நன்றி குங்குமம் தோழி
* பீட்ரூட் பொரியல் செய்வதை விட கேரட், உருளைக்கிழங்கையும் ேசர்த்து வதக்கினால் ருசி மிகுந்திருக்கும்.
* அடை செய்யும் போது ஒரு கப் கேரட் துருவலை சேர்த்துக் கொண்டால் ருசி அபாரமாக இருக்கும்.
* மில்க் ஷேக், கஞ்சி எதுவானாலும் தேனை சாப்பிடும் முன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் நீர்த்துவிடும்.- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* வாழைப்பூவின் மடல்களை ஆய்ந்தால் உள்ளே ஐந்து இளம் மடல்கள் மற்றும் குருத்திருக்கும். அதனை பொடியாக நறுக்கி பருப்பு, தேங்காய் சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும்.
*பாசிப்பருப்பை வறுத்து துவையல் செய்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். கடைசியில் பச்சையாக நான்கு பூண்டு பல் வைத்து அரைத்தால் மேலும் சுவை கூடும்.- கே.நாகலட்சுமி, சென்னை.
* சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு பொரியல் செய்து இறக்கி வைக்கும் முன்பு கொஞ்சமாக புளித் தண்ணீர் விட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து கிளறி இறக்கினால் வறுவல் நல்ல சுவையுடன் இருக்கும்.
* கடலை மாவு இரண்டு பங்கு, அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு ஒரு பங்கு சேர்த்து பஜ்ஜி செய்தால் ருசியாக இருக்கும். உடலுக்கும் கெடுதல் இல்லை.
* நெல்லிக்காயை தேங்காய் துருவியில் துருவி மாங்காய் சாதம் தயாரிப்பது போல் நெல்லிக்காய் சாதம் செய்து தாளித்து சாப்பிட சுவையாக இருக்கும்.
*கிர்ணிப் பழத்தை நன்கு மசித்து ஏலக்காய் பொடி, சர்க்கரை, பால், ஐஸ் சேர்த்து சாப்பிட கோடை வெயிலுக்கு இதமாக, ருசியாக இருக்கும்.- கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.
*முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது தேங்காயுடன் சீரகத்தை சேர்க்கலாம்.
*உருளைக்கிழங்கு கறி செய்யும் போது அரைக் கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாக இருக்கும்.
*கேசரி செய்வதற்கு முன்னால் ரவையை பொன்னிறமாக வறுத்து பிறகு கிண்டுவதே சரியான முறை.
*பட்சணங்கள் தயாரிக்க மாவு பிசையும்போது கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு பிசைந்தால் பட்சணம் மிக வாசனையாக இருக்கும்.- ஹெச்.ராஜேஸ்வரி, பூந்தமல்லி.
*மிக்ஸியில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்கும் முன்பாக சுடு தண்ணீர் விட்டு, மிக்ஸியைக் கழுவி விட்டு பின்னர் தயிரில் வெண்ணெய் கடைந்தால் வெண்ணெய் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
*இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய ஜவ்வரிசியை போட ஒவ்வொன்றும் துள்ள ஆரம்பித்து லேசாக வெடிக்கும். அதில் மிளகுத்தூள், உப்பு, பெருங்காயம் தூவி சாப்பிட ருசியாக இருக்கும்.
*இரண்டு கப் அரிசி, ஒரு கப் கெட்டி அவலுடன் கொஞ்சம் உளுந்தம் பருப்பு சேர்த்து ஊறவைத்து அரைத்தால் அருமையான செட் தோசை ரெடி.
*வாழைக்காய் சிப்ஸ் போடும் போது எண்ணெயிலேயே வாழைக்காயை சீவினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்.- கே.ஆர்.உதயகுமார், சென்னை.
*காய்கறிகள் முற்றிவிட்டால் அதில் உள்ள (காராமணி, பீன்ஸ், அவரை) விதைகளை கூட்டு, குழம்பு, காய்கறிகள் வதக்கும் போது சேர்க்க விதைகள் வீணாகாது.
*வாழைத்தண்டை பொடியாக நறுக்கி பக்கோடா செய்யலாம். ேமார்க் கூட்டு, சாம்பார் செய்யலாம். துவையல் செய்தால் நார் இருந்ததே தெரியாது. மிக்ஸியில் அரைத்து மோரில் கலந்தால் வாசனைக்கு வாசனை. ஜூஸ் செய்து சாப்பிடலாம். குளிர்ச்சிதரும்.
*பெருங்காய பொடி சில நேரம் கசந்துவிடும். இதை தவிர்க்க சிறிய பெருங்காய கட்டியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறப்போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இதை காய்கறி சமையலில் ேசர்க்கலாம். பட்சண வகைகள், மோர் இவற்றிற்கும் உதவும்.- ராஜிகுருஸ்வாமி, சென்னை.