நன்றி குங்குமம் தோழி
*பனம் பழத்தின் கெட்டியான சாறை எடுத்து ஒருநாள் வெயிலில் வைத்து, மேலும் கெட்டியானதும் வெல்லம், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி பூரணமாகச் செய்து, சிறு உருண்டை களாக்கி கடலை மாவில் முக்கி பொரித்தெடுக்கலாம். ருசியாக இருக்கும்.
*பனீரை சதுர துண்டுகளாக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அபர்ணா சுப்ரமணியம், சென்னை.
*மைதாவுடன் கொஞ்சம் அரிசி மாவு கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, எண்ணெய் கலந்து பிசிறி பக்கோடா செய்தால் சுவையாக இருக்கும்.
*அடை மாவில் துருவிய கேரட், கோஸ் சேர்த்து அடை வார்த்தால் சுவையாக இருக்கும்.
*பஜ்ஜி மாவில் வெண்டைக்காயை கலந்து எண்ணெயில் பொரித்தால் சுவையாக இருக்கும். கே.ஆர். இரவீந்திரன், சென்னை.
*பாசுமதி அரிசியுடன் தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து, ரவை போல் உடைத்து வைத்துக் கொண்டால் தேவையான பொழுது விரைவில் பால் பாயசம் செய்யலாம்.
*முட்டை கோஸை மெலிதாகவும்,நீளவாக்கில் நறுக்கி, அத்துடன் கடலைமாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு நெய் விட்டு பிசைந்து பக்கோடா செய்தால் வித்தியாசமான சுவையில் பக்கோடா தயார். எஸ்.பாவனா, திண்டுக்கல்.
*துவரம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
*கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து கடைய கீரை தனி ருசியுடன் இருக்கும். கே.காசி, திருவண்ணாமலை.
*கேரட் அல்வா செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட்டை போட்டு எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் நனைத்து துருவினால் கேரட் அல்வா மிகவும் சுவையாக இருக்கும்.
*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
*குலோப் ஜாமூன் செய்து விட்டு மீதமுள்ள சர்க்கரைப்பாகில் நெய்யில் பிரெட்டை ரோஸ்ட் செய்து போட்டால் புதுவிதமான ஸ்வீட் தயார். கே.கவிதா, வேலூர்.
*இடியாப்பம் மீந்துவிட்டால், புளித்த தயிரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, வற்றலாக்கி வறுத்து சாப்பிடலாம்.
*உளுந்தம் பருப்பை குறைவாகப் போட்டு கெட்டியாக அரைத்து, இட்லி வார்க்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலக்கி இட்லி வார்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
*சட்னி அரைக்கும் போது தேங்காய்க்கு பதிலாக வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொண்டால் சட்னி சுவையாகவும், மணமாகவும் இருக்கும். அ.திவ்யா, காஞ்சிபுரம்.
*தோசை வார்க்கும் போது தோசைக் கல்லில் ஒட்டிக் கொண்டால், கோலி அளவு புளியை ஒரு வெள்ளை துணியில் கட்டி எண்ணெயைத் தொட்டு கல்லில் தேய்த்துப் பிறகு தோசை வார்க்கலாம்.
*கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் குழம்பு வைக்கும் போது, சிறிதளவு கடுகு, மஞ்சள், மிளகாய் வற்றலை வெறும் வாணலியில் வறுத்து, தூளாக்கி, கொதிக்கும் குழம்பில் போட்டு கலக்கி இறக்கினால் குழம்பு மிக மணமாகவும், சுவையுடனும் இருக்கும். எஸ்.மைதிலி, சென்னை.
*எண்ணெய் (அ) நெய்யில் பிரெட்டை பொரித்தால், ஃப்ரை ஆவதற்கு நிறைய எண்ணெய் குடிக்கும். அதற்கு பிரெட்டை மைக்ரோ ஓவனிலோ, காய்ந்த பிரெட்டை லேசாக நெய்யில் வதக்கி சேர்த்தாலோ சுவை அதிகரிக்கும்.
*சூப் செய்யும் போது டோஃபு (அ) வீட் பிரெட் சேர்க்க, சத்தானது, சுவை கூடும்.
தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.