Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் அக்னி சிறகுகள்!

நன்றி குங்குமம் தோழி

பள்ளி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கவும் தேர்வுகளில் எப்படி தேர்ச்சிப் பெறுவது என்பது குறித்தும் இலவசமாக வகுப்புகள் எடுத்து வருகிறார் ‘அக்னி சிறகுகள்’ என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் மகேந்திரன். பள்ளிக் குழந்தைகள் எப்படி எல்லாம் மனப்பாடம் செய்வது, படித்ததை எப்படி எழுதி தேர்ச்சிப் பெறுவது என்பது குறித்தும் வகுப்புகள் எடுத்து வருகிறார் இவர்.

‘‘நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். எனக்கு சொந்த ஊர் திருச்சி. எங்க ஊரில் பால் வியாபாரம் அதிகமா நடக்கும். கறந்த பாலை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வண்டியினை வேகமாக இயக்கிக் கொண்டு செல்வார்கள். அதனால் சில சமயம் விபத்துகள் ஏற்படும். அந்த விபத்தில் என்னுடன் படித்த மாணவர் ஒருவர் இறந்து விட்டார். அந்த விபத்து எனக்குள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. விபத்து இல்லாத ஒரு ஊரை உருவாக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதே போல் நான் படித்த காலங்களில் பல கல்லூரிகளில் 50 சதவீதம் பேர் தேர்வு ஆவதற்கே கஷ்டப்பட்டார்கள்.

ஏன் என்று ஆய்வு செய்ததில், அவர்களுக்கு பாடங்களை அப்படியே படிக்க சிரமமாக இருந்தது என்பதை அறிந்து கொண்டேன். இதற்கான தீர்வினை நான் தேடத் தொடங்கினேன். நான் படித்து முடித்த பிறகு அப்துல்கலாமை முன்மாதிரியாக எடுத்து செயல்படத் தொடங்கினேன். அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியது. பொது வேலைகளில் ஈடுபடத் தொடங்கினேன்’’ என்றவர் தன் செயல்பாடுகள் குறித்து பேசத் தொடங்கினார். ‘‘சமூகம் சார்ந்து வேலைகள் செய்ய தொடங்கியதும் எனக்கு முதலில் சொன்ன விஷயம் அரசு சாரா நிறுவனமாக இயங்கினால் அரசுடன் இணைந்து வேலை செய்யலாம் என்பதுதான்.

தன்னார்வ தொண்டினை ஆரம்பித்து அதை நிறுவனமாக பதிவு செய்தேன். அதற்கு அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை புத்தகமான ‘அக்னி சிறகுகள்’ என்ற பெயரையே என் நிறுவனத்திற்கு வைத்தேன். சமூக அக்கறையோடு இந்த சமூகத்தில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை என்னுடன் இணைத்துக் கொண்டேன். வாகன நெரிசல் விபத்துகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கினோம். பொது போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்து நெரிசலை குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் இருக்க புதிய திட்டங்களை செயல்படுத்துவது என பல வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம்.

சாலை வேலைகளுக்கு இடையே மாணவர்கள் மத்தியிலும் கவனம் செலுத்த துவங்கினோம். பள்ளிகளில் அதிக அளவில் இடைநிற்றல் இருந்தது. மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்ய துணிந்தார்கள். இந்தப் பிரச்னைகள் கிராமப்புறங்களில் அதிகளவில் இருந்ததால், அதற்கான வேலையில் ஈடுபட தொடங்கினேன். அப்போது மாணவர்களின் நினைவாற்றலை அதிகப்படுத்தினாலே எளிதாக பாடங்களை படித்து விடலாம் என்று புரிந்துகொண்டேன். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்க அவர்கள் தினமும் காலை எழுந்து புத்தகங்களை வாசித்தாலே கவனம் சிதறாமல், எளிதாக தேர்ச்சிப் பெற முடியும். ஆனால் அது நடப்பதில்லை. மேலும் பாடங்களை எழுதிப் பார்ப்பதால் மட்டுமே மனதில் பதியாது.

வலது கையால் எழுதுபவர்கள் இடது ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு எழுத்தாக படித்துக் கொண்டே எழுத வேண்டும். அதேபோல இடது கையில் எழுதுபவர்கள் வலது கையை பயன்

படுத்த வேண்டும். இது மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து ஞாபகத் திறனை அதிகரிக்கும். மொபைல் போன்களை பார்த்து படிப்பவர்கள், வாய்ஸ் ரெக்கார்டர் பயன்படுத்தி படிப்பதை அதன் மூலம் பதிவு செய்து, தினமும் திரும்பத் திரும்ப கேட்டாலே அவர்கள் படித்தது நன்றாக ஞாபகத்தில் இருக்கும். இந்த விஷயங்களை எல்லாம் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்தாலே ஞாபகத் திறன் அதிகரிக்கும். பாடங்களும் மறந்து போகாது.

இதைப்போல 14 விதமான திறனை மேம்படுத்தும் முறைகள் உள்ளன. அவை அனைத்தும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நாங்கள் கையில் எடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று சொல்லிக் கொடுத்தோம். இடைநிற்றலை தடுக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் ‘சிறகை விரி... உயர பற’ என்ற பெயரில் பயிற்சிகளை தொடங்கினோம். பள்ளிக் குழந்தைகளிடையே மொபைல் போன்கள் பயன்பாட்டினை குறைக்கவும், போதைப் பொருட்களை தவிர்க்கவும் கவனம் செலுத்தினோம். மேலும் பள்ளி மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி, அதில் அவர்கள் எவ்வாறு பங்கு பெறலாம் என்பது குறித்தும் சொல்லித் தருகிறோம். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக நீட் பயிற்சிகளையும் கொடுத்து வருகிறோம்’’ என்றவர் பெற்றோர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

‘‘மாணவர்களுக்கு நாங்க ஆலோசனை வழங்கினாலும், பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்கள் காலை எழுந்து நாங்க கொடுத்த பயிற்சிகளை மேற்கொள்கிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணித்து எங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் பெற்றோர்களும் ஆர்வமாக செயல்படுவார்கள். இவ்வாறு இணைந்து வேலையில் ஈடுபடும் போது மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை காண முடிகிறது.

நாங்க இதனை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்துதான் இந்த வேலைகளை செய்து வருகிறோம் குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை என இந்த மாவட்டங்கள் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்சி வழங்கி வருகிறோம். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் தற்போது தொடங்கி இருக்கிறோம். தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்’’ என்கிறார் மகேந்திரன்.

தொகுப்பு