நன்றி குங்குமம் தோழி “பார்த்தும்மா... மெதுவா வா... மாப்ள முல்லைக்கு கார்ல ஏற உதவி பண்ணுங்க... பார்த்து... ஜாக்கிரதை...”பாண்டியா இங்க வா... இந்தப் பைகள், கூடைகளை எல்லாம் கார் பூட்ல எடுத்து கவனமா அடுக்கு... ஃப்ளாஸ்க் இருக்கு, உடைஞ்சிடப்போகுது.மகள் முல்லையின் பிரசவத்திற்கு ஹாஸ்பிட்டல் அழைத்துச்செல்ல விறுவிறுவென ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார் மீனாட்சி. டெலிவரிக்கு குறிப்பிட்ட...
நன்றி குங்குமம் தோழி
“பார்த்தும்மா... மெதுவா வா... மாப்ள முல்லைக்கு கார்ல ஏற உதவி பண்ணுங்க... பார்த்து... ஜாக்கிரதை...”பாண்டியா இங்க வா... இந்தப் பைகள், கூடைகளை எல்லாம் கார் பூட்ல எடுத்து கவனமா அடுக்கு... ஃப்ளாஸ்க் இருக்கு, உடைஞ்சிடப்போகுது.மகள் முல்லையின் பிரசவத்திற்கு ஹாஸ்பிட்டல் அழைத்துச்செல்ல விறுவிறுவென ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார் மீனாட்சி.
டெலிவரிக்கு குறிப்பிட்ட தேதி நாளைக்குத்தான்... வலியும் இன்னும் வரல.ஆனாலும், டாக்டரின் அறிவுரைப்படி இன்னைக்கே அட்மிட் பண்றாங்க.
“ஏங்க வாங்க... நல்ல நேரம் முடியறத்துக்குள்ள கோவிலுக்கு போய்ட்டு அப்புறம் ஹாஸ்பிட்டல் போகணும்... வாங்க சீக்கிரம்...” கணவர் வேதகிரியையும் அவசரப்படுத்தினார் மீனாட்சி. உள்ளே அறையில் தூங்கிக்கொண்டிருந்தாள் முல்லையின் முதல் மகளான மூன்றரை வயதுக் குழந்தை யாழினி. “துளசி... ஒரு மணி நேரத்தில வந்திடறேன். அதுவரைக்கும் சமாளிச்சிக்கோ. யாழினி உன்னிடம் சமத்தா இருந்துப்பா. நான் அட்மிட் செய்துட்டு உடனே வந்திடறேன், அப்புறம் நீ போய் முல்லைக்கு துணையாயிரு’’ என்று மகளின் பிரசவத்திற்கு உதவி செய்ய
வந்திருக்கிற தங்கையிடம் சொல்லிட்டு கிளம்பினார் மீனாட்சி.
அடுத்த நாள் முல்லை அழகான பெண் குழந்தையை பிரசவித்தாள். குடும்பங்கள் சுகப் பிரசவம் கேட்டு மகிழ்ந்தன.குடும்பத்தினரோடு மகிழ்ச்சியை கொண்டாடிகிட்டிருந்த முல்லையின் கணவன் ஆதித்தனை அழைத்த டாக்டர் ‘‘மிஸ்டர் ஆதித்தன்... நீங்க ஏற்கனவே சொன்னபடி குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனும் கையோடு இப்போ முல்லைக்கு பண்ணிடலாம் இல்லையா? இந்த ஃபார்ம்ல ஒரு கையெழுத்துப் போடுங்க” என்றார்.
ஆதித்தன் கேஷுவலாக வாங்கி கையெழுத்துப் போட, மீனாட்சியின் உடன்பிறப்புகள் என்ன என்பது போல் தயக்கமாக மீனாட்சியை பார்த்தனர். ‘‘மாப்பிள்ளை, நீங்களும் முல்லையும் ஏற்கனவே பேசி எடுத்த முடிவா இது? முல்லைக்கு தெரியும்ல?’’
இயல்பாய் கேட்டார் மீனாட்சி.‘‘ஆமாம் அத்தை,பிறக்கறது என்னக் குழந்தையா இருந்தாலும் குடும்பக் கட்டுப்பாடு செய்துடலாம் என்று நானும் முல்லையும் ஏற்கனவே செக்கப் வரும் போது டாக்டரிடம் சொல்லியதுதான். ரெண்டாவதும் பெண் குழந்தைங்கறதால அவர் மறுபடி கன்ஃபர்ம் செய்துக்கிட்டார், அவ்வளவே. உள்ளே முல்லையிடமும் கேட்டு அவள் சம்மதம் சொல்லிட்டாளாம்” என்றான் ஆதித்தன்.
சரியென்று மீனாட்சியும் அடுத்த வேலையை பார்க்க நகர்ந்தார். ஆதித்தனும் நகர, அவன் அம்மா தேவகியும் அப்பா மணியும் அவனருகில் வந்து ‘‘ஆதித்தா, என்னப்பா இரண்டாவதும் பொட்டைக்குட்டியாக பொறந்திருக்கு... நீ என்னடான்னா குடும்பக்கட்டுப்பாடு பண்ண சொல்ற... ஒரு ஆண் வாரிசு வேண்டாமாடா உனக்கு, போய் ஆபரேஷன் பண்ண வேண்டாம்னு சொல்லுடா” என்றனர்.ஆதித்தன், ‘‘ரெண்டும் பொண்ணுதான்... அதனால என்ன இப்போ? மேலே எதுவும் பேசிக் குழப்பிக்கிடாம போய் பேசாம உட்காருங்க அம்மா” என்றவன், முல்லை ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வரும் முன், குழந்தையை இவர்களிடம் தரும் முன்னர், குழந்தைக்கு தேவையானவைகளை வாங்க மீனாட்சியிடம் ஏற்கனவே அவர் எழுதி வைத்திருந்த லிஸ்டை வாங்கிக் கொண்டு வேகமாக கிளம்ப, மீனாட்சியின் தம்பியும் அவனுடன் சேர்ந்து கிளம்பினார்.
தேவகி, அந்த ஹாஸ்பிட்டலில் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டே இருந்தார். ஆதித்தனும் அரைமணி நேரத்தில் திரும்பி வர, முல்லையை வார்டுக்கு அழைத்து வந்தார்கள். மனைவியை பார்த்து மனம் பூரித்து புன்னகைத்தவன் அவளருகில் போய் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். சோர்வும், வலியுமாக இருந்தாலும், ஒளிரும் கண்களுடன் அவன் கன்னத்தை மெதுவாக தட்டிக்கொடுத்தாள் முல்லை.
அவர்களுக்குள் நடந்த இந்த பரிமாற்றத்தை மீனாட்சி மனநிறைவுடன் பார்த்து நிம்மதியானார். தேவகியின் புலம்பலால் மாப்பிள்ளையின் மனதில் இரண்டாவதும் பெண் குழந்தையை பெற்ற முல்லை மேல் அதிருப்தி ஏற்பட்டிருக்குமோ என்று இதுவரை பயந்தவர் இப்போது பயம் தெளிந்து நிம்மதியானார்.
குழந்தையை முல்லையின் பெட்டுக்கு நர்ஸ் தூக்கி வர, அதுவரை ஆவலுடன் காத்திருந்த குடும்பத்தினர் அனைவரும் பின்னாடியே சென்றனர்.
அன்றலர்ந்த இளங்காலை செவ்விதழ் மலர் போல் மென்மையும், நிறமும் கொண்டு பளிச்சென்ற நிலவாக ஒளிர்ந்த, கண்களை சுகமாய் சுருக்கி சுருக்கி, மூடி மூடி திறந்த அந்த புது பெண் மழலை செல்வத்தைப் பார்த்து அனைவருக்கும் இதயத்தில் புது ரத்தம் பாய்ந்தோடுவது போல் புத்துணர்வு தொற்றிக்கொண்டது. மரண வாயிலில் உள்ளோமோ என்று பிரசவ வலியிலிருக்கும் போது உணர்ந்து, அப்பாடா... தப்பி பிழைத்துவிட்டோம் என்று மயக்கம் தெளிந்து தன் குழந்தையை பார்த்தாள் முல்லை. ‘‘செல்லமே... உன்னை என் குழந்தையாய் வேண்டி, தேவலோகம் போய் பரிசாக உன்னைக் கேட்டு வாங்கி வந்தேனாக்கும்... தங்கக்குட்டி...’’ உவகையுடன் கொஞ்சினாள் முல்லை.
அவள் கணவன் ஆதித்தன் அவர்களின் முதல் குழந்தை யாழினியை அழைத்து வந்தான். யாழினி ஆவலுடன் தங்கச்சிப் பாப்பாவைப் பார்த்து கை கொடுக்க... குட்டிப் பாப்பாவோ அவள் கையை தன் உள்ளங்கைக்குள் பிடித்து வைத்துக்கொண்டது. பரவசமான யாழினி துள்ளிக்குதித்து, மகிழ்ச்சியாக எல்லோரிடமும் ‘‘நான்தான் அவங்க அக்கா... அதனாலதான் பாப்பா என் கையை மட்டும் பிடிச்சிக்கிட்டாங்க...” மகிழ்ந்து மத்தாப்பு பூ சிதறலாய் குதூகலித்து சிரித்தாள். அவள் கண்களில் நட்சத்திரங்கள் மின்னுகிறதோ என்பது போல் பிரகாசித்தது அந்தக் குழந்தையின் முகம்.
முல்லையின் குடும்பத்தினர் அங்கு ஹாஸ்பிட்டலில் அக்கம் பக்கம் இருந்த எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர். ‘‘பெண் குழந்தை... அதுவும் ரெண்டாவதும் பெண்ணாக பிறந்தும் கொண்டாடும் உங்கள் குடும்பத்தைப் பார்க்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்றனர் மற்றவர்கள். தேவகியும், மணியும் மட்டும் வெளியில் சிரித்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், உள்ளுக்குள் நொடித்துக் கொண்டிருந்தனர். பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியிடம், ‘‘எனக்கு நாலும் பையன்கள். பொண்ணு இல்ல. என் பிறந்த வீட்ல நான் ஒரே பொண்ணு. எனக்கு நான்கு அண்ணன், தம்பிகள்.
என் பெரிய மருமகளுக்கும் ரெண்டும் ஆண் வாரிசுகள். ரெண்டாவது மருமகளுக்கு ஒரு பையன். இவ மட்டும் ரெண்டும் பொட்டையா பெத்து என் மகன் வாழ்க்கையையே நரகமாக்கிட்டா. அவ அம்மாவிற்கு இவ ஒரே பொண்ணு. அதான் அப்படியே அவ வீட்டை கொண்டிருக்கா” என்றார் வெறுப்புடன். கேட்டுக்கொண்டிருந்த அந்த அம்மாள் முதலில் இருந்தே தேவகியின் நடவடிக்கைகளையும், முல்லையின் பிறந்த வீட்டாரின் நடவடிக்கைகளையும் கவனிச்சிக்கிட்டுதான் இருந்திருக்காங்க. அதனால,தேவகியை வெறுமையாக பார்த்தவர், ‘‘முல்லையின் அம்மாக்கு கூட உடன் பிறந்த அண்ணண், தம்பிகள் அதிகம் போலத்தானே தெரியுது... உங்க அண்ணன், தம்பி பத்தி மட்டும் சொல்றீங்க”என்றார்.
மறுபக்க பெண்மணியின் சப்போர்ட் கிடைக்காத ஏமாற்றத்தால் அமைதியாக இருந்த தேவகியை,‘‘கொஞ்சம் என் கூட வாங்கம்மா” என்று அவரை இரண்டு அறைகள் தள்ளி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு வயதான பெண்மணி சகலவிதமான மருத்துவ உபகரணங்களோடு அரை மயக்கத்தில் படுத்திருந்தார். தேவகி கேள்விக் கேட்கும் முன்பே யசோதா என்ற அந்தப் பெண் ‘‘இவங்க கோமளம். இவங்களுக்கு ஒரு கையும், காலும் பேரலைஸ் ஆகிட்டது, அதாவது, பக்கவாதம். “அப்போ இந்தம்மாவ நீங்கதான் இருந்து பாத்துக்கறீங்களா?” குழப்பமாக கேட்டார் தேவகி.அந்தம்மாக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது நான் வந்து பாத்துக்க என்ன அவசியம்? பொண்ணுங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சு நல்ல வேலையில அவங்கவங்க மாமியா வீட்ல இருக்காங்க.
இவங்க உங்களுக்கு உறவா?
உறவெல்லாம் இல்ல...ஆனா, ஒருவிதத்துல உறவு மாதிரிதான்.என்ன சொல்றீங்கன்னு புரியல...“உங்க மருமக பெண் குழந்த பெத்துட்டான்னு நீங்க அவளை வெறுத்துப் பேசினாலும், அந்தப் பொண்ணு உங்கள நல்லாப் பாத்திட்டிருக்கு... அதான் உங்களுக்கு வெளி உலக நடப்பு தெரியல. குழந்தை செல்வம் என்பது கடவுள் கொடுப்பது. நாம தேர்வு செய்து பிறக்கிறதில்ல. குடும்பத்துல அன்பும் அமைதியும் தான் அவசியம். ஆண் மகன் மட்டும் இருக்கிறதில்ல. உங்க மகனுக்கு இந்த சின்ன வயசுல இருக்கற மனப்பக்குவம் உங்களுக்கு
இல்லாதது வியப்பா இருக்கு.
பெண்களே பெண் குழந்தைகளை வேண்டாம்னு நினக்கறது வினோதமா இருக்கு. என்னை என் பிறந்த வீடும், புகுந்த வீடும் வேண்டாம்னு நினைச்சிருந்தா, இன்னைக்கு இந்த யசோதா எப்படி... அட, நீங்களும்தான் இன்னைக்கு எப்படிங்க..?
நம்மை பெரும் நம்பிக்கையும், அன்பும், பாசமும் வச்சு, நம்ம பிறந்த வீடும், புகுந்த வீடும் ஏத்துக்கிட்ட போது... நம் பிள்ளைகளுக்கு பிறந்த பெண் குழந்தைகளை நாம ஏத்துக்காம இருக்கறது என்ன நியாயம் தேவகியம்மா” என்றார் யசோதா.
‘‘தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வமுண்டோ?
தாய் பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும் பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?’’
என்று பெண்ணான தாயின் மாண்பை
மகாகவி பாரதி பாடியுள்ளதைக் கேட்டதில்லையா நீங்க?’’
“உங்க மகனுக்கு ரெண்டும் பெண் குழந்தைங்க. கோமளத்தை அவங்க பொண்ணுங்க கவனிச்சிக்கிறத பாக்கும் போது எனக்கு தைரியமா இருக்கு. உங்க பேத்திங்க நிச்சயம் அவங்க அப்பாவையும், அம்மாவையும் நல்லா பாத்துக்குவாங்க...” தொடர்ந்து சொன்னார் யசோதா.
“அதெல்லாம் சரி... இந்தக் கோமளத்தம்மா உங்களுக்கு யாரு? மறுபடியும் கேட்கிறேன்...இவங்க உங்க உறவான்னு கேட்டா அந்த மாதிரி தான்னு சொல்றீங்க... புரியலியே...”
“ இந்தம்மாவ ஒரு முதியோர் இல்லத்துல சந்திச்சதுல எனக்குப் பழக்கம்...’’
“முதியோர் இல்லத்துலயா? ’’ அதிர்ச்சியுடன் கேட்டார் தேவகி.
கோமளத்தம்மாவின் கணவர், குழந்தைங்க காலேஜ், ஸ்கூல்னு படிக்கிற காலத்திலேயே ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்திட்டாராம். இந்தம்மா மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை படிக்க வச்சு, வேலையில சேர்த்துன்னு வாழ்நாள் முழுசும் ரொம்ப பாடுபட்டிருக்காங்க.கோமளத்தம்மாக்கு ரெண்டு பொண்ணுங்க மட்டும் இல்ல... ரெண்டு மகன்களும் இருக்காங்க. வெளியூர்ல இருக்காங்க. சில வருஷங்களுக்கு முன்னாடி இவங்கள முதியோர் இல்லத்துல கொண்டு விட்டுட்டாங்க.
அந்தக் கவலையில, மன உளைச்சலில்
இருந்ததால கோமளத்தம்மாக்கு உடல்
நிலை இப்படி ஆகிடுச்சு...
லேட்டாகத்தான் இவங்க பொண்ணுகளுக்குத் தெரியவந்தது. பொண்ணுங்க வந்து கூட்டிட்டு வந்துட்டாங்க. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பார்த்துக்கிறாங்க. வெளியூர்ல இருக்கற மகன்கள் விஷயம் தெரிந்தும் இன்னும் வந்து பார்க்கல. அம்மா அவங்க பொறுப்பாகிடுவாங்க என்கிற பயமா, குற்ற உணர்ச்சியா, தயக்கமா தெரியல.
அதுக்காக எல்லா மகன்களும் கெட்டவங்க, பெத்தவங்கள வயசான காலத்துல சரியா கவனிக்காதவங்கன்னு பொதுப்படையான கருத்தா சொல்லல.அப்படி சொல்லவும் முடியாது.
அந்த மனநிலை, ஒவ்வொருத்தரோட அடிப்படை பிறவிக்குணம், வாழும் சூழ்நிலை, வாழ்க்கை முறை, தெளிவான சிந்தனையில்லாததால அவங்க வாழ்க்கையில் சந்திக்கும் தடுமாற்றங்கள், தோல்விகளின் பாதிப்பு, புறச் சூழ்நிலைகள் மற்றும் புறக்கணிக்க முடியாத நபர்களால் ஏற்படும் பாதிப்பு என்பது போன்ற சில பல காரணங்களால மனுஷருக்கு மனுஷர் வித்தியாசப்படுது...” உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா... இன்னைக்கு நீங்க உங்க மகனிடமும், என்னிடமும் பேசின மாதிரியே... சதா வீட்லயும் தொடர்ந்து பேசிட்டு இருந்தீங்கன்னா வீட்டு நிம்மதியே கெட்டுப்போகும்.
ஒருகட்டத்துல, ஒண்ணு நீங்க உங்க மருமகள வீட்லேர்ந்து வெளியில அனுப்பிடுவீங்க... அல்லது அவங்க உங்கள வெளியில அனுப்பிடுவாங்க. புரிதலும், விட்டுக்கொடுத்தலும் இல்லைனா அப்படித்தான் நடக்கும்.தேவகி பிரமித்து போனார். கிட்டத்தட்ட தன் வயதொத்த இந்த யசோதா... பெண் இனத்தை, பெண் குழந்தைப் பிறப்பு பற்றி இவ்வளவு உயர்ந்த கருத்து வச்சிருக்கும் போது, நான் மட்டும் எப்படி இப்படி உண்மைக்கு புறம்பான கருத்துக்களோடு இருந்திருக்கேன்! என் தவறை சொல்லித் திருத்த ஒரு உடன் பிறந்த சகோதரி இல்லாதக் காரணமா?
எண்ணங்கள் மனதில் ஓட, தேவகியே தனது இந்த மன ஓட்டத்தை நினைத்து வியந்து போனார்.“அவங்களப் பத்தி இவ்வளவு விவரம் சொல்றீங்களே... மறுபடியும் கேட்கிறேன்... இந்தக் கோமளத்தம்மாக்கு நீங்க என்ன உறவு?” - தேவகி.“ஸ்கூலில், காலேஜில் கிளாஸ் மேட், பேட்ச் மேட் மாதிரி நான் கோமளத்தம்மாவோட முதியோர் இல்லத்து மேட்’’ - யசோதா.அடுத்து தேவகி என்ன செய்தாங்கன்னு சொல்லவா வேணும்?
தொகுப்பு : சுமதி ராணி