Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

Foreigners ஆட்டோ ரிக்‌ஷா Challenge

நன்றி குங்குமம் தோழி

ஆட்டோவில் பயணிப்பதே நமக்கெல்லாம் அட்வென்சர்தான். ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கு வந்து, நம் சாலைகளில் பயணிக்கவில்லை, அவர்களே ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே!! இப்படியான ஆச்சரியத்தை நமக்கும், அட்வென்சர் உணர்வை வெளிநாட்டவருக்கும் வழங்குபவர்கள்,“ரிக்‌ஷா சேலன்ஜ்” என்கிற பெயரில் வெளிநாட்டவர்களை ஒருங்கிணைக்கும் டிராவல் வெப்சைட் டீம். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.

‘ரிக்‌ஷா சேலன்ஜ்.காம்’ நிகழ்வை ஒருங்கிணைக்கும் பெரிய நிறுவனம் ‘டிராவல் சயின்டிஸ்ட்.காம்.’ ‘‘நாம் சுற்றுலா சென்றால், முக்கிய இடங்கள், கோயில்கள், வரலாற்று சின்னங்கள், நினைவிடங்கள், இயற்கை எழில் கொஞ்சுகிற இடங்களைத்தானே டிராவல்ஸ் நிறுவனங்களும், டூரிஸ்ட் கைடுகளும் நமக்கு காட்டுவார்கள். ஆனால் நாங்கள் வழக்கமான இடங்களைத் தவிர்த்து, நமது இந்தியாவின் கடைகோடி கிராமங்கள், அவர்களின் வாழ்விடம், வேறுபடுகிற வானிலை மாற்றங்கள், நமது சாலைகள் கொடுக்கும் பயண அனுபவமென, நமது இயல்பான வாழ்வியல் அனுபவங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்குகிறோம்’’ என பேசத் தொடங்கியவர் “ரிக்‌ஷா சேலன்ஜ்” நிகழ்வை ஒருங்கிணைக்கும் “டிராவல் சயின்டிஸ்ட்” நிறுவனத்தில் இந்திய அளவில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பிரின்ஸ்லி ஜெயச்சந்திரன்.

‘‘இதில் தமிழ்நாடு ரன், மலபார் ரேம்பேஜ், க்ளாசிக் ரன், டெக்கான் ஒடிசி, மும்பை எக்ஸ்பிரஸ் என ஒரு வருடத்தில் ஐந்து பயணத் திட்டம் இருக்கிறது’’ என்றவர், ‘‘இந்த ஆண்டிற்கான க்ளாசிக் ரன் பயணத் திட்டம் டிசம்பர் 28 சென்னையில் தொடங்கி, ஜனவரி 6 திருவனந்தபுரத்தில் முடிகிறது. அதிகபட்சமாக வெளிநாட்டவர் 25 குழுக்களாக இதில் பங்கேற்கிறார்கள். பயண தூரம் 1000 கிலோ மீட்டர்’’ என நம்மை மேலும் வியப்பூட்டினார்.

‘‘இன்டர்நேஷனல் டிரைவிங் பெர்மிட் இருக்கிற வெளிநாட்டவர் மட்டுமே இந்த ரிக்‌ஷா சேலன்ஜ் பயணத்திற்கு அனுமதி என்பதால், சென்னை வந்திறங்கிய முதல்நாள் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் பயிற்சி வழங்கப்படும். அவர்களே விரும்பி இந்தப் பயணத்தை மேற்கொள்வதால், ஒரே நாளில் எங்கள் பயிற்சிக்கு ஆண்களும், பெண்களும் அடாப்டாகி ஓட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு ஆட்டோவிற்கு மூவர் மட்டுமே. மூவரும் மாறி மாறி ஆட்டோவை ஓட்டுவார்கள்.

பாதுகாப்பிற்காக நாங்கள் யாரும் அவர்களைப் பின்தொடர்வதில்லை. டிரிப் ஷீட்டை அவர்கள் கைகளில் கொடுத்துவிடுவோம். அவர்களுக்கும் எங்களுக்குமான கனெக் ஷன் பாயின்ட் சமூக வலைத்தளமும், கைபேசியும் மட்டுமே. கூகுள் மேப் மூலம் அழகாகப் பயணித்து குறிப்பிட்ட இடங்களை சரியாக வந்தடைவார்கள். ஆட்டோ ரிப்பேர் அல்லது சாலை விபத்து என்றால் மட்டுமே நாங்கள் ஸ்பாட்டில் இருப்போம். அவர்களின் உடமைகள் அனைத்தும் ஒரு கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு ஆட்டோக்களுக்கு பின்னால் பயணிக்கும்.

வரும் டிசம்பர் 28ல் தொடங்கும் எங்களுடைய க்ளாசிக் ரன் பயணத் திட்டபடி, சென்னையில் நீண்ட அழகிய கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொடங்கி புதுச்சேரி, தஞ்சாவூர் என பல்வேறுவிதமான சாலைகளின் மார்க்கமாக பயணித்து, ஆறாவது நாள் மதுரை, 7வது நாளில் ராஜபாளையம் பிறகு தூத்துக்குடி என நீளும். எங்களின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் குமார் பிரம்மானந்தம் தற்போது ஹங்கேரி நாட்டில் இருக்கிறார்.

பயணத் திட்டபடி தூத்துக்குடியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில், ஜனவரி 14ல், தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாடும் நிகழ்வை ஒவ்வொரு ஆண்டுமே ஒருங்கிணைக்கிறோம். வெளிநாட்டுப் பெண்கள் பூ வைத்து, சேலை, ரவிக்கை அணிந்து, ஆண்கள் வேட்டி, துண்டுடன் தமிழர் பாரம்பரிய முறையில், சூரிய வழிபாடுடன் கோலமிட்டு, பொதுவெளியில் அடுப்பு மூட்டி, அரிசி, வெல்லம், தேங்காய், நெய், காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்தோடு மண் பானைகளில் பொங்கல் வைத்து, கொலவை கொட்டி தமிழர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும்.

நம்மைப் போலவே வெளிநாட்டுப் பெண்களும் கொலவை போடுவார்கள். கும்மி அடிப்பார்கள். ஆர்வமாக பொங்கல் வைப்பார்கள். சில பெண்கள் சேலையை ஆட்டோ ஓட்டுபவர்கள் லுங்கி அணிவது போல் தொடைக்கு மேல் தூக்கிக்கட்டி பொங்கல் வைக்கின்ற காட்சி பார்க்கவே சிரிப்பை வரவழைக்கும்’’ என நிகழ்வை அசை போட்டு புன்னகைத்தபடி மேலும் தொடர்ந்தார்.

‘‘பயணத் திட்டத்தின் 9வது நாளில் தூத்துக்குடியில் இருந்து கிளம்பும் ஆட்டோ சேலன்ஜ் நிகழ்ச்சி நேராக கன்னியாகுமரி கடற்கரை வந்தடையும். இறுதி நாளில் திருவனந்தபுரத்தில் பயணம் நிறைவடையும்.

அவர்களே ஆட்டோ ஓட்டுநர் இருக்கையில் இருந்து ஓட்டுநர் பார்வையில், சாலை விதிகளை மீறாமல், மிதமான வேகத்தில், எந்த வாகனத்தையும் ஓவர் டேக் செய்யாமல், வாகனங்கள் பின்னாலேயே பயணித்து, நமது கடைக்கோடி கிராமங்கள் தரும் வாழ்வியல் அனுபவங்களை அறிந்தும்... உணர்ந்தும்... வியந்தும் விடைபெறுவார்கள். இந்தப் பயணத் திட்டங்

களில், வெளிநாட்டு இளைஞர்கள் மட்டுமில்லை முதியவர்களும் பங்கேற்கிறார்கள். பெரும்பாலானவரின் கேள்வி, இத்துனூண்டு குடிசைக்குள் எப்படி இத்தனை பேர், ஆடு, மாடு, கோழி, நாய்,

பூனைகளோடு வாழ்கிறார்கள் என்பதே? 2006ல் தொடங்கிய நிகழ்ச்சி. தொடர்ந்து 14 வருடமாக கொண்டாடி வருகிறோம். தற்போது 15வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம். முக்கியமாக இந்தப் பயணத் திட்டங்களில், யு.கே., யு.எஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சீனா, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வெளிநாட்டவர் வந்து ரிக்‌ஷா சேலன்ஜ் நிகழ்ச்சியில் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் பங்கேற்கிறார்கள்.

எங்களின் பயணத் திட்டத்தில், தமிழ்நாடு பயண அனுபவம் தவிர்த்து, கேரளா-கர்நாடகா-கோவா, கோவா-மகாராஷ்டிரா-கர்நாடகா, மகாராஷ்டிரா-கோவா, கர்நாடகாவின் காடுகள், மலைகள், கடற்கரைகள், சமவெளிகளை கடக்கின்ற 10 நாட்கள் பயணத் திட்டங்கள் என்று வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு பிரிவுகளில் இருக்கிறது. இந்தப் பயணங்களில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டவர், எங்கள் இணைய தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து, முறைப்படியான ஃபார்மாலிட்டிகளை முடித்த பிறகே, பயணம் தொடங்கும்.

இன்கிரடிபிள் இந்தியா என்பதுதான் எங்களின் நோக்கம் என்றாலும், நானே போனேன்... நானே பயணித்தேன்... நானே பார்த்தேன் என்கிற மகிழ்ச்சியை வெளிநாட்டவருக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே ஆட்டோவை அவர்களாகவே ஓட்டி, புதிய பயண அனுபவத்தைப் பெறும்போது, நமது கிராமங்களின் வாழ்வியல் அனுபவங்களையும் சேர்த்து முழுமையாக உணர்கிறார்கள்’’ என்றவாறு வெளிநாட்டவருடனான பல்வேறு சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து விடைபெற்றார் பிரின்ஸ்லி ஜெயச்சந்திரன்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்