Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வரதட்சணை கொடுப்பது இயல்பானதா?

நன்றி குங்குமம் டாக்டர்

திருமணமான ஒரே மாதத்தில் மணப்பெண் தற்கொலை ேபான்ற செய்தியினை நாம் அன்றாடம் படித்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் வரதட்சணை. 1961ல் வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும், முழுமையான தடை கிடைக்கவில்லை. அதற்கு ஆதாரம்... தமிழகத்தை நடுங்க வைத்த திருப்பூரை சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை சம்பவம். இவரைத் தொடர்ந்து திருவள்ளூர், பொன்னேரியை சேர்ந்த லோகேஸ்வரி என்ற பெண்ணும் திருமணமான நான்கே நாட்களில் வரதட்சணை கொடுமையால் தற்ெகாலை செய்துள்ளார். வரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம். ஆனால், வரதட்சணை கொடுக்கும் கலாச்சாரம் இன்றும் மக்கள் மனதில் அழியாமல் நிலைத்திருப்பதை இந்த இரு சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வரதட்சணை கொடுமைக்கான சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரித்தார்.‘‘செல்வாக்கான குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த பெண் ரிதன்யா. படிச்சவங்க, ஆரி போன்ற கைத்ெதாழில் தெரியும், அப்பாவின் நிறுவனத்தில் பொறுப்பில் இருந்துள்ளார். மல்டிடாலென்ட் பெண் ஒரு தவறான முடிவினை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண், பெண் யாராக இருந்தாலும் மனதில் ஏற்படும் வலியை போக்க சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேவைப்படும்.

அதேபோல் திருமணமான பெண்களுக்கு எப்போதும் அம்மாவின் வீடுதான் ஆறுதல். அதற்கு முக்கிய காரணம் திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைக்கு பக்கபலமாக பெற்றோர் உடன் இருப்பார்கள் என்பதுதான். அதே சமயம் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. மேலும் பிரச்னையை கண்டு பெண்கள் பயந்து ஓடுகிற காலம் இப்போது இல்லை. அதை துணிவுடன் சந்தித்து தீர்வும் காண்கிறார்கள்.

ஆனால், ரிதன்யாவின் பிரச்னை மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை மட்டுமில்லாமல் கணவரின் பாலியல் வன்முறையும் உடன் ேசர்ந்திருக்கிறது. திருமணமான சில நாட்களில் பிரச்னை என்று பெண் அம்மாவின் வீட்டிற்கு வந்தாலே அவளின் மணவாழ்க்கையில் பிரச்னை என்பதை பெற்றோர் உணர வேண்டும். அதே சமயம் திருமணமான சில நாட்களிலேயே கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் என்பதை வெளிப்படையாக சொல்ல முதலில் கூச்சப்படுவாள்.

தனக்கான ஆறுதல் பெற்றோர் என்று தேடி வரும் பெண்ணிடம், திருமண வாழ்க்கை என்றாலே அனுசரித்து ேபாக வேண்டும் என்று சொல்லாமல், உறுதுணையாக இருந்தால், தவறான முடிவு எடுக்க எண்ணம் தோன்றாது. திருமணமான பெண் பிறந்த வீட்டில் வந்து தங்கினால், மற்றவர்கள் தப்பாக பேசுவார்கள், பெற்றோருக்கும் சிரமம் என்று நினைக்கும் அப்பாவின் செல்லப் பெண்கள் தங்கள் பிரச்னையை வெளிப்படுத்துவதில்லை.

ஆண் பிள்ளைக்கு உத்தியோகம் புருஷலட்சணம். ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்திருக்கும் செல்வாக்கான வீட்டு ஆண் பிள்ளைகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல்தான் வளர்வார்கள். இவர்களுக்கு தானாகவே மற்ற பழக்கங்களும் ஏற்படும். அதில் சிக்குவது இவர்களை நம்பி திருமணம் செய்து வரும் பெண்கள். அவனைப் பொறுத்தவரை மனைவி ஒரு உயிருள்ள அழகான பொம்ைம.

அதைக் கையில் கொடுத்ததால் விருப்பம் போல் விளையாடச் செய்வார்கள். ஒரு பக்கம் வரதட்சணை கொடுமை, மறுபக்கம் கவனின் துன்புறுத்தல், பெற்றோரிடம் தீர்வு கிடைக்கவில்லை... விளைவு பயம், மன அழுத்தம். நிர்கதியாக நிற்கும் போது தைரியம் குறைந்து அப்படி ஒரு வாழ்க்கை அவசியமா என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் தற்கொலை.

இதற்கு முக்கிய காரணம் நம்முடைய சமுதாய கட்டமைப்பு. திருமணத்திற்கு முன்பு வரை தன்னுடையதாக இருந்த வீடு இப்போது இல்லை. கணவன் வீடுதான் இனி எல்லாம். திருமணமான பெண் தாய் வீட்டில் தங்கிவிட்டால் நாலு பேர் தப்பாக பேசுவாங்க. ஒருவர் நல்லா இருந்தாலும், வீழ்ந்தாலும் பேசுபவர்கள்தான் இந்த நாலு பேர். வாழ்க்கை துணைவனால் சித்திரவதை அனுபவிக்க நேரிடும் போது அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டாம் என்று உதறிவிட்டு வெளியே வருவது தவறில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இன்று மாறிவிட்டது. வேறு ஆணுடன் வாழ விருப்பமில்லை என்றால் மேற்படிப்பு படிக்கலாம், தனக்கென்று ஒரு வேலையை அமைத்துக் கொண்டு வாழலாம். அவ்வாறு வாழும் பெண்களும் உள்ளனர். வாழ நிறைய வழிகள் இருக்கு. நம் வாழ்க்கை நம் கையில்’’ என்றவர் வரதட்சணைக்கான தண்டனைகள் குறித்து விவரித்தார்‘‘வரதட்சணை கொடுமையால் திருமணமாகி ஏழு வருஷத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், அது வரதட்சணை மரணம் என்று எடுத்துக்கொள்ளப்படும். முன்னர் இந்திய தண்டனை சட்டத்தில் 300 பி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் 7 வருடம் சிறை தண்டனை அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

இந்த 300 பி தற்போது 80 BNSS சட்டமாக மாறியுள்ளது. அதேபோல் 498 ஏ சட்டத்தின் கீழ் கணவன் வீட்டினர் மற்றும் உறவினரால் பெண் கொடுமைப்படுத்தப்பட்டால் மூன்று வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும். தற்போது 85 மற்றும் 86 பிரிவுச் சட்டம் இது குறித்து பேசுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கும் தனிப்பட்ட சட்டம் மற்றும் அதற்கான தண்டனையும் அடங்கும். இதில் பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தினால் அதனை சட்டத்தின் முன்பு நிரூபிக்க வேண்டும். வன்கொடுமைக்கு ஆளான பெண் இறக்கும் முன் கொடுக்கும் வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக கருதப்படும்.

வரதட்சணை தடைச் சட்டத்தில் முக்கியமாக ஒரு பிரிவு உள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டில் போடப்படும் நகைகள் மற்றும் மணமகனுக்கு அளிக்கும் நகைகள் குறித்து பட்டியலிட வேண்டும். அந்தப் பத்திரத்தில் மாப்பிள்ளை, மணப்பெண் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் திருமணத்திற்கு வரும் பொது மக்கள் இருவர் கையெழுத்திட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதனை யாரும் பின்பற்றுவது இல்லை.

1961ல் பெரியார் காலத்தில் வரதட்சணை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு வரதட்சணை வாங்குவது குறைந்தது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை ஒப்பிட்டு பார்க்கும் ேபாது வரதட்சணை கொடுமையில் இருந்து நாம் முன்னேறி இருக்கிறோம் என்று நினைத்திருந்தோம். பெண்களுக்கான சுதந்திரம், கல்வி, வேலை வாய்ப்பு இருப்பதாக மிதந்து கொண்டிருந்தோம். அதற்கு பெரிய முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது இந்த சம்பவம். இது தொடர்ந்தால் பெண்களின் நிலை! இதை ஒடுக்க அரசு கட்டாயம் வழி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு நாம் எதை கற்றுத் தருகிறோமோ இல்லையோ தைரியம், மனஉறுதி, உடல் வலிமையை கொடுக்க வேண்டும். கல்வியுடன் ஒரு தற்காப்புக்கலையும் சொல்லித் தருவது அவசியம். பெண்கள் வலிமை வாய்ந்தவர்கள். உன்னை காத்துக் கொள்வது மற்றவர் கையில் இல்லை, உன்னிடம்தான் உள்ளது’’ என்றார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. வரதட்சணை கொடுப்பது சோஷியல் அக்செப்டன்ஸ் என்று பெண் வீட்டார் நினைப்பதாக கூறுகிறார் மனநல ஆலோசகர் ரேவதி. ‘‘வரதட்சணை கொடுப்பது இயல்பானது என்கிறார்கள் பெண்ணை ெபற்றவர்கள்.

கவுரவத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். தங்கள் வீட்டுப்பெண்ணை வெறும் கையுடன் ஒரு வீட்டில் வாழ அனுப்புவது குற்றமாக கருதுகிறார்கள். தன் பொண்ணுக்கு நிறைய கொடுத்து திருமணம் செய்து வைப்பவர் சக்சஸ்ஃபுல்லான அப்பா என்று திருப்தி அடைகிறார்கள். பிறகு ஒப்பிடுவது. மற்றவர்களை விட தன் மகளுக்கு நிறைய செய்ய வேண்டும்.

எவ்வளவு வரதட்சணை கொடுத்தாலும் பாதிக்கப்படுவது பெண்தான். எவ்வளவு கொடுத்தாலும் நிறைவாக இல்லை என்று குறை சொல்லும் நிலையினை காக்னிடிவ் டிஸ்சோனென்ஸ் என்று சொல்வோம். இதனால் வாழ வரும் பெண்ணிற்கு மனரீதியாக அசவுகரிய நிலை ஏற்படுத்துவார்கள். பையன் வீட்டில் பொறுத்தவரை, பெண் வீட்டில் வரதட்சணை தரவில்லை என்றால் பையனுக்கு உடல் நிலை சரியில்லை என்று மற்றவர் நினைப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது. அடுத்து பையன் வீடு என்றாலே சுப்ரீயர். அடுத்து பேராசை, எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியடையாத நிலை. உழைப்பே இல்லாமல் பெண்ணும் பொன்னும் கிடைக்கும் போது ஏன் தவிர்க்க வேண்டும் என்ற மனநிலை.

பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையை தொடரும் பெண்ணிற்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருக்கும் போது, அதை தட்டிக் கேட்டு, நம்பிக்கை கொடுத்து, பாதுகாப்பது பெற்றோரின் கடமை. மாறாக பிற்போக்குத்தனமாக யோசிப்பது அறியாமையின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.வரதட்சணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே தற்கொலை எண்ணம் ஏற்படாது. பிரச்னையை பெற்ேறாரிடம் சொல்லும் போது அனுசரிக்க சொல்வார்கள்.

ஆனால், வன்கொடுமைக்கு அனுசரிக்க முடியாது என்று பெற்றோர்கள் புரிந்துகொள்வது அவசியம். அதே சமயம் திருமணத்திற்கு அதிக செலவு செய்து இருப்பதால் பெண் வீட்டில் பின்வாங்க மாட்டார்கள் என்பது கணவனின் கணிப்பு. இந்த நிலை பெண்ணிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குழப்பமான சூழலில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்.

இன்றைய சூழலில் திருமணத்திற்கு முன் பிரீமேரிடல் கவுன்சிலிங் அவசியம். உடல், உளவியல் மற்றும் நிதி சார்ந்த பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிப்பது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகி வருகிறது. குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு மனைவியே இருந்தாலும் விருப்பமின்றி தொடக்கூடாது என்பதை கூறி பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.  எல்லாவற்றையும் விட சரியான துணையை தேர்வு செய்வது வாழ்க்கையில் மிகவும் முக்கியம்’’ என்றார் ரேவதி.

தொகுப்பு: ஷம்ரிதி