Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*கீரையின் நிறம் மாறாமல் இருக்க கீரையை வேகவைக்கும் போது தண்ணீரில் உப்பு போட வேண்டும். இதில் சுவையும் அதிகம்.

*கொஞ்சம் வெந்தயம், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் போட்டு ஊறவைத்து அரைத்தால் தோசை சுவையாக இருக்கும்.

*ஊறுகாய் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால், அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி வைத்தால் கெடாமல் இருக்கும்.- கே.கவிதா, வேலூர்.

* தேங்காய் சட்னி காரமாக இருக்கிறதா? அதில் ஒரு கரண்டி ஆறிய பால், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்தால் காரம் காணாமல் போகும்.

* சூடான பாலில் எலுமிச்சை சாறு கலந்து பன்னீர் செய்வதை விட, கொஞ்சம் ஆறிய பாலில் தயிரை கலந்து தயாரித்தால் பன்னீர் மிருதுவாக, அதிகமாக கிடைக்கும்.

* சுண்டலில் உப்பும், காரமும் அதிகமாகி விட்டால், ரஸ்க் துண்டுகளை பொடித்துப் போட்டு கிளறினால், சுவையும் கூடுதலாகும்.- மல்லிகா அன்பழகன், சென்னை.

* பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு குறையும்.

* முதல் நாளே பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டால் ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி அல்லது கொண்டைக் கடலையை போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்தால் நன்றாக ஊறிவிடும்.

* அவலை 15 நிமிடம் ஊறவைத்து, தேங்காய் துருவல், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்த அவலுடன் தயிரில் கலந்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டினால் சுவையான அவல் பச்சடி தயார்.

* வெங்காய தயிர் பச்சடி செய்யும் ேபாது அரிந்த வெங்காயத்துடன் உப்பு சேர்த்து பிசிறி வைத்தால் சுவையாக இருக்கும்.- ச. லெட்சுமி, தென்காசி.

* முள்ளங்கியை தேவையான அளவில் நறுக்கியப் பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து பிறகு சமைத்தால் முள்ளங்கி வாடை துளி கூட வராது.

* மீன் வறுக்கும் போது கலவையில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன் 2 ஸ்பூன் நெய் மற்றும் சில கறிவேப்பிலையைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு பிறகு தோசைக்கல்லில் வறுத்து எடுக்கவும். உப்புக் குறைவதுடன் தோசைக்கல்லில் மீனை எடுக்க சுலபமாக இருக்கும்.

* 100 கிராம் காய்ந்த மிளகாய், 20 மிளகு, 3 அன்னாசிப்பூ இவற்றினை நன்றாக வறுத்துப் பொடி செய்து நல்லெண்ணெய் விட்டு வதக்கிப் பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். குழந்தைகள் உள்ள வீட்டில் காரம் குறைவாகச் சமைக்க நேரிடும். ஆனால் பெரியவர்களுக்கு காரமாகச் சாப்பிட பிடிக்கும். அச்சமயங்களில் குழந்தைகளுக்குத் தேவையானஅளவினை தனியாக எடுத்துக் கொண்டு மீதத்தில் இந்தப் பொடியினை தேவைக்கேற்ப சேர்த்து விட்டால் காரமும், சுவையும் கூடுதலாகக் கிடைக்கும். மீண்டும் கொதிக்க வேண்டிய அவசியமில்லை.

* முட்டை வேகவைக்கும் போது தண்ணீரில் வெங்காயத் தோல் சேர்த்து வேக வைத்தால் முட்டை உரிக்கும் போது சுலபமாகவும், சிறிதும் வீணாகாமலும் முழுமையாய் கிடைக்கும்.- எஸ்.செசிலியா, கிருஷ்ணகிரி.

* வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல் நாள் இரவே ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் காலையில் நறுக்கும் போது கண்ணீர் வராது.

* உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.

* ஃப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே டிரேயில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டை கசக்கச் செய்து விடும்.

* வீட்டுத் தொட்டிகளில் கொத்தமல்லி, புதினா, வெந்தயக்கீரை போன்ற செடிகள் வைப்பது போல் சிறிது கடுகையும் தெளித்து வைத்தால், கடுகு செடி வந்து விடும். கடுகு கீரை உடம்புக்கு நல்லது.- ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

* சாம்பாரை தயாரித்து அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு இரண்டு தக்காளிப் பழத்தினை மிக்ஸியில் அடித்து சாம்பாரில் சேர்க்க அதன் சுவையே அலாதி.

* வடை செய்ய தயார் செய்யும்போது மாவு நீர்த்துவிட்டால் கொஞ்சம் ரொட்டித்தூள் அல்லது பாம்பே ரவையை தூவி பிசைந்தால் சரியாகி விடும்.

* புதினா இலையை வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், பல உணவுப் பண்டங்களுக்கு வாசனைக்காக சேர்க்கப் பயன்படுத்தலாம். சத்தானதும் கூட.

* லட்டுப் பிடிக்க பொரித்து வைத்த பூந்தி அதிகமாக இருந்தால் மிளகுப் பொடி, உப்பு தூவி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்தால் காரசார காரா பூந்தி ரெடி.

தொகுப்பு: கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.