Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்பைசி, டாங்கி, ஹைஜீன்தான் எங்களின் டேக்லைன்!

நன்றி குங்குமம் தோழி

சாட் உணவுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகள். பெரும்பாலும் சாலை ஓரங்களில் அல்லது சின்னக் கடைகளில் இவை விற்கப்படும். ஒரு சில உணவகங்கள் சாட் வகைகளுக்காகவே பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் கஃபே செட்டப்பில் சென்னை அண்ணாநகரில் இயங்கி வருகிறது ‘ஜிக்கிஸ் சாட் சென்ட்ரல்.’ பாரம்பரிய முறையில் இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் இந்த சாட் உணவகத்தை அமைத்துள்ளார் ஜிங்கேஷ். இந்த உணவகத்தில் ஏற்கனவே ஸ்மால் பைட்ஸ் முறையில் அமெரிக்கன் உணவுகளை வழங்கி வரும் இவர் சாட் உணவுகளுக்காக தனிப்பட்ட கவுன்டர் ஒன்றை அதில் அமைத்துள்ளார்.

‘‘ஸ்டீல் மற்றும் இரும்புதான் எங்க குடும்பத் தொழில். பூர்வீகம் குஜராத் என்றாலும் நாங்க 1960ல் சென்னைக்கு குடி பெயர்ந்தோம். இங்கு ஒரு ஹார்டுவேர் கடையினை அப்பா துவங்கினார். அது அப்படியே வளர்ந்து தற்போது நாங்க குடும்பமாக ஸ்டீல் மற்றும் இரும்பு பிசினஸில் ஈடுபட்டு வருகிறோம். எனக்கு உணவு மேல் தனிப்பட்ட ஈர்ப்புண்டு. அதனால் சென்னையில் ஒரு உணவகம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. முதலில் அமெரிக்க உணவகம் ஒன்றினை அறிமுகம் செய்தேன். இரண்டு வருடத்திற்கு மேல் அதனை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

அதில் கிடைத்த அனுபவத்தில் மல்டி குசைன் உணவகத்தினை ஆரம்பித்தேன். ஆனால், மக்கள் விரும்பும் உணவு வேறாக இருந்தது. ஒரே இடத்தில் அனைத்து உணவுகளையும் சாப்பிட மக்கள் விரும்புவதில்லை என்று புரிந்துகொண்டேன். அதனால் ஒரே உணவகமாக இல்லாமல், ஒவ்வொரு உணவுகளுக்கும் தனிப்பட்ட உணவகம் அமைக்க திட்டமிட்டேன். அவ்வாறு அமைக்கப்படும் உணவகத்தில் குறிப்பிட்ட உணவுகள்மட்டும் தனிச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதில் உருவானது தான் இந்த ஜிக்கிஸ் உணவகம். இதில் முதலில் அமெரிக்கன் உணவுகளை ஸ்மால் பைட்ஸ் அமைப்பில் கொடுக்க விரும்பினேன்.

பெரும்பாலானவர்கள் ஸ்மால் பைட்ஸ் உணவுகளைதான் குறிப்பாக இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். மேலும், இது போன்ற உணவுகள் நண்பர்களுடன் நேரம் செலவழித்துக் கொண்டே சாப்பிடக்கூடியவை. அவர்களின் விருப்பம் அறிந்து அனைத்தும் சைவத்தில் கொடுத்து வருகிறேன். அமெரிக்கன் உணவுகளை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் சாட் சென்ட்ரல். நான் இந்த உணவகம் ஆரம்பித்த போது முழுக்க முழுக்க அமெரிக்கன் உணவினை நம் மக்களின் சுவைக்கு ஏற்ப கொடுத்தேன்.

அது போலவே சாட் உணவுகளையும் கொடுக்க திட்டமிட்டேன். மேலும், சென்னையை பொறுத்தவரை சாட் மற்றும் இனிப்புகள் சார்ந்த உணவகங்கள் உள்ளன. ஆனால், சாட் உணவிற்கு மட்டும் கஃபே ஸ்டைலில் இங்கு உணவகங்கள் இல்லை. சாட் உணவுகள் இங்கு பெரும்பாலும் ஸ்ட்ரீட் உணவுகளின் லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருப்பதால், பானிபூரி, பேல் பூரி போன்றவை சிறிய கடைகள் அல்லது தள்ளுவண்டி போன்ற கடைகளில்தான் விற்கப்படுகின்றன. அந்த உணவினை நண்பர்களுடன் அமர்ந்து சிரித்துப் பேசி ரசித்து சாப்பிடும் படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது’’ என்றவர் இங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விவரித்தார்.

‘‘சமோசா சென்னா, கட்லெட், பேல் பூரி, சேவ் பூரி, பானி பூரி, தஹி பூரி போன்ற சாட் உணவுகளைதான் பெரும்பாலானவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதே உணவுகளுடன் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து வேறு சில உணவுகளையும் நாங்க அறிமுகம் செய்திருக்கிறோம். இங்கு சூப்பில் ஆரம்பித்து அனைத்து சாட் உணவுகளையும் குறிப்பாக இதனை பிளாட்டர் முறையிலும் தருகிறோம். ரயில் நிலையங்களில் ஒருவித சுவையுடன் தக்காளி சூப் விற்பனை செய்து வருவார்கள். அதே சூப்பினை சாட் ஸ்டைலில் கொடுத்திருக்கிறோம். பிளாட்டரில் பானிபூரியினை அன்லிமிடெட் அளவில் தருகிறோம்.

இதில் கிளாசிக், குண்டூர், புதினா மற்றும் ஜீரா பானிபூரிகள் வரும். பொதுவாக சாப்பாட்டினை சாதம், சாம்பார், ரசம், கூட்டுப் பொரியல் என தாளி வடிவில் தருவாங்க. நாங்க சாட் உணவு களையும் தாளி வடிவில் தருகிறோம். இருவர் சாப்பிடும் வகையில் இருப்பதால் இதனை பலரும் விரும்பி ஆர்டர் செய்கிறார்கள். இதில் இரண்டு ஸ்டார்டர்கள், பாவ் பாஜி, இரண்டு சாட் வகைகள், தவா புலாவ் உடன் பச்சடியுடன் கொடுக்கிறோம். அடுத்து ஃப்ளோட்டிங் பானிபூரி, பூரியினை அதற்கான தண்ணீரில் மூழ்கி சாப்பிடலாம். கொரியன் கிரிஸ்பி கார்ன், ஹனி சில்லி பொட்டேடோஸ், சிஸ் ஆலு பூஜியா சாண்ட்விச்சஸ் என பல வகை உணவுகளை ப்யூஷன் முறையிலும் வழங்குகிறோம். அதில் பஃப் பீட்சா அனைவரின் விருப்பமாக உள்ளது.

பஃப்பின் மேல்மாவில் பீட்சாவில் வைக்கக்கூடிய தந்தூரி பனீர், சில்லி சீஸ், கார்ன் மற்றும் குடைமிளகாய் எல்லாம் சேர்த்து பீட்சா வடிவில் தருகிறோம். இவை தவிர மேகியில் பல வகை ஃபிளேவர்களை சேர்த்து புதுமையாக தருகிறோம். எக்சாடிக் மேகி பாரில் சீஸ் சேகி, பனீர் பட்டர் மசாலா மேகி, ஸ்பைசி கொரியன் மேகி போன்றவை உள்ளது. எங்களின் டேக் லைன் ஸ்பைசி, டாங்கி, ஹைஜீன் என்பதால், இங்கு வழங்கப்படும் அனைத்து உணவிலும் காரம், புளிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார் ஜிங்கேஷ்.

தொகுப்பு: ரிதி

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்