Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகளின் நலனிற்காக கடுமையாக உழைப்பேன்!

நன்றி குங்குமம் தோழி

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மகளிர் முன்னேற்றம் சார்ந்த நிகழ்வில்,‘‘சமையல் முதல் ஆன்மீகம் வரை சார்ந்த புத்தகங்களை நாம் வைத்திருக்க வேண்டும்’’ என பெண்கள் முன்னிலையில் தன் பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார் மனோசித்ரா. புத்தக ஆர்வலர், சமூக வலைத்தள விழிப்புணர்வாளர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் என பல முகங்கள் இவருக்குண்டு. தன்னுடைய பணி சார்ந்து குழந்தைகளின் நலனுக்காக பல வேலைகளை முன்னெடுத்து வருகிறார்.

‘‘நான் திண்டிவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படிச்சேன். அதன் பிறகு பத்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியிலும், +1 மற்றும் +2, தேசிய மேல்நிலைப் பள்ளியிலும் படிச்சேன். உணவு சேவை மேலாண்மை துறையில் இளங்கலைப் பட்டம் முடித்தேன். அதன் பிறகு தனியார் வங்கியில் விற்பனை நிர்வாகியாக வேலைக்கு சேர்ந்தேன். அதனைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து இருக்கிறேன். கடைசியாக அரிசி ஆலை ஒன்றில் மதிப்பீட்டு மேலாளராகப் பணியாற்றிய போது, ஆலை இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக என்னுடைய வலது கை சிக்கிக் கொண்டு துண்டாகிவிட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களானது அதில் இருந்து நான் மீண்டு வர.

மருத்துவ செலவு மற்றும் இதர செலவிற்கு நான் வாங்கும் சம்பளம் எனக்கு பத்தவில்லை. அதனால் அரசு சார்ந்த வேலையில் சேர்ந்தால், வருமானமும் நன்றாக இருக்கும், என்னுடைய உடல் நிலைக்கும் உறுதுணையாக இருக்கும் என நினைத்தேன். அந்த நேரத்தில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். இரவு, பகல் பாராமல் படித்தேன். என்னுடைய கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது. தேர்வில் வெற்றி பெற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் சமூக நலத்துறையில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலராக பணியில் சேர்ந்தேன். தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று அங்கு பணியாற்றி வருகிறேன்.

இங்கு நகர்ப்புற பகுதியில் உள்ள 83 அங்கன்வாடிகள், வல்லம் பகுதியில் 114 மையங்கள், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 108 மையங்கள் என 305 மையங்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறேன்’’ என்றவர், தனக்கு கீழ் உள்ள பள்ளிகளில், முன்பருவ கல்வி, சத்தான உணவுகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து நடைமுறைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘அங்கன்வாடிதான் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. வயதுக்கேற்ற, வளர்ச்சி செயல்பாட்டு கற்றல் முறை இங்கே இருக்கு. ஆடிப்பாடி, விளையாட்டு முறையில் குழந்தைகளுக்கான திட்டம் இங்குள்ளது. குழந்தைகளுக்கான சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், குழந்தைகளோட உயரம், எடை மாதந்தோறும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி வருகிறோம்.

குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும் முன் அவர்களின் அந்த வயதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாடும், உடல் நல பாதிப்புகளும் காணப்படும். இது போன்றவைகளை கவனத்தில் கொண்டு அங்கன்வாடிகளில் வாரத்திற்கு ஆறு நாட்கள் ஊட்டச்சத்துகள் கூடிய உணவுகள் வழங்கப்படுகிறது. இது அனைத்து குழந்தைகளுக்கும் போய் சேர வேண்டும் என்பதில் நாங்க மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அரசு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அனைத்து நலன்களையும் ெசய்து வருகிறது. பெற்றோர்கள் அதை அறிந்து தங்களின் குழந்தைகளுக்கு அதனை

முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பருவத்தில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்துக்கள்தான் அவர்கள் உடல் மட்டுமில்லாமல் மூளை வளர்ச்சிக்கும் பெறும் பங்கினை வகிக்கிறது.

அரசுப் பணி எனக்கு கிடைத்த ஒரு வரம். குறிப்பாக குழந்தைகளின் நலனிற்காக செயல்படும் போது அது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சி குறித்தும் நான் 24 மணி நேரமும் துரிதமாக செயல்பட்டு வருகிறேன். அதில் கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் என்னுடைய இந்த வெற்றிக்கு என் குடும்பத்தினர் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்’’ என்று பெருமையுடன் கூறினார் மனோசித்ரா.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்