் போலீசிடம் சொல்வோம் என்றார் அம்மா. ஆனால், ஊட்டி குளிர் ஆஸ்துமாவால் அவதிப்படும் அம்மாவிற்கு எமனாக மாறியது. அவரால் சரியாக வேலைக்கும் போகமுடியவில்லை. அதனால் நாங்க கேரளாவில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு சென்றோம். தனக்கு வேலை கிடைக்கும் வரை அங்கு தங்குவதாக கூறினார். அப்பா இல்லாததால் ‘முகவரி இல்லாதவர்கள்’ என்று பலரும் எங்களை கேலி பேசினார்கள்.

அம்மா தன் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்கள், அவமானங்களை எங்கள் மீதுதான் இறக்கி வைத்தார். அவரின் கோபத்தின் சுமைத் தாங்கியாக நாங்க இருவரும் மாறினோம். அவருடைய கோபம், பகுத்தறிவற்றதாகவும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறியது. அவருக்கு எது கோபத்தை ஏற்படுத்தும், எது அவரை மகிழ்விக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியவில்லை. ஒருநாள் ஊட்டியிலிருந்து ஆங்கில கன்னியாஸ்திரி மேத்யூஸ் அம்மாவை பார்க்க வந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்துதான் கோட்டயத்தில் பள்ளியை தொடங்கினார்கள்.

அண்ணன், நான் என ஏழு மாணவர்களுடன் பள்ளி செயல்பட ஆரம்பித்தது.

மேரி சொல்லிக் கொடுக்கும் விதம் பலருக்கு பிடித்ததால், பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது. கலை அரங்குகள், விளையாட்டு மைதானம், கணினி அறை, நீச்சல் குளம், நூலகம் என்று பள்ளி விரிவடைந்தது. நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தில்லில் கட்டிடக்கலை படிக்கச் சென்றேன். படித்துக் கொண்டே வேலையும் பார்த்தேன். தில்லி வாழ்க்கை எனக்கு எளிய வாழ்வியலை கற்றுத் தந்தது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் தனக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என்று போராடி வென்றார். அதைக் கொண்டு பள்ளியின் தரத்தினை மேலும் உயர்த்தினார். மேரி தன் மாணவிகளிடத்தில் விதைத்த உத்வேகம் புரட்சிகரமானது.

அவர்களுக்கு வலுவான முதுகெலும்புகளைக் கொடுத்து நிமிர்ந்து நிற்கச் செய்தார். பழமையிலிருந்து விடுவித்தார். மேரி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘உன்னை விட நான் இந்த உலகில் வேறு யாரையும் நேசிக்கவில்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். எங்களுக்கிடையில் விருப்பு, வெறுப்புகள் இருந்த போதிலும், அவரை நேசிப்பதை நிறுத்த எனது மனம் மறுத்தது. மேரியின் முடிவு நெருங்கிவிட்டதாக உணர்ந்தேன். ‘நான் இதுவரை அறிந்ததிலேயே மிகவும் அசாதாரணமான, அற்புதமான பெண் நீங்கள்... நான் உங்களை வணங்குகிறேன்’ என்று விரல்கள் நடுங்க தட்டச்சு செய்தேன்’’ என்று தன் தாயுடன் இருந்த உறவினை நினைவுகூர்ந்தார் அருந்ததி ராய்.

தொகுப்பு: பாரதி