*வாழைக்காய் வறுவல் செய்யும் போது ஒரு ஸ்பூன் நீர் மோரை எண்ணெயில் விட்டால் வாழைக்காய் கறுகாமல் வறுபடும்.
*ஒரு வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை (வெண்டைக்காயை எடுத்து விட்டு) அந்த நீரை சப்பாத்தி செய்யும் மாவில் கலந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
*சிலவித சுண்டல்களுக்கு அரிசிப்பொரி சேர்க்கும் போது, பொரியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, சுண்டல்கள் தாளித்து முடித்து இறக்கும் முன்பு பொரியையும் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால் பொரி அமுங்கிப் போகாமல் முழுதாக உடையாமல் அப்படியே இருக்கும்.
*ரசம் தயாரிக்கும் போது 1 டீஸ்பூன் சாம்பார் பொடியையும் ரசப்பொடியுடன் சேர்த்து போட்டால் ரசம் கூடுதல் சுவையுடனும் வாசனையுடனும் இருக்கும் - எஸ்.ராஜகுமாரி, சென்னை.
*கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசிக்க, நன்கு குழைவாக மசியும்.
*முட்டை கோஸ் சமைக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சை பழம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
*வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும் ெபாழுது அதனுடன் சிறிது முருங்கைக்கீரையையும் சேர்த்து செய்தால், சுவையான மணம் உள்ளதாக மிகவும் நன்றாக இருக்கும்.
*தோசை வார்க்கும் போது நெய் ஊற்றி வார்க்க வேண்டாம். நெய் விட்டு வார்க்கும் போது கல்லில் நெய் தீய்ந்து போகும். எனவே, தோசை சாப்பிடும் போது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் - டி.லதா, நீலகிரி.
*வத்தக் குழம்பு செய்யும் போது வெங்காய வடகத்தை கடைசியில் பொடித்துப் போட்டு கிண்டி விட்டால் குழம்பு சூப்பராக இருக்கும்.
*மிளகாயை வறுத்துப் பொடி செய்யும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால் மிளகாய் நெடி இல்லாமல் பொடி சுவையாகவும் இருக்கும்.
*தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை வார்த்தால் ருசியாகவும் இருக்கும். உடலுக்கும் ஏற்றது.
*தோசை மாவில் சிறிது வெந்தயப் பொடி சேர்த்து தோசை வார்த்தால் வாசனையுடன் இருக்கும்.- அமுதா அசோக்ராஜா, திருச்சி.
*கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவை செய்யும் போது கூடவே கொஞ்சம் மில்க் மெய்ட் ஊற்றிக் கிளறினால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
*பேரீச்சம் பழத்தில் பால் சிறிது விட்டு அரைத்து, அதில் தேன் ஊற்றி குழைத்து, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட உணவு தேவாமிர்தமாக திகழும்.
*ரசத்திற்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் ரசம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
*அரிசி வடகம் வெண்மையாக இருக்க, கூழை கிளறும் போது சிறிது பால் ஊற்றவும்.- கே.எல்.சுபாக்கனி, கன்னியாகுமரி.
* ராகி மாவுடன் கொதிநீர் ஊற்றி மூடி வைக்கவும். ஊறவைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாவை (தலா 1 கைப்பிடி) அரைத்து விழுதாக்கவும். பின்னர் ராகி மாவுடன் அரைத்த விழுது, இஞ்சிச்சாறு ஒரு டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அரை கப் ஆற வைத்த பால் கலந்து குடிக்கலாம். வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கு வெல்லத்தூள் கலந்து கொடுக்கலாம்.
* வேகவைத்த தினை அரிசியுடன், நறுக்கிய மாங்காய், கேரட், குடைமிளகாய், காய்ந்த திராட்சை, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து தினை சாலட் செய்து சாப்பிட ஆரோக்கியம் மேம்படும்.
* இட்லி, தோசை மாவு புளிக்காவிட்டால் மாவின் மீது கொஞ்சம் சர்க்கரையை தூவி விட்டால் போதும் மாவு நன்றாக புளித்துவிடும்.
* இட்லிப் பொடிக்கு அரைக்கும் போது அதனுடன் அரை கப் கொப்பரைத் துருவல், கால் கப் எள்ளையும் வறுத்து சேர்த்து அரைத்தால் இட்லிப் பொடி மிகவும் சுவையாக இருக்கும்.- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.