நன்றி குங்குமம் டாக்டர்
சரும பாதுகாப்பு என்று எடுத்துக் கொள்ளும்போது, ரசாயன கலப்பில்லாத சரும ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது மிக மிக அவசியம்.அந்த வகையில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய். இந்த எண்ணெய் தாமரை மலரை மட்டுமின்றி, விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
தாமரை எண்ணெயில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. எனவே, சரும பராமரிப்புக்குத் தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. தாமரை எண்ணெயில் உள்ள ஒலிகோசாக்கரைடு, சரும செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. சருமத்தின் இளமைக்கு அவசியமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க உதவும். சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இதனால், செல்கள் புத்துயிர் பெறும். தாமரையை நேரடியாகப் பயன்படுத்துவதை விட, எண்ணெயாகப் பயன்படுத்தும் போது, எளிதில் ஊடுருவி சருமத்தைப் பாதுகாக்கிறது.
தாமரை எண்ணெயின் பலன்கள்
தாமரை எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வர சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்..
இந்த எண்ணெயை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றி சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தருகிறது.
தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தாமரை எண்ணெய் தலைமுடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை உடையது. தாமரை எண்ணெயின் முக்கிய பயன்கள், சருமத்தை மென்மையாக்குதல், இறந்த செல்களை நீக்குதல், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரித்தல் மற்றும் மன அமைதியை அளித்தல் ஆகும்.
சருமத்தைப் புதுப்பித்தல்: தாமரை எண்ணெய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
ஈரப்பதம் அளித்தல்: சருமத்திற்கு தேவையான சத்துக்களை அளித்து, சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
சருமப் பிரச்னைகளை சரிசெய்தல்
சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்துவதன் மூலம், சருமப் பிரச்சனைகளை குறைத்து, ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது.
தொகுப்பு: ரிஷி