Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒழுக்கம் மறைந்து வருகிறதா?

நன்றி குங்குமம் தோழி

சமீப காலமாக, திருமணமான பெண்கள், கள்ள உறவு காரணமாக கணவரை கொலை செய்யும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது. அதில் ஒன்றுதான் தற்போது மேகாலயாவில் நிகழ்ந்த சம்பவம்.மேகாலயாவிற்கு தன் புது மனைவியுடன் ஆசை ஆசையாய் தேனிலவு சென்ற கணவனின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. புதுப்பெண் சோனம் ரகுவன்ஷி, தனது காதலனுடன் இணைந்து, கணவர் ராஜா ரகுவன்ஷியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். திருமணமான சில தினங்களிலேயே இச்சம்பவத்தை அந்தப் பெண் செய்திருக்கிறார் என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.

சோனு மட்டுமல்ல... அவரைப்போல் பல பெண்கள் தங்களின் கள்ள உறவு காரணமாக கணவரை கொலை செய்துள்ளனர். இத்தகைய கொலைகளுக்கு பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் என்ன? குறிப்பிட்ட நபரின் மனநிலை என்ன? ஒழுக்கம் என்பது மக்கள் மத்தியில் மறைந்து வருகிறதா? போன்ற கேள்விகளுக்கான விடையினை அளிக்கிறார் உளவியல் நிபுணரான ரேவதி மோகன்.

‘‘ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத போது... அவள் அந்த வைபோகத்திற்கு ஏன் சம்மதிக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள். இவரின் விருப்பமின்மை தெரிந்திருந்தும் கட்டாயப்படுத்தி இருக்கலாம். வீட்டில் உள்ளவர்களும் திருமணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண் விபரீத முடிவு எடுப்பாள் என்று யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அந்த மணமகன்தான். அவர் ஏன் கொல்லப்பட வேண்டும்?

திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று விவாகரத்து செய்திருக்கலாம். எதற்காக கொலை செய்ய வேண்டும். இந்தியாவில், திருமணம் புனிதமானது. கள்ள உறவில் ஈடுபடுபவர்கள், சமூக அவமானத்திற்கு பயந்து, அதை மறைக்க முயல்வார்கள். இந்தியாவில் விவாகரத்து இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, குறிப்பாக பெண்களுக்கு. இதனால், விவாகரத்திற்கு பதிலாக, கணவரை முற்றிலும் அகற்றுவது தான் தீர்வாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் மேல் அனுதாபம் ஏற்படும். விளைவு அவர்கள் விரும்பிய நபரை மீண்டும் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படலாம். அந்த கோணத்தில் யோசிக்கும் இவர்கள் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்று சிந்தித்திருக்க மாட்டார்கள்.

நம்முடைய மூளையில் ஒரு பகுதி உணர்வுகளை கட்டுப்படுத்தக்கூடியது. இதன் மூலம் ஒருவரின் கோபம், துன்பம், சந்தோஷம் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அது அதிகப்படியாக செயல்படும் போது பிடிக்காத ஒரு விஷயத்தை செய்ய கட்டாயப்படுத்தியதால், அதற்கு பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

திருமணத்தில் உணர்ச்சி ரீதியான தொடர்பு மற்றும் பரஸ்பர புரிதல் இல்லை என்றாலும், அது உறவு சிக்கலுக்கு உள்ளாக்கும். தம்பதியர், தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து, பிரச்னைகளை தீர்க்க முயல வேண்டும். உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மன அழுத்தம் கூட பெண்களை தவறான முடிவுகளை எடுக்க தூண்டலாம். இந்த மனநிலைக்கு மாரல் டிஸ் என்கேஜ்மென்ட் என்று சொல்வோம். கொலையே செய்திருந்தாலும் அதை செய்ததற்கான காரணம் இருப்பதாக கூறுவார்கள்.

செய் அல்லது செத்து மடி என்பது தான் அவர்களின் எண்ணமாக இருக்கும். கணவருடன் வாழணும் இல்லை என்றால் அவன் இல்லாமல் செய்யணும். நடுவில் வரக்கூடிய விவாகரத்து, கவுன்சிலிங் எல்லாம் விரும்ப மாட்டாங்க.இவர்களின் இந்த செயலுக்கு ஒழுக்கம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பார்கள். அவர்களின் மூளையும் அப்படித்தான் சிந்திக்க தூண்டும்.

பொதுவாக ஒரு சம்பவம் நடைபெற்றால் நம்முடைய மூளை நான்கு விதமாக சிந்திக்கும். அதை 4 F என்று குறிப்பிடுவோம். முதலில் fight, பிரச்னைகளை எவ்வாறு எதிர்த்து சமாளிக்கலாம் என்பது. அடுத்து flight, தப்பிக்க என்ன வழி என்று சிந்திப்பவர்கள், கொலை செய்து மாட்டிக்கொள்வார்கள். freeze, நடைபெற்ற சம்பவத்தால் மூளை உறைந்து போகும் நிலை. fawn, அனுதாபம் தேடும் நிலை. இதன் மூலம் மற்றவர்களை தவறாக பயன்படுத்துவார்கள். இந்த நிலை மாற சமூகத்தில் உறவுகள் குறித்து விழிப்புணர்வு அவசியமாக இருக்கிறது’’ என்றார் ரேவதி மோகன்.

தொகுப்பு: ரிதி