நன்றி குங்குமம் தோழி
நவீன நாகரிக வாழ்வால் மக்களின் நடை, உடையில்... ஏன் எல்லாவற்றையும் விட உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே உலகளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம் வயது மரணங்கள் பெருகி வருவதே இதற்கு உதாரணம். துரித உணவுகளின் ருசியில் மயங்கிவிட்ட இன்றைய தலைமுறையினர் அதில் உள்ள ஆபத்துகளையும் பின்விளைவுகளையும் உணர்வதில்லை. நமக்கு வராத வரை எதுவும் நோயில்லை என்ற மனநிலையே அவர்களின் அஜாக்கிரதைக்கு காரணம்.
கிடைத்தவற்றை கிடைக்கும் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு போய்க் கொண்டிருக்கலாம் என்ற மனப்பாங்கு உடல் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று யாரும் அப்போது உணர்வதில்லை. இதன் விளைவாகத்தான் இதய நோய்கள், உடல் பருமன், உடல் உறுப்புகள் செயலிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் அதனை சரியான நேரத்தில் கண்டறிந்து தங்கள் வாழ்வை மீட்டெடுக்கின்றனர். அவ்வகையில் தன் இருபத்தொரு வயதில் ஒரு கிட்னியை இழந்து, தன் வாழ்க்கையை தானே மீட்டெடுத்து வாழ்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சிந்து விஜய். இவர் உணவியல் நிபுணராகவும், ஆரோக்கிய வாழ்க்கைக்கு துணையாகவும் இருக்கிறார். அவரின் சந்திப்பிலிருந்து…
“எனக்கு சென்னைதான் சொந்த ஊர். ஆனால், அம்மாவின் பூர்வீகம் பர்மா. கல்லூரிப் படிப்பை முடித்து எல்லோரையும் போல நார்மலா தான் என் லைஃப் போச்சு. அந்த சமயத்தில் நிறைய ஜங்க் உணவுகளை சாப்பிட்டேன். அதனால் என் எடையும் அதிகமாகக்கூடியது. ஒருநாள் தாங்க முடியாத தலைவலி. மூன்று நாட்களாகியும் வலி குறையவில்லை. வீட்டு வைத்தியம் செய்தாலே சரியாகிடும்னு நினைச்சேன். ஆனால், மூன்று நாட்கள் தூக்கமே இல்லாததால், டாக்டரைப் பார்த்தேன். அவர் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாக சொன்னார். அதன் பிறகு வயிறு வலி ஏற்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்த போதுதான் ஒரு கிட்னி 13%தான் வேலை செய்வதாக தெரிந்தது.
ஆனால், வாழ்க்கை முழுதும் மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லிட்டார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. கிட்னியை எடுக்க சொன்னேன். என் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஒத்துக்கல. அவங்களுக்கு புரிய வச்சேன். 2010ல் என் 21 வயசில் ஆபரேசன் நடந்தது. என்னுடையது காதல் திருமணம். எனக்கு பிரச்னை ஏற்பட்டதால் நான் திருமணம் வேண்டாம்னு சொல்லிட்டேன். ஆனால், என் கணவர் கல்யாணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். எனக்கு இப்போ ரெண்டு ஆண் குழந்தைகள். அவர்தான் எனக்கு எல்லாமே. இன்று வரை அதே காதலுடன்தான் இருக்கிறார்” என்று வெட்கத்துடன் மேலும் தொடர்ந்தார் சிந்து விஜய்.
“அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் சொன்ன ஒரே அட்வைஸ் என் உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்பதுதான். உடல் எடை அதிகரிச்சா இன்னொரு கிட்னியும் வேலை செய்யாதுன்னு சொல்லிட்டார். மேலும் எனக்கு மாதவிடாய் பிரச்னையும் இருந்தது. முதல் பையன் நார்மல் டெலிவரி என்றாலும் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு பயத்துடன்தான் என் வாழ்க்கை நகர்ந்தது. என் கணவரின் உடல் எடை அதிகமாக இருந்தது. அப்போது உணவியல் நிபுணர் விஜயராகவன் உணவு தொடர்பான வர்க்ஷாப் நடத்தினார். அதில் நானும் கணவரும் கலந்துகிட்டோம். அவர் தந்த Low Carbohydrate உணவு முறை ஆலோசனைகளை பின்பற்றியதால் மூணு மாசத்தில் பதினைந்து கிலோ எடை குறைந்தேன்.
PCOD பிரச்னைகளும் சரியானது. கடவுள் செகண்ட் இன்னிங்ஸ் வாழ்க்கையை கொடுத்திருக்கார் என்று நினைச்சேன். 15 வருசமா ஒரு கிட்னியுடன் ஆரோக்கியமா இருக்கிறேன்’’ என்று பரவசத்துடன் சொன்னார் சிந்து. ‘‘அம்மா பர்மாவை சேர்ந்தவர் என்பதால், எங்க உணவில் பச்சைக் காய்கறிகள் எப்போதும் அதிகமாக இருக்கும். அதனால டாக்டர் சொன்ன சாலட், சூப் போன்ற டயட் சார்ட்டை பின்பற்றுவதில் சிரமம் தெரியவில்லை. தொடர்ந்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் பொருட்கள் அடங்கிய உணவுகளை சாப்பிட தொடங்கினேன். ஒரு வருஷத்தில் 25 கிலோ எடை குறைந்து நார்மலுக்கு வந்தது. இரண்டாவது மகனின் பிரசவத்திற்கு பிறகு மீண்டும் என் உடல் எடைக் கூடாமல் நான் கவனமாக பார்த்துக் கொண்டேன்.
என்னுடைய இந்த மாற்றத்தைப் பார்த்த என் டாக்டர் விஜயராகவன் தன்னுடைய மற்ற பேஷன்டுகளுக்கு உணவுத் தொடர்பான ஆலோசனைகளை வழங்க சொன்னார். என்னைப் போல் பலர் உடல் எடை பிரச்னையால் அவதிப்பட்டு வராங்க. அவங்களுக்கு உதவி செய்யணும்னு என் கணவரிடம் சொன்னேன். என் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது போல் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதனால் அவரின் 2000த்துக்கும் மேற்பட்ட பேஷன்டுகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன். இன்று வரை அந்த வேலையை மிக்க மனநிறைவுடன் செய்து வருகிறேன்’’ என்று மிகவும் பெருமிதத்துடன் கூறும் சிந்து, சரிவிகித உணவுத் தொடர்பான மூன்று புத்தகங்களை மருத்துவர் விஜயராகவன் உதவியுடன் வெளியிட்டுள்ளார். ‘‘என்னுடைய ஒரு புத்தகத்தில் 60க்கும் மேற்பட்ட சாலட் ரெசிபிகள் கொண்ட புத்தகமும் உண்டு. நான் எழுதிய புத்தகங்கள் 10000 பிரதிகள் விற்றுள்ளன. அந்தப் புத்தகத்தில் உள்ள சாலட்களைப் பார்த்து என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள், ‘உங்க புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாலட் ரெசிபிக்களை நீங்க செய்து தர முடியுமா’ என்று கேட்டார்கள்.
அப்பதான் அதை பிசினஸா செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. கணவருக்கும் பிசினஸ் செய்ய ஆர்வம் இருந்ததால 2018ல் ‘சாலடா’வ ஆரம்பிச்சோம். சாலட் மட்டுமில்லாம சுண்டல், சூப் போன்றவற்றையும் தயாரித்து ஆர்டரின் பேரில் டெலிவரி செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. சாலட்கள் 2 மணி நேரம்தான் நல்லா இருக்கும். அதனால நாங்க அருகிலுள்ள இடங்களுக்கு மட்டுமே டெலிவரி செய்ய முடிந்தது. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தொழிலை தொடர முடியவில்லை. ‘சாலடா’வை மூடிவிட்டோம்.
கொரோனா காலம் முடிந்த பிறகு இந்த உணவு முறை பலருக்கும் சென்றடைய வேண்டும் என்று விரும்பினோம். ‘சாலடா நியூட்ரி கேர்’ என்ற பெயரில் உணவுகள் குறித்து வர்க்ஷாப்பினை நடத்தினோம். அதன் பிறகு ஊட்டச்சத்து மற்றும் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட் தொடர்பான சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் படித்தேன்’’ என்றவரை தொடர்ந்தார் சிந்துவின் கணவர் விஜய்.
‘‘சரிவிகித உணவுப் பழக்கத்தை குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.
நாம சாப்பிடாத வித்தியாசமான உணவுகளை நம் குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே எல்லாவற்றிற்கும் மூல காரணம். அதனாலயே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஜங்க் உணவினை கொடுக்கிறார்கள். சுவை அதிகம் இருப்பதால் குழந்தைகளும் அதனை விரும்புகிறார்கள். இதில் சுவை இருக்கும் ஆனால், சத்து நிறைந்திருக்காது என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். அதேபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழச்சாறாக சாப்பிடாமல், பழமாகவே சாப்பிட பழக்க வேண்டும். ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும்.
எங்களிடம் ஆலோசனை பெற்று சாலட்டினை உட்கொள்பவர்களின் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் சீரான ஆரோக்கிய முன்னேற்றத்தை பகிரும் போது எங்களுக்கு மிகுந்த ஊக்கமாக இருக்கிறது. எங்க அகாடமியில் பல சத்தான உணவுகளை செய்வது குறித்து பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். எங்களால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர். அதை 10 லட்சமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி நானும் என் கணவரும் பணியாற்றுகிறோம்” என்கின்றனர் லட்சிய தம்பதிகளான சிந்து, விஜய்.