நன்றி குங்குமம் தோழி
ஒரு பெண்தான் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அவளுக்கு மட்டுமே அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. பெண்களுக்கென்றே குறிப்பிட்ட வேலை, செயல், நடத்தை, விதிகள் போன்றவற்றை வகுத்து வைத்திருக்கிறார்கள். இந்த விதிகளை உடைத்து, ஆண் பிள்ளைகள் வீட்டிலும் சமூகத்திலும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும், பெண் பாதுகாப்பில் ஆணின் பங்கு, ஆண், பெண் பாலின சமநிலை போன்றவற்றை கற்பித்து வருகிறது ஈக்குவல் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் (Equal Community Foundation) என்ற புனேவை சேர்ந்த அமைப்பு. மேலும் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்து விளக்குகிறார் அமைப்பின் தகவல் தொடர்பு நிர்வாகி உரஸ்மிதா கோஷ்.
“பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு சமூக மேம்பாடு குறித்த பிரச்னைகளை சோலார் சினிமா மூலம் காட்சிப்படுத்தி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் அமைப்பின் முதல் திட்டமாக இருந்தது. பின்னர் இந்த அமைப்பின் நிறுவனர்களாகிய வில் முய்ர் மற்றும் ருஜுதா தெரதேசாய் இருவரும் தொடர்ந்து சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்திய போது, பாலின சமநிலையை மேம்படுத்த முயற்சித்தனர்.
குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஆணாதிக்கம் ஓங்கியும் சமூகத்தினரிடையே பாலின சமநிலைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே ‘ஆக்ஷன் ஃபார் ஈக்குவாலிட்டி’ (Action For Equality) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சிறுவர்களின் நடத்தைகளில் சிறந்த மாற்றங்களை கொண்டுவந்து அவர்களுக்கு பாலின சமத்துவம் குறித்தான அறிவு, உடன் இருப்பவர்களை ஆதரிப்பது போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டது. இது அவர்களை சிறந்த தலைமைத்துவ பண்புடையவர்களாக உருவாக்கும்.
சிறுவர்களை வளர்க்கும் போது பிற்போக்குத்தனமான செயல்களையும், சிந்தனைகளையும் அவர்களுக்குள் விதைக்காமல் பாலின சமத்துவத்தை கற்றுக்கொடுத்து சிறுவர்கள் வளர்ப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 13 முதல் 17 வயது வரையுள்ள பதின்பருவத்தில் உள்ள சிறுவர்களுக்கு பாலின சமத்துவம் குறித்தான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இந்த வயதில் அவர்கள் எதை கற்றுக்கொள்கிறார்களோ அதை பொருத்துதான் அவர்களின் நடத்தைகளும் செயல்களும் அமையும். எனவே இந்த பதின்பருவ வயதில் சரியான நேர்மறையான விஷயங்களை அவர்களுக்குள் விதைப்பது அவசியம். தவறான நடத்தைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவி வருகிறோம்.
வீட்டு வேலைகள், குடும்பத்தினரை பராமரிப்பது பெண்களின் வேலையாகவும். ஆண் என்றால் வெளியில் உள்ள வேலைகள் உதாரணத்திற்கு மின்சாரக் கட்டணம் செலுத்தப் போவது, கடைகளில் பொருட்கள் வாங்குவது என்று செய்யும் வேலைகளில் கூட பாலின வேறுபாடுகளை காலம் காலமாக அடுத்தடுத்த தலைமுறையினர்களுக்கு கற்பித்து இருக்கிறோம். சிறுவர்கள் பெற்றோர்களையும் சமூகத்தில் இருப்பவர்களை பார்த்துதான் வளர்கிறார்கள். பாலின சமநிலையே இல்லாத ஒரு சமூகத்தை பார்க்கும் போது அவர்கள் மனதிலும் பிற்போக்கு எண்ணம் ஏற்படும். சிறுவர்கள் மனதில் ஆணாதிக்க எண்ணத்தினை மறைமுகமாக விதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
வீட்டில் உள்ள பெண்கள் வேலைகளை செய்யும் போது சமயங்களில் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற சிந்தனை நீண்ட காலங்களுக்கு பின்தான் எழுந்தது. ஆனால் இது பெண்களுக்கு உதவி செய்வது என்பதையும் தாண்டி வேலைகளை பகிர்ந்து கொள்வதும் தங்களுடைய கடமை என்கிற உண்மையையும் அவர்கள் உணர வேண்டும். சிறுவர்களின் வளர்ப்பில் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பாலின சமத்துவத்துடன் சிறுவர்களை வளர்த்தல் வேண்டும் எனும் நோக்கத்துடன் ‘ப்ராஜெக்ட் ரெய்ஸ் (Project Rise)’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. ‘ப்ராஜெக்ட் ரெய்ஸ்’ என்பது பாலின மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையில் சிறுவர்களை ஈடுபடுத்த பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு திட்டமாகும்.
யுனெஸ்கோ(UNESCO), ஐசிஆர்டபிள்யூ(ICRW), டயட்(DIET) மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து, ஈக்வல் கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் பல்வேறு அமைப்புகளில் பாலின மாற்ற திட்டங்களை வழங்குவதில் 89க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவுஅளித்துள்ளது. சிறுவர்களுக்கான சிறப்பு வகுப்புகளில் பெண் பிள்ளைகளுடன் எவ்வாறு பழகுவது, சம மரியாதை அளிப்பது, வீட்டு வேலைகள் செய்வதும் ஆண்களின் கடமைதான் என்பதை பாடங்கள் மூலமாக உணர்த்துகிறோம்.
மேலும் பெண்களுக்கான உரிமைகளை அளிப்பது குறித்தும் செயல்பாடுகள் மூலம் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து பெண் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி ஆண் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது” என்றவர், ‘ப்ராஜெக்ட் ரெய்ஸ்’ திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தை பற்றியும் பகிர்கிறார்.
“சிறுவர்கள் இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கு முன் அவர்களிடம் பாலின சமத்துவம் தொடர்பான சில கேள்விகள் கேட்கப்படும். அதன் பிறகு பயிற்சிகள் துவங்கும். பயிற்சி முடித்த பிறகு மீண்டும் சில கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படும். பயிற்சிக்கு முன் பின் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலே அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்தும்.
வீட்டிலும் அவர்கள் அனைத்து வேலைகளையும் செய்வதாக பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிறுவன் பள்ளிப்படிப்பை முடித்திராத தன் தாயிடம், ‘பெண்களுக்கு படிப்பு அவசியம் என்பதை எடுத்துக்கூறி அவர் படிக்க உதவுகிறேன்’ என்கிறான். பெண்களும் மனித உரிமைகள் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியாமல் இருந்தார்கள். இன்று அது குறித்து பேசுகிறார்கள். தங்களின் பொறுப்புகளை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பாலின மாற்றம் ஒவ்வொரு வீட்டிலும் துவங்க வேண்டும். விருப்பமில்லாத செயல்களுக்கு ‘நோ’ (No) சொல்லவும் பழகிக்கொள்கின்றனர். இதுபோன்ற சிறந்த மாற்றங்கள்தான் இன்றைய சமூகத்திற்கு தேவை. பாலின சமநிலை என்பது பெண்களை மதிப்பது பற்றியது மட்டுமல்ல... சமத்துவம் அனைவருக்குமானது. சிறந்த சமூக மாற்றத்திற்காக நாம் செயல்படவேண்டிய நேரம் இது’’ என்றார் உரஸ்மிதா கோஷ்.
குழந்தை திருமணத்தை தடுத்தேன்! - ஆனந்த், ‘ஆக்ஷன் ஃபார் ஈக்குவாலிட்டி’ திட்டத்தில் பங்கேற்ற சிறுவன். ‘‘இவர்களுடன் என்னுடைய பயணம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. நான் இதில் சேர்ந்த போது, சுவாரஸ்யமான திரைப்படங்கள் மூலம் நிறைய விஷயங்களை உணர்த்தினார்கள்.
சில வாரங்களிலேயே என்னை, என் குடும்பத்தை, என் சமூகத்தை ஒரு புதிய நிலையில் பார்க்க கற்றுக்கொண்டேன். திட்டத்தில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற பிறகு அங்கு கற்றதை நடைமுறைப்படுத்துவது எனக்கு கடினமாக இருந்தது. என் சமூகத்தில் உள்ள இளைய சிறுவர்கள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் எப்படிக் கடைபிடித்தார்கள் என்பதைப் பார்த்த போது எனக்கு இருக்கும் பொறுப்பையும், பிற்போக்குத்தனமான சமூக விதிமுறைகளை சவால் செய்வதில் என் பங்கினை உணரத் தொடங்கினேன்.
கடந்த ஆறு ஆண்டுகளில், நான் கடுமையாக முயற்சித்து என் நடத்தையிலும் முடிவெடுக்கும் திறன்களிலும் கணிசமான மாற்றத்தைக் கண்டேன். என்னால் முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்காத நடவடிக்கையை எடுக்கும் துணிச்சல் எனக்கு கிடைத்தது. குழந்தை திருமணம் செய்ய முயன்றவர்களை தடுத்தேன். இவர்களின் உதவி இல்லாமல் நான் இந்தச் செயலை செய்திருக்க முடியாது.”
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்