நன்றி குங்குமம் தோழி
கேரளா என்றதுமே நினைவுகளில் வருவது புகழ்பெற்ற கதகளி நடனம்தான். கதகளி கலைஞர்கள் தலையணிகளில் முகத்தைப் புதைத்து, வண்ண மைகளால் வேடமிட்டு, முகக்கவசத்தோடு, பரந்து விரிந்த மிகப்பெரிய ஆடை உடுத்தி, கண்ணசைவு, கை முத்திரை, உடலசைவு என கேரள நாட்டுக் கதைகளைச் சொல்வர். வட கேரளாவில் உள்ள கலைஞர்களோ தெய்வ வேடமணிந்து கோயில் முன்பாக நடனம் ஆடுவதை ‘தெய்யம்’ என அழைப்பதோடு, தெய்வத்தின் சக்தி அந்தக் கலைஞர் உடலில் இறங்கிப் பேசுவதாய் நம்புவர். இதைத்தான் ‘காந்தாரா’ படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி தனது நடிப்பில் வெளிப்படுத்தினார்.
அதேபோல் ஓணம் திருவிழாவில் புலி வேடமணிந்த கலைஞர்கள் ஆடுகிற ஆட்டத்தை புலிக்கலி எனவும், கேரளப் பெண்களின் மென்மையான உடல் அசைவுகளை அபிநயத்தில் வெளிப்படுத்துகிற பாரம்பரிய நடனத்தை மோகினிஆட்டம் எனவும் அழைப்பர்.கேரளக் கோயில் விழாக்களில், யானை சேனை பரிவாரங்களோடு, கலைஞர்கள் குழுவாய் இணைந்து சண்டமேளம், பஞ்சவரி மேளங்களை அண்டம் அதிர வாசிப்பதை ஆங்காங்கே பார்த்தும், கேட்டும் ரசித்திருப்போம்.
ஆனால் இன்று, கேரளாவின் பாரம்பரியக் கலைகளுடன், புகழ்பெற்ற தாய் மற்றும் நைஜீரிய நடனங்களை இணைத்து புதுமாதிரியான சில நடனங்களை கேரளக் கலைஞர்கள் ஆடத் தொடங்கியுள்ளனர். இதில் மிகவும் பிரபலமான கதகளி வேடத்தில், ஃப்ளவர் உடை உடுத்தி ஆடும் ஃப்ளவர் டான்ஸ், வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை ஒட்டி ஆடும் பட்டர் ஃப்ளை நடனம், புகழ்பெற்ற தாய் நடனத்தை இணைத்து ஆடும் தாய்டான்ஸ் என கேரளக் கலைஞர்கள் வெரைட்டி செய்து காட்டத் தொடங்கிவிட்டார்கள்.
கேரளக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் இந்த நடனங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக மட்டுமின்றி பரவசத்தையும் சேர்த்தே வழங்குகின்றது. காரணம், பல்வேறு வண்ணங்களை ஆடைகளாக்கி அவர்கள் அணிந்திருக்கும் விதம்தான்.சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில், ஃப்ளவர் டான்ஸ் ஆடிய கேரளக் கலைஞர்களை சந்தித்த போது, குழுவில் தலைமைப் பொறுப்பில் இருந்த சுபி ரஞ்சன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
‘‘எங்களுக்கு ஊர் கேரளாவில் குருவாயூர் பக்கம். குழுவின் பெயர் ரஞ்சன் குழு. கேரள மாநிலத்தின் அனைத்துக் கலைகளையும் இணைத்து குழு நடனமாக நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். 45 கலைஞர்கள் வரை எங்கள் குழுவில் இருக்கிறார்கள். அனைவரும் ஆண்கள்தான். கேரள மாநிலத்தின் கோயில் விழாக்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், திருமணங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், பிற நிகழ்ச்சிகள் என அனைத்திலும் எங்கள் நிகழ்ச்சி இடம்பெறும்.
இன்று புதுச்சேரியில் நடக்கிற அரசியல் நிகழ்ச்சிக்கு நடனமாட குருவாயூரில் இருந்து வந்திருக்கிறோம். கதகளியோடு ஃப்ளவர் டான்ஸ், பட்டர் ஃப்ளை டான்ஸ், தாய் டான்ஸ் நிகழ்ச்சிக்கான உடை தயாரிப்பு, மேக்கப் என ஆர்டிஸ்ட்டுகளும் உடன் இருப்பார்கள். அடுத்த நிகழ்ச்சிக்காக துபாய் கிளம்ப இருக்கிறோம். அதைத் தொடர்ந்து லங்கா, தாய்லாந்து எனவும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருக்கிறது.
குழுவில் 8 பேர் இணைந்தாலே அது ஒரு டீம்தான். நிகழ்ச்சிக்கு எத்தனை டீம் கேட்கிறார்களோ அதைப் பொறுத்து கலைஞர்கள் வருவோம். குறைந்தது 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை நிகழ்ச்சிஇருக்கும். எங்களுடையது குழு நடனம் என்பதால், தேவையான உடைகளை எடுத்துச் செல்வதற்கும், போக்குவரத்துக்கும் செலவு அதிகம் எடுக்கும்.
உடைக்குள் இருக்கும் உருவம் தெரியாத அளவு மேக்கப் செய்திருந்த கேரளக் கலைஞர்கள் விடைபெறும்போது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது, அவரை வரவேற்க மகாபலிபுரம் வந்து நிகழ்ச்சி நடத்தினோம். அது மறக்க முடியாத அனுபவம்’’ என்றவர்கள், வண்ண விளக்குகளின் ஒளியில் ஆடைகள் மிளிர, பலவண்ண உடைகளில் அசைந்து ஆடியபடியே விடைபெற்ற நிகழ்வு பார்க்க வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்