Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிறுவனங்கள் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதா?

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும், அவர்கள் வேலைக்கு சென்றாலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடத்தில் இந்தப் பிரச்னையை சந்திக்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு வேலை அவர்களின் வாழ்வாதாரத்தை சார்ந்தது என்பதால், இது போன்ற பிரச்னைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்குகிறார்கள். இனி அந்த நிலைக்கு அவசியமில்லை’’ என்கிறார் விஜி ஹரி. இவர் ‘செக்யூர்அஸ்’ என்ற பெயரில் மனிதவளம் சார்ந்த நிறுவனத்தை நிர்வகித்து வருவது மட்டுமில்லாமல் பெண்கள் பாதுகாப்பினை கண்காணிக்க ஒரு குழு அமைத்து அதன் மூலம் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வளித்து வருகிறார்.

‘‘நான் 25 வருடமாக இந்த துறையில் இருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டுதான் செக்யூர்அஸ் நிறுவனத்தை துவங்கினேன். இந்த நிறுவனம் ஆரம்பித்து ஐந்து வருடங்களே ஆனாலும், இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பல நிறுவனங்களுக்கு நாங்க எங்களின் பணியினை வழங்கி வருகிறோம். எங்களின் முக்கிய நோக்கமே ஒரு நிறுவனத்தை குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான். அதாவது, பெண்கள் பணி புரியும் இடத்தில் எங்களால் எவ்வாறு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற சிந்தனையில்தான் துவங்கினோம்.

‘‘நிறுவனம் மனிதவளம் சார்ந்தது என்றாலும் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையின் நோக்கத்தை முன்நிறுத்தி தான் செயல்பட துவங்கினேன். அதனைத் தொடர்ந்து பணிபுரியும் இடத்தில் வேற்றுமை பார்க்காமல் ஆண், பெண் அனைவரும் சமம் என்பதை அறிவுறுத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களின் சதவிகிதம் சமமாகவோ அல்லது அதிகமாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். மேலும் அனைத்து மதத்தினரும் ஒரு அலுவலகத்தில் வேலையில் இருக்க வேண்டும் என்பதை நாங்க வலியுறுத்தி வருகிறோம்.

பணியாளர்களை நியமிக்கும் பணியை மட்டுமே செய்யாமல், அவர்களின் மனநிலையையும் பாதுகாத்து வருகிறோம். அதற்கான தனிப்பட்ட கவுன்சிலிங், மனஉளைச்சல் ஏற்படும் போது அதை சமாளிக்கும் திறன் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கிறோம்’’ என்றவர் ஒரு நிறுவனம் தங்களின் பெண் ஊழியருக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை பற்றி விவரித்தார்.

‘‘எங்களின் வேலையே நிறுவனங்கள் தங்களின் பெண் ஊழியருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதுதான். இதுவரை 900க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அந்த வட்டத்திற்குள் ெகாண்டு வந்திருக்கிறோம். ஒரு நிறுவனத்தில் பத்து ஊழியர்கள் இருந்தாலே அந்த நிறுவனம் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். குழுவில் நிறுவனத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிநபர் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அதில் வெளி நபராக எங்க நிறுவனத்தில் இருந்து ஒருவர் உறுப்பினராக இருப்பார்.

நிறுவனத்தில் பெண் ஊழியர் பாலியல் ரீதியாக புகார் தெரிவித்தால், அதை நாங்க அந்த நிறுவன உறுப்பினருடன் இணைந்து விசாரித்து அதற்கான தீர்வினை வழங்குவோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பினை ஏற்படுத்தியவர்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரிப்போம். விசாரணை நீதிமன்றங்களில் நடத்தப்படுவது போல்தான் இருக்கும். இப்போது பெண்களுக்கு என பல சட்டங்கள் இருப்பதால், அதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம், அளிக்கப்பட்ட புகார் குறித்து ஆதாரம் சேகரித்து அதற்கு ஏற்ப உண்மையான முறையில் தீர்வு வழங்கப்படும். பாதிப்பினை ஏற்படுத்தியவர்களை இடைநிறுத்தம் செய்து எச்சரிக்கை கொடுப்போம்.

தவிர்க்க முடியாத நிலையில் வேலையில் இருந்து நீக்குவோம். சாதாரண பிரச்னைக்கு நாங்களே தீர்வு அளிப்போம். ஆனால் அதுவே கிரிமினல் குற்றமானால் அது குறித்து போலீசில் தான் புகார் தெரிவிக்க வேண்டும்’’ என்றவர் எந்த மாதிரியான பிரச்னைகளை அலுவலகத்தில் பெண்கள் சந்திக்கிறார்கள் என்று பட்டியலிட்டார்.‘‘ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ேபாது, காதல் வயப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அந்த உறவு சில காரணங்களால் முறிந்தும் போகும். அதன் பிறகும் சில ஆண்கள் காதலித்த பெண்ணை தொடர்வார்கள். அது பெண்களுக்கு துன்புறுத்தலாக மாறும். இப்போது வலைதளம் அனைவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் ஸ்டாக்கிங் செய்கிறார்கள். பிடிக்கவில்லை என்று ஒரு பெண் கூறியும் அதை தொடர்வதும் குற்றம்தான். சக ஊழியர்கள் இடையே கேலி கிண்டல் இருப்பது இயல்பு. ஆனால் வரைமுறைகளை மீறும் போதுதான் அது குற்றமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பிரச்னைகள் அனைத்து அலுவலகத்திலும் இருப்பதுதான். இதை முற்றிலும் தடுக்க முடியாது, ஆனால் குறைக்க முடியும். அதற்காக நாங்க பல அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றவர் நல்ல முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஆய்வு செய்து விருதுகளையும் வழங்கி வருகிறார்.

‘‘செக்யூர் விருதுகளை கடந்த நான்கு வருடமாக நிகழ்த்தி வருகிறோம். எந்த நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் தந்துள்ளதோ அவர்களை தேர்வு செய்து நாங்க விருது அளிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் இந்த விருதுகளை வழங்கி அந்த நிறுவனத்தினை கவுரவப்படுத்தி வருகிறோம். இதற்கான வேலையினை நாங்க மூன்று மாதம் முன்பே துவங்கிடுவோம். விருதில் பங்கு பெற விரும்பும் நிறுவனங்கள் எங்களின் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அவர்களை நாங்க ஆய்வு செய்வோம். அதில் எங்களின் விதிகளுக்கு உட்பட்டு வரும் நிறுவனங்களை தேர்வு செய்து கவுரவிப்போம். இந்த வருடமும் கடந்த மாதம் இந்த நிகழ்வு நடை

பெற்றது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றன. அதில் 23 நிறுவனங்களை தேர்வு செய்து விருது அளித்தோம். இதற்காகவே தனி குழு அமைத்து செயல்படுத்தி வருகிறோம். விருது வழங்க முக்கிய காரணம், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஊழியர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்’’ என்றார் விஜி.

தொகுப்பு: ரிதி