நன்றி குங்குமம் தோழி
அலெய்டா கண்ணே!
பயணத்தின் கடைசி முனையிலிருந்து நம்பிக்கைமிக்க, கணவனது அரவணைப்பை அனுப்புகிறேன். எனது சிந்தனையில் கூட உனக்கு உண்மையாக இருக்க முயன்றேன். ஆனால் இந்த ஊர் கறுப்பினப் பெண்களின் கவர்ச்சி உண்மையிலேயே வியப்பூட்டுகிறது. முத்தங்கள் பல...சே.இப்படியாக காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதங்களை எழுதியிருப்பவர் வேறு யாருமல்ல, உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர், ‘எர்னஸ்டோ சே குவேரா’ தனது காதல் மனைவி ‘அலெய்டா மார்ச்’க்கு எழுதிய காதல் கடிதங்களில் ஒன்று இது.
திருமணத்திற்குப் பின் காங்கோ போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கச் சென்றது. அது பலனின்றிப் போய் பின்வாங்கியது. பிற்பாடு மெக்ஸிகோ பயணப்பட்டது. கியூபா மக்களது பாதுகாப்பிற்காக சோவியத்தை நாடியது. சீனாவிடம் கோரிக்கை வைத்தது. எங்கிருந்தாலும் காதல் மனைவிக்குக் காதல் ரசம் சொட்டும் கவிதைகளையும் கடிதங்களையும் அனுப்பியது. பெற்ற குழந்தைகளை அவர்கள் அறியாமலே மாறுவேடத்தில் கொஞ்சியது. கடைசியாக மீண்டும் சந்திப்போம் எனும் நம்பிக்கையில் பொலிவியாவில் புரட்சி நடத்தப் பயணப்பட்டது. அங்கு அமெரிக்காவின் ஏவல் நாய்களாய் இருந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டது என ஏராளம் உண்டு அம்மாமனிதனின் வாழ்வில்.
இதில் அலெய்டா தன் வாழ்க்கையை தலைமறைவுப் போராளியாகத் தொடங்கி, கொரில்லா போராளியாகப் பரிணமித்து, புரட்சிகரப் போரில் பங்கேற்று, அற்புத மானுடன் சேவோடு தன் வாழ்வைப் பகிர்ந்த உன்னத உணர்வுகளை, உள்ளதை உள்ளபடி உயிரோட்டமாகச் சொல்கிறார், “என் நினைவில் சே’’ எனும் புத்தகம் வழியாக. இப்பூமிப்பந்தையே நேசித்த சர்வதேசப் புரட்சியாளன் சேகுவேரா பற்றி அவரது காதல் துணைவி அலெய்டா மார்ச் வரைந்த காதல் ஓவியம் இது.
இந்தப் புத்தகத்தில், அலெய்டா - சேகுவேரா இருவரது இல்லற வாழ்வுக்குள் புதைந்து கிடக்கிற ஏக்கங்கள், காதல் பொங்கும் கணங்கள், ஆதங்கங்கள், அன்பின்... அரவணைப்பின்... தனிமையின்... வழித்தடங்கள் என எண்ணற்றவற்றை உணர்வுகளின் போராட்டத்தை சொல்கிறார்.சேகுவேரா என்றாலே புரட்சி, யுத்தம், தாக்குதல், வீரமரணம் என்று நாம் அறிந்தவற்றுக்கு ஊடாக, அவ்வீரனுக்குள் பூத்த சின்னச் சின்ன உணர்வுகள்... கனிவு... கருணை... காதல்... காமம் என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறார் சே வின் காதல் மனைவி அலெய்டா. இதில் அந்தரங்கப் பகிர்தல்கள் மட்டுமில்லாமல் துயர்கொள்ள வைக்கும் பிரிவின் பக்கங்களும் உண்டு.
இந்தப் புத்தகத்தை காதல் கணவனைப் பற்றிய ஒரு துணைவியின் நினைவுகள் என்று நினைத்து சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது. காரணம், நெஞ்சுரத்தோடு துப்பாக்கி ஏந்திய வீராங்கனையாக போர்க்களத்தில் வலம் வந்தவர் அலெய்டா மார்ச். ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர இயக்கத்தில் தலைமறைவுப் போராளியாக இணைந்து கொண்ட அலெய்டாவுக்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
அதாவது, கொரில்லா போராட்டத்துக்கான நிதியினை மலைகளில் இருந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறவர்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான். அம்மலைகளில் இருந்து கொண்டுதான் சேகுவேரா மத்திய கியூபாவைக் கைப்பற்றுவதற்கான பயிற்சிகளை போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தார்.புரட்சியாளர்களது வானொலிகளில், சேகுவேராவின் தீரம்மிக்க போராட்டங்களையும், அவரைப் பற்றிய சாகசக் கதைகளையும், கியூபா நகரங்களின் தெருக்களில் அவரது படத்தோடு ஒட்டப்பட்ட தேடப்படுவோர் சுவரொட்டிகளையும், கண்டும் கேட்டும் அறிந்தும் இருந்தவர்தான் அலெய்டா.
ஆனால் சே-வை நேரில் காண்பது இதுவே முதல் முறை. இது நடந்தது 1958ம் ஆண்டில்.இடுப்புப் பட்டியில் ஒட்டிக் கொண்டு சென்ற கியூபா பணத்தை மலையில் இருந்த போராளிகளிடம் சேர்த்த பிறகு, அங்குள்ளவர்களுக்கு அலெய்டா அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். புரட்சியாளர் சே வுக்கும் அவ்வாறே. அவர்களின் முதல் சந்திப்பில், அலெய்டாவின் கண்களுக்கு சே வயதானவராக தெரிந்தாலும், அவரின் கூரிய பார்வை மருள வைத்திருக்கிறது. பிற்பாடு ஒரு நாள் மாலை சே வை சந்தித்தபோது தலைமறைவுப் பணியில் இருந்து தன்னை விடுவித்து கொரில்லா பிரிவில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்க, சே மறுத்து விடுகிறார்.
கொரில்லா படையில் போராளியாக சேர தனக்கு அத்தனை உரிமை இருந்தும் மறுக்கிறாரே இவர் என ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார் அலெய்டா. அவரை மருத்துவப் பிரிவு செவிலியர் ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார். மனம் அமைதியின்றி தூக்கத்தைத் தொலைக்கிறார் பல இரவுகள். விவசாயிகளிடம் சில உதவிகளைப் பெற்று வரும்படி வேறு ஒரு நகருக்கு செல்ல உத்தரவிடுகிறார் சேகுவேரா. வழியின்றிச் செல்கிறார் அலெய்டா.ஒரு அதிகாலை நேரம் பெட்ரெரோ என அழைக்கப்படும் அந்த நகரின் ஒரு சாலையில் பயணப் பையை முழங்
காலில் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்த அலெய்டாவை ஒரு ஜீப் கடந்து சென்று, மீண்டும் பின்னோக்கி வந்து நெருங்கி நிற்கிறது.
அதற்குள்ளிருந்து “நீயும் வாயேன் சில ரவுண்டுகள் சுட்டுவிட்டு வரலாம்” என ஒரு குரல் அழைக்க நிமிர்ந்து பார்க்கிறார் அலெய்டா. அங்கே சேகுவேரா ஜீப்பில் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார். “எந்தத் தயக்கமும் இன்றி நான் ஜீப்பிற்குள் ஏறினேன். அவ்வளவுதான். நான் அந்த ஜீப்பிலிருந்து அதற்குப்பின் ஒருபோதும் இறங்கவே இல்லை” என்று எழுதுகிறார் அலெய்டா துள்ளலின் உச்சத்தில் இருந்து.நாமறிந்த சே என்கிற புரட்சியாளன் வேறு. அலெய்டா அறிந்த ரொமான்ஸ் நாயகன் வேறாயிற்றே..?
சே மீதான எனது மதிப்பு, அவர் மீது என்னுள் எழத் தொடங்கியிருந்த காதல் உறவைவிட மேம்பட்டதாக இருந்தது.” இதற்கு மேல் வேறென்ன வேண்டும் தான் நேசித்த அந்த மனிதநேயன் குறித்துச் சொல்வதற்கு? என்கிற அலெய்டா, ‘‘சேவின் பாதுகாவலர்கள், அவர் பணிக்குச் செல்லும்போதும், நானும் அவரும் காலாற நடக்கும்போதும், எப்போதும் பாதுகாவலுக்காக உடனிருந்தனர். நாங்கள் காதல் வயப்பட்ட சாதாரண மனிதர்கள்.
எங்களுடைய உணர்வுகளால் ஆளப்பட்டோம். சிலசமயம் அவர் காரை ஓட்டும்போது தன் சட்டைக் காலரைச் சரிசெய்யும்படி என்னைக் கேட்பார். அவர் கையில் வலி இருந்ததால் முடியைச் சீர் செய்யுமாறு சொல்வார். திருமணம் ஆவதற்கு முன், பொது இடங்களில் நான் அவரைக் கொஞ்ச வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட தந்திரமான சில வழிகள் அவை. இது அலெய்டா சொல்லிய வரலாற்று நாயகனது காதல் வாழ்வின் சில துளிகள்.
தென் அமெரிக்க நாடுகள் பலவற்றுக்குப் பயணம் மேற்கொள்கிறார் சே. அப்பயணங்களில் அலெய்டாவும் கூட வருவதற்கு சே ஒப்புக்கொள்வதில்லை. “நீண்டகால இடைவெளி என்பதால் நான் சேவின் செயலராக உடன் வருவதாகக் கூறினேன். சே கடுமையாக மறுத்துவிட்டார். செயலராக மட்டும் இல்லாது, மனைவியாகவும் இருப்பதால், அவரோடு பயணம் செய்வது எனக்குக் கிடைக்கும் தனிச் சலுகையாகும் என வாதிட்டார். பிறர் மனைவியருக்கும் காதலியருக்கும் கிடைக்காத வாய்ப்பை நான் மட்டும் கோருவது சரியல்ல என்றார்.
எனக்கு இது ஒரு படிப்பினையாயிற்று. கிளம்புவதற்கு முன் சே, ஃபிடெலைச் சந்திக்கச் சென்றார். அவரும் என்னை உடன் அழைத்துச் செல்லும்படி சேவிடம் கூறினார். சே கொஞ்சம்கூடத் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. நான் அழத் தொடங்கினேன்.”இப்படி எண்ணற்ற சிறு சிறு ஊடல்கள், கூடல்கள், அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள் நிறைந்த நூல்தான் “என் நினைவில் சே - சே குவேராவுடன் என் வாழ்க்கை” என்கிற இப்புத்தகம். அலெய்டா எழுதிய இந்தப் புத்தகத்தை தமிழுக்கு மொழிபெயர்த்தவர், ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைப் பேராசிரியரும், பெண்ணியம், அரங்கம், மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து இயங்கி வருபவருமான பேராசிரியர் அ.மங்கை.
தொகுப்பு : மணிமகள்