Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

சின்னஞ்சிறு குட்டிக் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அவர்கள் படிக்கும் நர்சரி பள்ளிகளின் அணி வரிசை கூடுதலாகி வரும் இந்தக் காலத்தில், வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் பெற்றோர்களின் வரவேற்பை பெரிதும் பெற்றிருக்கிறார் ரூபினா ஸ்ரீ காந்த். இவர் சென்னை சிட்லப்பாக்கத்தில் ‘ஸ்ரீ பிருந்தாவன்’ என்ற பெயரில் கிண்டர் கார்டன் நர்சரி பள்ளியுடன் இணைந்து டேகேரையும் நிர்வகித்து வருகிறார்.

‘‘பிறந்த ஊர் உடுமலைப்பேட்டை. பள்ளிப் படிப்பினை அங்கு முடித்துவிட்டு, சென்னையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தேன். படிப்பு முடித்ததும் வீட்டில் திருமணம் பேச, கல்யாணத்திற்கு பிறகு முதுகலை பட்டம் மட்டுமில்லாமல் எம்.பில் மற்றும் பி.எட் படிப்புகளும் முடித்தேன். நான் மேலும் படிக்க என் கணவர்தான் என்னை ஊக்குவித்தார். இப்போது என்னுடைய பள்ளியினை நான் சிறப்பாக நடத்த ஆலோசனையும் வழங்கி வருகிறார். நான் இந்தப் பள்ளியினை 2019ல் துவங்கிேனன். இங்கு மூன்று வயது குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் வகுப்புகள் முதல் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி போன்ற நர்சரி வகுப்புகள் உள்ளன.

பொதுவாக இது போன்ற பள்ளிகளில் குழந்தைகளை சிறிய அறையில் வைத்துதான் பாடம் நடத்துவார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. அதனால் விசாலமான இடமாக வாடகைக்கு எடுத்தேன். அதில் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து விசாலமான வகுப்பு அறைகளை அமைத்தேன். பள்ளி வகுப்புகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதால், பள்ளியை சுற்றி ஏராளமான தென்னை, பப்பாளி, சீத்தாப்பழ மரங்கள், துளசி செடிகள் என்று அமைத்திருக்கிறேன். மேலும் குழந்தைகள் படிக்க வருவதால், அந்த இடம் சுத்தமாகவும் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய சுற்றுப்புற சூழலினை அமைத்திருக்கிறோம். இதனால் இயற்கையான முறையில் குழந்தைகள் உற்சாகத்துடனும் குதூகலத்துடனும் படிக்கிறார்கள். முக்கியமாக பள்ளி கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்து வருவதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

நான் மான்டசரி கல்வி திட்டத்தினை முறையாக பயின்றிருக்கிறேன். அந்தப் பயிற்சியினை என் பள்ளி ஆசிரியர்களுக்கும் அளித்திருப்பதால், குழந்தைகளுக்கு பாடங்கள் எளிதில் மனதில் பதியும் படி விளையாட்டு முறையில் பாடங்களை சொல்லித்தர முடிகிறது. இந்தக் கல்வி முறையில் படிப்பு ஒரு பக்கம் என்றால் குழந்தைகளுக்கு ஒழுக்கமும் சேர்த்து கற்பிக்கிறோம். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாடும் பொம்மைகளை திரும்ப எடுத்த இடத்தில் அடுக்கி வைப்பது, தாங்கள் பயன்படுத்தும் துணிமணிகளை இஷ்டப்படி தூக்கி எறியாமல் மடித்து வைப்பது போன்ற பல நல் பழக்கவழக்கங்களையும் சொல்லித் தருகிறோம்.

அடுத்து உணவுப் பழக்கங்களை ஆரோக்கிய முறையில் கடைபிடிக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறோம். தண்ணீரை அவர்கள் தேவையான அளவு குடிக்க வைக்கவும் அதே சமயம் கழிப்பறையினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லித் தருகிறோம். இது போன்ற பழக்கங்களை நடைமுறைப்படுத்தும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

குழந்தைகள் விளையாடும் போது இங்கு காலில்தான் விளையாட பழக்குகிறோம். அவர்கள் விளையாடும் இடத்தில் மணலை பரப்பி இருப்பதால் அவர்கள் கீழே விழந்தாலும் காயம் ஏற்படாது. மேலும் கால் பாதங்களையும் பாதிக்காது. இது குழந்தைகள் நன்றாக நடக்கவும், பாதங்கள் வலுவடையவும் உதவும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சி நிலையினை பெற்றோரை வரவழைத்து அப்டேட் செய்வோம். அந்த சமயத்தில் பெற்றோரிடம் நாங்க கொடுக்கும் ஒரே அட்வைஸ், குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் டி.வி பார்க்கும் பழக்கத்தினை தவிர்த்து அவர்களுடன் நிறைய பேச சொல்கிறோம். தாமதமாக பேசும் குழந்தைகளிடம் நாம் பேச பேசதான் அவர்கள் எளிதாகவும் சீக்கிரமாகவும் பேசுவார்கள்.

சில குழந்தைகள் அடம் பிடித்து தனக்கு வேண்டியதை பெறுவார்கள் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்கும் எல்லாவற்றையும் வாங்கித் தந்து பழக்கக் கூடாது. அவசியம் என்றால் மட்டுமே வாங்கித் தர வேண்டும். தேவையில்லாத வற்றுக்கு நோ சொல்லி பழக்குங்கள். அதே போல் கீழே அமர்ந்தும், உணவினை வீணாக்காமலும் கீழே சிந்தாமல் கையால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட குழந்தைகளுக்கு சுவற்றில் கிறுக்க பிடிக்கும். அதற்காக பள்ளியில் ஒரு இடத்தினை ஒதுக்கி இருக்கிறோம். அவர்கள் அந்த சுவற்றில் விருப்பம் போல் கிறுக்கலாம், வரையலாம். ஒரு டீச்சருக்கு பத்துக் குழந்தைகள் மேல் அனுமதியில்லை. அதனால் ஒவ்வொரு குழந்தை மேல் கவனம் செலுத்த முடியும். மேலும் அவர்கள் ஒருவருடன் சேர்ந்து விளையாடவும், நட்புடன் அன்பை பகிரவும் கற்றுக் கொள்கிறார்கள்.

நான் இந்தப் பள்ளியை திறம்பட நடத்த என் குடும்பத்தினர்தான் முக்கிய காரணம். அப்பா தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்க கற்றுக் கொடுத்தார். அம்மா வீட்டில் டியூஷன் எடுப்பாங்க. அதைப் பார்த்துதான் எனக்கும் பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் என் கணவர் மற்றும் இரண்டு மகள்களும் பள்ளிப் பணிகளில் பெரிதும் உதவி வருகிறார்கள். என்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் டேகேரில் குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்கள் இல்லாமல் நான் இந்த வெற்றிப் பாதையில் பயணித்து இருக்க முடியாது.

தற்போது வாடகை இடத்தில்தான் இந்தப் பள்ளியினை இயக்கி வருகிறேன். அடுத்தகட்டமாக சொந்தமாக ஒரு இடம் வாங்கி அங்கு இரண்டாவது கிளையில் பிரைமரி மட்டுமில்லாமல் மேல்நிலைப் பள்ளியினை அதில் துவங்க வேண்டும் என்பதுதான் என் கனவு’’ என்றார். ரூபினா ஸ்ரீ காந்த்.

தொகுப்பு: விஜயா கண்ணன்