நன்றி குங்குமம் தோழி
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 120 மின்சார தாழ்தள பேருந்துகள் கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி பணிமனையிலிருந்து இயக்கப்படும் இந்த பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக 17 நடத்துநர்கள், 3 ஓட்டுனர்கள் என 20 பெண் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். துவக்க விழாவின்போது அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கான சீருடை அணிந்து மிடுக்காக பேருந்தை இயக்கிய பெண் ஓட்டுநர்களை சந்தித்தோம். ‘நான் முதல்வன் திட்டத்தின்’ மூலம் பயன்பெற்று சென்னையில் MTC பேருந்துகளை இயக்க தயாராகியிருக்கும் மகேஸ்வரி, மாணிக்கவல்லி, அந்தோணி பவுன் ஆகியோருடன் உரையாடியதில்...
“என் பெயர் மகேஸ்வரி, நான் சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கிறேன். 10ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். கொரோனாத் தொற்று ஊரடங்கின்போது என் கணவருக்கு சரியா வேலை ஏதும் கிடைக்கவில்லை. நானும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை. ஆன்லைனில் வேலை தேடிய போது, என் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை.
ஒருநாள் சமூகவலைத்தளத்தினை பார்த்துக் கொண்டிருந்த போது, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் ஒரு அமைப்பு குறித்து தெரிய வந்தது. ANEW ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு பெண்களுக்கு நர்சிங், ஓட்டுநர் பயிற்சி போன்ற பல்வேறு இலவச பயிற்சிகளை அளிப்பது மட்டுமில்லாமல் அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறார்கள். என் கணவரிடம் இது பற்றி சொன்னதும், அவர் என்னை ஊக்கப்படுத்தினார்.
நான் அந்த அமைப்பினை அணுகியபோது எனக்கு இலவசமாக ஓட்டுநர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு கிடைக்க உதவுவதாக சொன்னார்கள். வாகனம் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல்தான் நான் பயிற்சியை தொடங்கினேன். அடிப்படை சாலை விதிகள் பற்றிக்கூட தெரியாது. எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமமும் பெற்றேன். எனக்கு முதலில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் கார் ஓட்டுநர் பணி கிடைத்தது.
என் முதல் பணி அனுபவம் நன்றாக அமைந்தது. ஆனால், நான் வசிக்கும் இடத்திற்கும் நிறுவனத்திற்கும் வெகுதொலைவு, இதன் காரணமாக நேர அட்டவணை ஒத்துவராததால் நான் வேலையை விட வேண்டியிருந்தது. அதனால் வேறு வேலையை தேடினேன். அப்போது ‘நான் முதல்வன் திட்டத்தின்’ மூலம் பெண்களுக்கு இலகுரக மற்றும் கனரக வாகன பயிற்சி அளிப்பதாக என் தோழி மூலம் தெரியவந்தது. அந்த பயிற்சியில் சேர்ந்தேன்.
ஆனால், இலகுரக வாகனம் மட்டுமல்ல கனரக வாகனமும் உங்களால் இயக்க முடியும் என்று சொல்லி எனக்கு பேருந்து இயக்குவதற்கான பயிற்சியினை அளித்தார்கள். பெரிய நீளமான வாகனத்தை இயக்குவதில் தொடக்கத்தில் பயமும் சிரமுமாக இருந்தது. பல நாட்கள் பயிற்சிக்கு பின்னர் பயமின்றி பேருந்தை இயக்க கற்றுக்கொண்டேன். 50 நாட்கள் பயிற்சியினை தொடர்ந்து கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. பயிற்சியினை முடித்து வீட்டில் இருந்தபோது MTC பேருந்தினை இயக்க ஓட்டுநர் பணிக்கான வாய்ப்பு இருப்பதாக என் கணவர் சொன்னார். அது குறித்து விசாரிக்க வியாசர்பாடி பணிமனைக்கு வந்தேன்.
‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் கனரக ஓட்டுநர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை அவர்களிடம் காண்பித்ேதன். கண்டிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை உண்டு என்று ஆதரித்து வாகனத்தை இயக்குவதற்கான தேர்வு வைத்தனர். அதன் பிறகுதான் எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைத்தது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எங்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள இத்திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஓட்டுநராக மின்சார பேருந்தினை இயக்க தயாராகி இருப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார் மகேஸ்வரி.
“திண்டுக்கல் மாவட்டம், கந்தப்பக்கோட்டை கிராமம்தான் என் சொந்த ஊர். சென்னைக்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது சென்னை ஆவடி பகுதியில் வசித்து வருகிறேன். நான் பி.காம் படித்திருந்தும் வேலைக்கு செல்லவில்லை. ஆட்டோ ஓட்டுவதில் எனக்கு விருப்பம் ஏற்பட்டு என் கணவரிடம் சொன்னதும் அவரே எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ஓட்டுநர் உரிமம் பெற்றதும், சென்னையில் தொடர்ந்து 7 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவந்தேன்.
பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்துள்ள ‘வீரப்பெண்கள் தொழிற்சங்கம்’ என்ற குழு சார்பாக ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் இலவச கனரக வாகனப் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததும் பயிற்சியில் சேர்ந்தேன். ஆட்டோ ஓட்டுவதில் அனுபவம் இருந்தாலும் கனரக வாகனத்தை இயக்க நன்கு பயிற்சி பெறவேண்டும் என்பதால், எங்களுக்கு எல்லா வகையான பயிற்சிகளையும் அளித்தனர். முறையாக பயிற்சியினை முடித்து, ஓட்டுநர் உரிமம் பெற்று, பேருந்து ஓட்டுநருக்கான வேலை வாய்ப்பு இருப்பதாக மகேஸ்வரி எங்களுக்கு தெரிவித்தார். தகுதியின் அடிப்படையில் எங்களுக்கு இந்த வேலை கிடைத்தது.
நிறைய வசதிகள் கொண்ட மின்சார பேருந்துகளை இயக்குவதில் சந்தோஷம்தான். மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த பேருந்து அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சில சிறப்பம்சங்களும் இதில் அடங்கியுள்ளன” என்ற மாணிக்கவல்லியை தொடர்ந்தார் அந்தோணி பவுன்,“நான் திருநெல்வேலி மாவட்டம், தாட்டான்பட்டி எனும் கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டோம். தற்போது சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் ஆட்டோ ஓட்டுநர். கொரோனா கால ஊரடங்கின் போது வருமானம் ஈட்டுவதற்காக ஃபுட் டெலிவரி ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தேன். வேறு வேலை ஏதும் இல்லாத சமயத்தில் இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு நான் செய்த அந்த வேலை உதவியாக இருந்தது.
பின்னர் நான்கு சக்கர வாகனம் கற்றுக்கொள்ள ஆசையாக இருந்தது. என் கணவர் எனக்கு ஆதரவாக இருந்தார். Anew ஃபவுண்டேஷன் மூலம் நடைபெற்ற கார் ஓட்டுநர் பயிற்சியில் கலந்து கொண்டேன். அவர்கள் மூலம் எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் கிடைத்தது. அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்கிற முனைப்புடன் இருந்த போது ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கனரக வாகனமான பேருந்து ஓட்டும் பயிற்சி பற்றி தோழிகள் மூலம் தெரிந்தது, பயிற்சியில் சேர்ந்தேன். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் உதவியுடன் எங்களுக்கு பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர்கள் மிகச் சிறப்பாக பேருந்தை இயக்குவதற்கு கற்றுக்கொடுத்தனர்.
பேருந்தை இயக்குவதற்கான ஒவ்வொரு நுணுக்கங்களையும் மட்டுமின்றி சாலை விதிகளும் பயிற்றுவித்தார்கள். நாங்க இப்போது மின்சார பேருந்துகளை இயக்க அவர்கள் அளித்த பயிற்சிதான் காரணம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற தோழிகளாகிய எங்க மூவருக்கும் இப்போது வேலை வாய்ப்பு கிடைத்து பயனடைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எங்களை பார்த்து மேலும் நிறைய பெண்கள் ஓட்டுநர்களாக வரவேண்டும் என விரும்புகிறோம்.
பெண்களை பொருத்தமட்டில் பெரும்பாலும் இலகுரக வாகனங்களை சுலபமாக இயக்கிவிடுவார்கள். ஆனால், கனரக வாகனம் இயக்க கொஞ்சம் தயங்குவார்கள். முறையான பயிற்சி இருந்தால் அதையும் எளிதாக இயக்க முடியும். புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மின்சார பேருந்தின் நீளம் அதிகம் என்பதால் முதலில் தயங்கினோம். ஆனால், சாதாரண பேருந்தை போலவே இதுவும் இயக்குவதற்கு எளிதாக உள்ளது. பெண்கள் வெளியில் வந்து திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்’’ என்றார் அந்தோணி பவுன்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்