Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்!

நன்றி குங்குமம் தோழி

தீயணைப்பு வீரர்கள் என்றாலே உடனே நம் சிந்தனைக்கு வந்து செல்வது ஆண் வீரர்கள்தான். ஆனால் கடந்த 20 வருடங்களாக சவால்கள் நிறைந்த தீயணைப்பு வீரராக இருந்து வருகிறார் ஹர்ஷினி கன்ஹேகர். இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என போற்றப்படும் ஹர்ஷினி கன்ஹேகர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். “நான் ஒரு தீயணைப்பு வீரர் ஆவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. முதன் முதலாக தீயணைப்பு வீரருக்கான சீருடையை நான் அணிந்த தருணம் இப்போதும் நினைவிருக்கிறது. நான் NCC முகாமில் இருந்த நாட்கள்தான் என்னை இத்துறைக்கு வழிவகுத்தது எனலாம். சீருடை அணியும் பதவிகளில் நான் சேர வேண்டும் என்பது என் முதல் விருப்பமாக இருந்தது.

இந்திய விமானப் படையிலிருந்த ஷிவானி குல்கர்னி என்ற பெண் அதிகாரியை பார்த்துதான் எனக்கு உத்வேகம் வந்தது. அப்போதே விமானப்படை, ராணுவப்படை அல்லது கடற்படை ஏதேனும் ஒன்றில் சேரவேண்டும் என நினைத்தேன். முதலில் விமானப்படையில் சேருவதற்கான தேர்வு எழுதியபோது என்னால் அதில் தேர்ச்சிப் பெற முடியவில்லை. வருத்தமளித்தாலும் மனம் தளராமல் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.

Service Selection Board தேர்விற்காக தயார் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பில், நாக்பூரில் அமைந்துள்ள முக்கிய அம்சங்களை பற்றி பேசினோம். அப்போதுதான் தேசிய தீயணைப்பு சேவைக் கல்லூரி (National Fire Service College) பற்றி நினைவுக்கு வந்தது. பின்னர் தேர்வுகளிலும் நேர்காணலிலும் தேர்வான பின்பு அந்தக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முதன் முதலாக அந்தக் கல்லூரிக்கு அட்மிஷனுக்காக சென்றபோது அனைவரின் பார்வையும் என் மீதுதான் இருந்தது. கூட்டத்தில் ஒருத்தர் ‘நீ என்ன பைத்தியமா, இது ஆண்கள் படிக்கிற கல்லூரி’ என்று கூறியது என் காதுகளில் விழுந்தது.

ஆனால் என் அப்பா என்னை நேராக அட்மிஷன் செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றார். கல்லூரியில் சேருவதற்கு முன் ஒரு மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் என்னிடம், “அதிக நேரம் நெருப்புடன் போராட வேண்டியிருக்கும், புகை, தூசி போன்றவற்றை சமாளிக்க வேண்டுமே?” என கேட்டார். நான் தைரியமாக “என்னால் ஏன் முடியாது?” என்றேன். தீயணைப்பு வீரர் ஆவதற்கு முன் டிரக் (truck) ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

நான் டிரக் ஓட்ட பழகும்போது பலரும் என்னை பார்த்து கேலி செய்து சிரித்தனர். இந்த துறையில் நான் துணிச்சலுடன் செய்லபட என் தந்தை எனக்கு உறுதுணையாக இருந்தார். கல்லூரியின் இயக்குனர் வாத்வா எனக்கு முழு ஆதரவு அளித்தார். அவர், ‘நீ கிரண் பேடி போல வருவாய்’ என்றார். தீயணைப்பு வீரர் ஆனபிறகும் விளையாட்டுகள், இசைக்கருவிகளை கற்பதை தொடர்ந்தேன். உங்களை எது தடுத்தாலும் உங்களுக்குப் பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து துணிச்சலாக செயல்படுங்கள்” என்கிறார் ஹர்ஷினி கன்ஹேகர்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்