Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரணத்தை தழுவிய மிஸ் டார்க் குயின்

நன்றி குங்குமம் தோழி

“ப்ளாக் கலர் கார் வேணும்... ப்ளாக் கலர் டிரஸ் வேணும்... ப்ளாக் கலர் வாட்ச் வேணும்... ப்ளாக் கலர் ஹேண்ட் பேக் வேணும்... ஆனால், ப்ளாக் கலரில் பொண்ணு இருந்தால் மட்டும் வேண்டாமா?” எனத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தவர் மிஸ் டார்க் குயின் சான் ரேச்சல்.தன் கருப்பு நிறத்தால் பல்வேறு புறக்கணிப்புகளுக்கும், கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானவர். நிறத்தால் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில்தான் மாடலிங் துறையில் தனி முத்திரை பதித்து வந்தார். கருப்பு நிறம் காரணமாய் மாடலிங் துறைக்குள், பல்வேறு எதிர்வினைகளை சந்தித்ததுடன், நிறவெறிக்கு எதிராகவும் குரல் கொடுக்கவும் தொடங்கினார். கூடவே பெண்களின் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தீவிரமாகப் பணியாற்றினார்.

மாடலிங் துறைக்கு ஏற்ற நிறத்தில் தான் இல்லையென ரொம்பவே புறக்கணிக்கப்பட்டதாக புன்னகைத்தபடி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த சான் ரேச்சல் சிறந்த மாடல், மாடலிங் பயிற்சியாளர், மாடலிங் சார்ந்த போட்டிகளை நடத்தியவர், கூடுதலாக பேச்சாளர் எனவும் வலம் வந்தவர். மாடலிங், அழகிப்போட்டி போன்றவற்றுக்கு அழகு, நிறம், கட்டுடல் இவற்றைத் தாண்டி வேறொன்றும் முக்கியமான ஒன்றாய் தேவைப்பட்டது. அதுதான் வசீகர நடை. மாடலிங் செய்பவர்கள் கால்கள் பின்னிக்கொள்ள நடந்து கேட் வாக் செய்வது எளிதான விஷயமன்று. சான் ரேச்சல் செய்யும் கேட் வாக்கிற்கு பிரபலங்கள் பலர் ரசிகர்களாய் இருக்க, கேட் வாக்கை நேர்த்தியாகப் பயின்று, வசீகர நடை மூலம் பிரபலம் அடைந்து அழகிப் போட்டிகளில் தனித்துவம் பெற்றார் சான் ரேச்சல்.

தனது நடையில் கலந்திருக்கும் வசீகரத்தோடு, கவர்ந்திழுக்கும் தன் கருமை நிறத்தை மேம்படுத்திக் கொண்டவர், கண்களில் தெரியும் தன் கூடுதல் ஈர்ப்புடன் மாடலிங் துறைகளில் ஏற்பட்ட தடைகளை உடைத்து முன்னேறியவாரே, லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் நடந்த சர்வதேச மாடலிங் போட்டி களில் இந்தியா சார்பில் பங்கேற்றார். தனது 25 வயதிற்குள்ளாகவே மிஸ் டார்க் குயின், மிஸ் புதுச்சேரி, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட், மிஸ் டார்க் குயின் ஆஃப் தமிழ்நாடு, குயின் ஆஃப் மெட்ராஸ், மிஸ் ஆஃப்ரிக்கா, கோல்டன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் சான் ரேச்சல்.

புதுச்சேரி காராமணிக் குப்பத்தைச் சேர்ந்த சங்கரப் பிரியா என்ற சான் ரேச்சல், புதுச்சேரியை சேர்ந்த ஃபேஷன் டிசைனர் சத்யா என்பவரை கடந்த ஆண்டு காதல் மணம் புரிந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு கடுமையான மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், பின்னர் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

“டாக்டர் வெள்ளையாக இல்லை கருப்பா இருக்காரு என்பதற்காக ஆபரேஷன் பண்ணக் கூடாதுன்னு சொல்லப் போறதில்லை. டீச்சர் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருந்தால் வகுப்பு எடுக்கக்கூடாதுன்னு சொல்லப் போறதில்லை. நீதிபதிகள் கருப்பா இருந்தால் தீர்ப்பு வேண்டாம்னு சொல்லப் போறதில்லை. ஹீரோயினி நல்லா வெள்ளையா இருந்து, ஹீரோ எவ்வளவு கருப்பா இருந்தாலும் படம் பார்க்காமல் இருக்கப் போறதில்லை. ஆனால், மாடலிங் துறையில் இருக்கும் பெண் மட்டும் வெள்ளையா இருந்தால்தான் அழகா?” என்ற கேள்விகளோடு நிறவெறிக்கு எதிராய் துணிச்சலான கருத்துக்களை பேசியும், களமாடியும் வந்த சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தர, தனது மரணத்திற்கு கணவரோ, மாமியாரோ காரணமில்லை என கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் சொல்லப்படுகிறது.

ஃபேஷன் ஷோக்களை நடத்துவதற்காக கடன் பெற்ற நிலையில், கடுமையான நிதி நெருக்கடியில் சான் ரேச்சல் இருந்ததாகவும், இதனால் தவறான முடிவை தேடியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில், கருப்பழகியின் மறைவுக்கான உண்மையான காரணத்திற்கான திரை விலகாமலே மர்மமாக இருக்கிறது.துணிச்சலோடு நிமிர்ந்து நின்று, வெற்றிகள் பல குவித்த மிஸ் டார்க் குயின் சான் ரேச்சலின் தற்கொலை முடிவினை, மாடலிங் துறையை சேர்ந்த பலரும் அதிர்ச்சியோடு பார்த்து வருகின்றனர்.

தொகுப்பு: மணிமகள்