Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காற்றில் கலந்த கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடிப்பில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய 87வது வயதில் வயது மூப்பு காரணமாய் காலமானார்.சரோஜாதேவியின் கண்கள் இரண்டும் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து சரோஜாதேவிக்கு அஞ்சலி செலுத்தினர். திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, சரோஜாதேவியின் சொந்த கிராமத்தில் உள்ள அவரின் தோட்டத்தில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.வாழ்க்கை...சரோஜாதேவியின் தந்தை பைரவப்பா ஒரு காவல் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இவர்களுக்கு நான்காவது மகளாக, 1938ல் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சரோஜாதேவிக்கு, பெற்றோர்கள் வைத்த பெயர் ராதாதேவி கவுடா. ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955ல் அறிமுகமானார் சரோஜாதேவி. அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றிருக்கிறது. அடுத்தாண்டில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடம் ஏற்று, தமிழில் அறிமுகமாகி, பின்னர் 2வது கதாநாயகி வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்களாய் அறியப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனோடு நீண்டப் பயணமாக இணைந்த சரோஜாதேவியின் நடிப்புலக அனுபவங்கள் அரை நூற்றாண்டைத் தொட்டன.

பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகி வேடங்கள் வரிசையாக கிடைக்கத் தொடங்க, தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், முன்னாள் முதல்வரும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகருமான எம்.ஜி.ஆரின் எவர்க்ரீன் நாயகியாக கொண்டாடப்பட்டவர். எம்.ஜி.ஆர். சொந்தப்பட நிறுவனம் தொடங்கி தானே இயக்கித் தயாரித்து நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘ரத்னா’வாக வந்த சரோஜாதேவி, தமிழ் ரசிகர்கள் மனங்களுக்குள் ஊடுருவினார். ‘நாடோடி மன்னன்’ தொடங்கி திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘படகோட்டி’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘அன்பே வா’ உட்பட எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த 26 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

சரோஜாதேவின் தமிழ்த்திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே ‘கல்யாணப் பரிசு’ படத்தைச் சொல்லலாம். தர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் சரோஜாதேவி.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ‘பாகப்பிரிவினை’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’ என பா வரிசைப் படங்களில் தொடங்கி மொத்தம் 22 படங்களில் இவர் நடித்திருந்தாலும், சிவாஜி கணேசனை ‘புதிய பறவை’யாகக் காதலித்து, கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாய், ‘கோப்ப்பால்’ என்கிற வசன உச்சரிப்பின் மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சரோஜாதேவி. இவரின் கொஞ்சு தமிழ் உச்சரிப்பில் ‘கோப்ப்பால்’ சாகாவரம் பெற்று உலவுகிறான்.

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’, ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’, ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘நதி எங்கே போகிறது?’, ‘இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’,‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என இப்படங்களின்பாடல்களும் காலம் கடந்தும் நினைக்கப்படுபவையாக இருக்கின்றன. காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் இணைந்து 17 படங்களில் நடித்துள்ளார் சரோஜாதேவி.ஜெர்மனியில் என்ஜினியரிங் படித்து பெங்களூர் பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்த பி.கே.ஹர்ஷா என்பவருக்கும் சரோஜாதேவிக்கும் திருமணம் முடிந்த நிலையில், தன் அழகான இளம் மனைவி திறமை வாய்ந்த திரைக்கலைஞர் என்பதை அறிந்த ஹர்ஷா, தனது மனைவியின் திறமை இல்லத்தரசி என்கிற போர்வைக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதில் உறுதி காட்டினார். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் நடிப்பதில் தவறில்லை, மீண்டும் நடிக்கலாம் என்று அவர்

பச்சைக்கொடி காட்ட, பெண்கள் திருமணம் செய்துகொண்டால் கதாநாயகி வாய்ப்பு பறிபோகும் என்கிற மாயையை உடைத்தெறிந்து மீண்டும் திரையுலகில் மின்னத் தொடங்கினார் சரோஜாதேவி. இறுதியாக நடிகர் சூர்யா, நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாரா கூட்டணியில் தமிழில் ஆதவன்’ படத்திலும் காமெடியில் கலக்கியிருந்தார்.‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரஸ்வதி’ போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரரான நடிகை சரோஜா தேவி, படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமைக்கு உதாரணமாய், அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் பெற்றவர் என்கிற பெருமைகளுடன் வலம் வந்திருக்கிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்ம விருதுகளும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் பெற்றதுடன், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசு விருதுகளையும் பெற்றிருக்கிறார். ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா’ என அவர் வாயசைத்துப் பாடிய பாடல் காற்றலைகளில் பரவும் போதெல்லாம் நம் மனக்கண்ணில் அந்த அழகு உருவம் தோன்றிக்கொண்டே இருக்கும். அதுவே கன்னடத்துப் பைங்கிளிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அந்த அழகு பதுமை இனி அமைதியாக உறங்கட்டும்.

ஜீவிதா