Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனதை ஒருநிலைப்படுத்தும் மண்டாலா ஓவியங்கள்!

நன்றி குங்குமம் தோழி

தரை அலங்காரம், முக்கு, ரங்கோலி என அழைக்கப்படும் கோலம் எப்படி நம் தமிழ்நாட்டின் மரபுகளில் ஒன்றோ, அதே போல்தான் இந்த ஓவியங்களும்; நேபாளத்தில் மண்டாலா... ராஜஸ்தானில் மந்தனா என்று இந்த ஓவியங்கள் அழைக்கப்படுகின்றன. வீட்டை அலங்கரிக்க இந்த ஓவியங்களை தரை மற்றும் சுவர்களில் வரைகிறார்கள். ஆரம்பத்தில் வீட்டுச்சுவர்களில் மட்டுமே

வரையப்பட்ட இந்த மண்டாலா ஓவியங்களை காலப்போக்கில் பல்வேறுவிதமாக மாற்றி அமைத்துக்கொண்டனர்.

அதாவது, பெண்கள் தாங்கள் வரையும் ஓவியங்களை விற்பனை செய்ய துவங்கினார்கள். அவ்வாறு படிப்படியாக வளர்ந்து தற்போது சுவர்களை அலங்கரிக்க மட்டுமில்லாமல், உடைகள், கைப்பைகள், நகைகள்... ஏன் கைகளில் இடப்படும் மருதாணி டிசைன்களாகவும் இந்த ஓவியங்கள் இப்போது பிரபலமாகி வருகிறது. இந்த ஓவியங்களை வடிவமைப்பவர்களும் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.

பொதுவாக இந்தக் கலையினை ராஜஸ்தான் பெண்கள்தான் அதிகமாக செய்து வந்தார்கள். அவர்களின் வீடுகள் முழுக்க இந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்படுவது அவர்களின் பாரம்பரிய வழக்கம். அங்கிருந்து இந்தக் கலை தற்போது பல இடங்களில் பரவி, ஆர்வமுள்ளவர்கள் இதனை கற்றுக்கொள்வது மட்டுமில்லாமல் கற்பித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த லஷ்மி கண்ணன், இந்த மண்டாலா ஓவியத்தின் ஒரு வகையான Dot mandala (புள்ளிகள் மூலம் வரையப்படுவது) கொண்டு பல அழகான கலைப்பொருட்களை உருவாக்கி வருகிறார்.

‘‘என் அப்பா ஓவியக் கலைஞர். அவங்க 4, 5, 6 அடி உயரம் கொண்ட பெரிய கேன்வாஸ்களில் வரைவாங்க. ஓவியம் வரைவதில் அக்ரலிக், ஆயில், பென்சில் ஆர்ட் என பல வகை உள்ளது. அப்பா ஆயில் மற்றும் பேனாக் கொண்டு பல ஓவியங்களை வரைந்து அதனை கண்காட்சியாக அமைப்பார். மேலும் பரிசாகவும் அவர் வரைந்த ஓவியங்களை கொடுப்பது வழக்கம். ஆனால் அவர் எனக்கு இந்தக் கலையை கற்றுத்தரவில்லை. ஓவியம் என்ற கலை உள்ளிருந்து வரணும், யாரையும் கட்டாயப்படுத்தி வரக்கூடாது என்பதில் அப்பா ரொம்பவே உறுதியா இருப்பார்.

அவர் என்னிடம் நான் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாதுன்னு வற்புறுத்தியது கிடையாது. அதனால் நானும் ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைவதில் பெரிய அளவில் கவனம் செலுத்தியதில்லை. கல்லூரி பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். திருமணமானது. எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த போது, தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. நான் பாட்டு பயின்று இருந்ததால், வீட்டில் குழந்தைகளுக்கு பாட்டு வகுப்புகள் எடுத்தேன். அதன் பின் என் கணவரின் வேலை காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்தது. அங்கு சென்ற பிறகுதான் எனக்கு ஓவியத்தின் மேல் தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது.

20களின் துவக் கத்தில் சென்னையில் ஓவியங்களுக்கான தனிப்பட்ட கடைகள் கிடையாது. படங்களுக்கு கண்ணாடி பிரேம் போடப்படும் கடைகளிலும் தஞ்சாவூர் ஓவியங்கள்தான் இருக்கும். ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. ஓவியங்கள் தொடர்பான நிறைய கடைகள் இருந்தது. ஓவியங்களை வரைய பயன்படுத்தப்படும் பிரஷ் வகைகளே நூற்றுக்கும் மேற்பட்டு இருக்கும். மேலும் அங்கு ஓவியங்களை கேன்வாசில்தான் வரைய வேண்டும் என்றில்லை.

சின்னக் கல்லில் கூட வரைந்து அதனை விற்பனை செய்வார்கள். இவை எல்லாம் என்னை மிகவும் ஈர்த்தது. அதுதான் என்னை ஓவியங்கள் வரையத் தூண்டியது. அப்பா வரையும் போது நான் கூட இருந்து பார்த்திருக்கேன். அதனால் அதன் அடிப்படை விஷயங்கள் எனக்கு தெரியும். முதலில் ஒன்று இரண்டு பெயின்டுகளை வாங்கினேன். அதில் என் மகனுக்கு கல்லில் ஓவியங்களை வரைந்து கொடுத்தேன். அதை பார்த்தவர்கள் தங்களுக்கும் வரைந்து தரச் சொன்னார்கள். அப்படித்தான் 2016ல் இந்தப் பயணம் தொடங்கியது’’ என்றவர், மண்டாலா ஓவியங்கள் குறித்து பகிர்ந்தார்.

‘‘மண்டாலாவில் இரண்டு வகை இருக்கு. ஒன்னு டாட் (Dot mandala), மற்றொன்று ஃப்ரீ ஹேண்ட் (Freehand mandala). இதில் எனக்கு டாட் மண்டாலாதான் பிடித்திருந்தது. காரணம், இது ஒரு தெரபி. இது நம் மனதினை ஒருநிலைப்படுத்தும், புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இதனை நான் கற்றுக்கொள்ள தனிப்பட்ட பயிற்சி எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. சும்மா வரைந்து பார்க்கலாம் என்றுதான் துவங்கினேன். அந்த சமயம் எனக்கு கிடைத்த திருப்திக்கு அளவே இல்லை.

ஒரு வட்டத்தில் துவங்கி ஒரு வட்டத்திலேயேதான் இந்த ஓவியம் முடியும். நம்முடைய வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். எங்கு ஆரம்பிக்கப்படுகிறதோ அங்குதான் நிறைவாகும். இதனை சாதாரண காகிதத்தில் மட்டுமில்லாமல் தட்டுக்கள், டிரே, கல், கீச்செயின், டைனிங் டேபிள், சுவர்கள் என பல மீடியம்களில் நான் வரைய ஆரம்பித்தேன். முதலில் சுலபம் என்று நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்று தெரிந்தது. அதனால் அது குறித்து ஆராய்ச்சி செய்தேன். காரணம், சில பொருட்களில் டிசைன் செய்யும் போது, நாளடைவில் அந்த பெயின்ட் அழிந்து போகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கீச்செயினில் வரையும் போது நாம் அதனை அன்றாடம் பயன்படுத்துவதால் சீக்கிரம் அழிந்துவிடும். அதைத் தவிர்க்க, டாட் மண்டாலா ஓவியத்துடன் ரெசின் கலையும் இணைத்து செய்தேன்.

இதனைத் தொடர்ந்து ரெசினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம், மரச்சாமான்கள், செராமிக் மற்றும் மண் சார்ந்த பொருட்களில் மண்டாலாவினை எவ்வாறு வரையலாம் என்று ஆராய்ச்சி செய்தேன். அதற்கு ஏற்ப என் மண்டாலா கலையை மாற்றி அமைத்தேன். மண்டாலாவின் அடுத்த பகுதி, யந்திரம். இதைப் பற்றி மூன்று மாதங்கள் முழுமையாக படித்து, அதையும் மண்டாலாவில் கொண்டு வந்தேன். யந்திரம் சிவனும் சக்தியும் சேர்ந்து இருப்பது.

அதை வரையும் போது, நம் மனநிலை நேர்மறையாகவும், தூய்மையாகவும் இருந்தால் தான் இதனை வரைய முடியும். தற்போது சௌக்கி ப்ளேட்சினை (Chowki Plates), வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறைகளில் பயன்படுத்துகிறார்கள். அதில் மண்டாலா ஓவியங்களை வரைந்து தரச் சொல்லியும் கேட்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நாம் மற்ற கலைஞர்களைவிட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக காய்ந்த இலைகளில் வரைய துவங்கினேன்’’ என்று புன்னகைத்தார்.

‘‘நான் என் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்த பிறகு கிடைக்கும் நேரத்தில்தான் மண்டாலா ஓவியங்களை வரைவேன். மேலும் இதுநாள் வரை நான் மட்டுமே இந்த ஓவியங்களை என் கைப்பட வாடிக்கையாளர்களுக்கு வரைந்து தருகிறேன். காரணம், ஒரு ஓவியத்தை ஒருவர் வரைவதற்கும் அதை மற்றவர் வரைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வரைவேன். அதற்காக காலம், நேரம் எல்லாம் பார்க்கமாட்டேன்.

ஆனால் இதற்காக நான் தனிப்பட்ட ஆட்களை நியமித்தால், அவர்கள் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் வரைவார்கள். சில சமயம் நாம் எதிர்பார்த்தது போல் இருக்காது. ஆனால் எனக்கு என் மகள் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் ஒத்துழைப்பு தருவார்கள். சின்னச் சின்ன உதவிகளை அவர்கள் செய்து கொடுத்திடுவார்கள். அவர்கள் தான் என் பலம்.

நான் வரைந்து கொடுப்பது மட்டுமில்லாமல், வர்க் ஷாப்களும் நடத்துகிறேன். கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி வரையலாம் என்று சொல்லிக் கொடுத்தேன். தற்போது வின்டர் மற்றும் சம்மர் வர்க்‌ஷாப்புகள் மட்டுமே நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சில ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சில குழந்தைகளின் படிப்பிற்காகவும் உதவி செய்கிறேன்’’ என்று குறிப்பிட்ட லஷ்மி, மண்டாலாவுடன் வார்லி, லிப்பான் போன்ற பலவகை ஓவியங்களை ஒன்றிணைத்து பியூஷன் ஆர்ட்டாகவரைந்து வருவதோடு, தாய்ப்பால் மூலம் செய்யப்படும் நகைகளிலும் டாட் மண்டாலாவை வரைந்து வருகிறார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்