Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கியத்தின் திறவுகோலாகும் மலர் மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எனக்கு தலைவலி பிரச்னை இருந்தது. தலைவலி வந்தால் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை இருக்கும். மைக்ரேன் தலைவலி போல் வலிக்கும். காரணம், என்னுடைய கோபம். அதற்கு நான் மலர் மருத்துவம் எடுத்துக்கொண்டேன். அன்று முதல் என் கோபம் குறைந்து... பாசிடிவாக சிந்திக்க ஆரம்பித்தேன்’’ என்கிறார் துர்கா தேவி. கோவையைச் சேர்ந்த இவர் தன் மனதுக்கு ரிலாக்ஸ் கொடுத்த அந்த மருத்துவத்தை முறையாக பயின்று, அதன் மூலம் மற்றவர்களுக்கும் அதனை பரிந்துரை செய்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னைதான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள துறை அதிகாரியாக வேலை பார்த்தேன். எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டது போல் பிசியாவே இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கோவையில் செட்டிலாகிட்டேன். என் வேலையையும் ராஜினாமா செய்திட்டேன். காரணம், இருவருமே வேலைக்கு சென்று ஸ்ட்ரெசாக வேண்டாம் என்று நினைத்தோம். அதனால் நான் என் வேலையை விட்டுவிட்டு, முழு நேர இல்லத்தரசியாக மாறினேன்.

வேலைக்கு செல்வதால் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அது தலைகீழானது. ேவலைக்கு போகாமல் நாள் முழுக்க வீட்டில் இருப்பதே எனக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவரும் வேலை காரணமா வீட்டிற்கு லேட்டா வருவார். பம்பரம் போல் சுழன்று வேலை பார்த்த எனக்கு வீட்டில் அடைந்து இருப்பது அதிக கோவத்தை தூண்டியது. அதை என் கணவரிடம்தான் வெளிப்படுத்துவேன். நமக்கு பிடிச்ச விஷயத்தை விட்டுவிட்டு இருக்கும் போது ஏற்படும் வலியே என் மனதினை பெரிய அளவில் பாதித்தது. இந்த மன உளைச்சலைக் குறைக்க என் மாமா எனக்கு ஹோமியோபதி சிகிச்சை கொடுத்தார். அந்த மாத்திரைகளை தலைவலிக்கும் போது மட்டும் சாப்பிட சொன்னார்.

பொதுவா நான் மாத்திரை, மருந்து எல்லாம் எடுத்துக்க மாட்டேன். ஊசியும் போட்டுக் கொள்ள மாட்டேன். அதனால் என் கணவர் இது ஸ்வீட் மாத்திரைன்னு சொல்லித்தான் கொடுப்பார். அந்த மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிச்சதும் எனக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பாசிடிவ் சிந்தனை எழுந்தது. வேலைக்குப் போக வேண்டாம்னு முடிவு செய்தாச்சு. அதற்காக வீட்டில் சும்மா இருக்கணும்னு அவசியம் இல்லையே. வீட்டில் இருந்தபடியே வேறு வேலை செய்யலாம். அதன் மூலம் என் நேரத்தை கழிக்க முடிவு செய்தேன். தையல் கலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதனுடன் ஆரி வேலைப்பாடுகளையும் கற்றுக்கொண்டேன். எனக்கான உடைகளை நானே டிசைன் செய்தேன்.

நான் அணியும் உடையினை பார்த்து கேட்பவர்களுக்கும் வடிவமைத்துக் கொடுத்தேன். ஒரு நாள் திடீரென்று எனக்கு தலைவலி ஏற்பட்டது. அந்த சமயத்தில் என் கணவர் வீட்டில் இல்லை. அதனால் அவர் எப்போதும் எனக்கு கொடுக்கும் ஹோமியோபதி மாத்திரை எங்கே உள்ளதுன்னு தெரியாமல் அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் சொன்ன இடத்தில் இருந்தது ஹோமியோபதி மாத்திரை இல்லை. பார்க்க அதேபோல் இருந்தாலும், அது வேறு என்று மட்டும் எனக்கு தெரிந்தது. அலுவலகம் விட்டு வந்தவரிடம் இது என்ன புதுசா இருக்குன்னு கேட்ட போதுதான் எனக்கு இந்த மலர் மருத்துவம் பற்றி தெரிய வந்தது. புதுசாக இருந்ததால், அது குறித்து இணையத்தில் ஆய்வு செய்தேன்’’ என்றவர் மலர் மருத்துவம் பற்றி விவரித்தார்.

‘‘என் கணவர் இந்த மருத்துவம் பற்றி சொன்னதும் முதலில் என் மாமாவிடம் விசாரித்தேன். பொதுவாக அலோபதி, ஹோமியோபதி போன்ற மருந்துகள் எல்லாம் உடலில் பாதிப்பு ஏற்படும் போது கொடுக்கக்கூடிய மருந்துகள். மலர் மருந்துகள் முழுக்க முழுக்க மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த கொடுக்கப்படுபவை. மனநிலை சம்பந்தமா 38 வகை பிரச்னைகள் உள்ளன. அவை ஒவ்ெவான்றுக்கும் மலர்களின் எசன்ஸ் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அந்தந்த பிரச்னைக்கு ஏற்ப மருந்துகளை உட்கொண்டால் நாளடைவில் தீர்வு கிடைக்கும். மாமா இதுகுறித்து சொல்ல சொல்ல எனக்கு ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினேன்.

இந்த மருத்துவம் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். இதற்காக பயன்படுத்தப் படும் பூக்கள் அனைத்தும் இங்கிலாந்தில் உள்ள காடுகளில் விளைபவை. 1936களில் டாக்டர் எட்வர்ட் பாச் என்பவர்தான் இந்த மருந்துகளை கண்டறிந்தார். அவர் ஹோமியோபதி மருத்துவர் என்றாலும், நல்ல ஆரோக்கியத்திற்கான திறவுகோல் ஆரோக்கிய மனம் என்பதை உணர்ந்தார். நம்முடைய மனதினை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள சில வகையான பூக்களே மருந்தாகும் என்பதை தெரிந்து கொண்டார். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் பூக்கள், மரம் மற்றும் செடிகளில் இருந்து ஒவ்வொரு உணர்ச்சியினை குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டறிந்தார்.

ஆரஞ்ச், மஞ்சள், பச்சை, பர்பில், பிங்க், நீலம் என நிறங்களைக் கொண்டு ஒரு மனிதனின் உணர்வுகளை ஏழாக பிரித்தார். அதன் பிறகு அதற்கான பூக்களை அறிந்து தீர்வு கண்டறிந்தார். இதில் ஒவ்வொரு நிறமும் ஒரு உணர்ச்சியினை குறிக்கும். ஆரஞ்ச் பயம், மஞ்சள் நிச்சயமற்ற தன்மை, நீலம் ஆர்வம் இல்லாமை, பர்பில் தனிமை, பச்சை அதிக தாக்கம் மற்றும் யோசனைகள், பிங்க் விரக்தி, இண்டிகோ மற்றவர் நலனில் அதிக அக்கறை செலுத்துவது.

38 பிரச்னைக்கும் செஸ்ட்நட் பட், கிளிமேடிஸ், மஸ்டர்ட், வைட் செஸ்ட்நட், காட்டு ரோஜா, வாட்டர் வயலெட், வால்நட், ஓக், பைன், ஸ்வீட் ஆரஞ்ச், ராக் வாட்டர், பீச், ஆலிவ், வைல்ட் ஓட், மஸ்டர்ட் போன்ற பூக்கள், மரங்கள் மற்றும் மரப்பட்டைகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஒரு பூவினால் ஏற்பட்ட மாற்றம்தான் என்னை தையல் கலையில் ஈடுபட வைத்தது. அதனால் நான் இதனைப் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள விரும்பினேன்’’ என்றவர் ஆன்லைன் முறையில் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.

‘‘இது கிட்டத்தட்ட கவுன்சிலிங் மாதிரியான சிகிச்சை முறைதான். ஒருவர் தலைவலி என்று வரும்போது, அவர்களிடம் முதலில் தலைவலி எப்போது வரும், எதனால் வரும் மற்றும் தூக்கமின்மை, கோவம், படபடப்பு போன்ற பிரச்னைகள் குறித்து அனைத்து விவரங்களும் ேகட்டு தெரிந்துகொள்ள வேண்டும். சில சமயம் அவர்களுக்கு இரண்டு விதமான பிரச்னைகள் இருக்கும். அதாவது, பயம் இருந்தால் அவர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்னை இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மருந்துகளை பரிந்துரை செய்வோம். கோவிட் பாதிப்பிற்கு பிறகு இன்றைய குழந்தைகள் அனைவரும் செல்போனிற்கு அடிமையாகி விட்டனர். இதனால் படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. அதற்கும் இதில் தீர்வுகாண முடியும்.

எங்க பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்தது. நான் அவர்களுக்கு மலர் மருந்துகளை பரிந்துரை செய்தேன். நல்ல வித்தியாசம் தெரிந்தது. அதேபோல் கோவப்படுபவர்கள் இதனை தொடர்ந்து எடுக்கும் போது, ஏன் கோவப்படுகிறோம். இந்த விஷயத்திற்கு கோவப்பட வேண்டுமா என்ற கேள்வி அவர்களுக்குள் எழும். அதற்கான தீர்வும் அவர்கள் கண்டறிவார்கள். பயமும் ஒருவித உணர்வுதான். அதனையும் இதன் மூலம் குணப்படுத்தலாம். முதலில் இருட்டில் செல்ல பயப்படுவார்கள். அதன் பிறகு சென்று பார்க்கலாம் என்று முயற்சிப்பார்கள். அடுத்து சென்றவுடன் பயப்பட ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வருவார்கள். இந்த மருந்துகளில் ஒரு சில துளிகள் எடுத்து அதனை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

இந்த மருந்துகளை நான் இங்கிலாந்தில் உள்ள டாக்டர் எட்வர்ட் பாச் அவர்களின் நிறுவனத்தில் இருந்துதான் வாங்குகிறேன். அதனை நான் என்னிடம் வருபவர்களின் பிரச்னைக்கு ஏற்ப அளிக்கிறேன். மேலும் இந்த மருந்துகளை காடுகளில் விளையும் பூ, செடிகளை கொண்டு தயாரிப்பதால், நாம் ஆர்டர் செய்யும் போது அதன் ஒரு முழு செட் மருந்துகளை நமக்கு அனுப்பிடுவார்கள்.

அதனை தேவைக்கு ஏற்ப நாங்க இங்கு கொடுப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது. இப்போது பல உடல் ரீதியான பிரச்னைகள் மனதில் ஏற்படும் குழப்பங்களால்தான் ஏற்படுகின்றன. அதனை சரி செய்தாலே உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்’’ என்றார் துர்கா தேவி.

தொகுப்பு: ஷன்மதி