Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மன அழுத்தம் காரணமாக தீ குளிக்க முயன்றேன்!

நன்றி குங்குமம் தோழி

புக்கர் பரிசு வென்ற பானு முஷ்டாக்

எழுபத்தெழு வயதில் கர்நாடகத்தைச் சேர்ந்த பானு முஷ்டாக் இலக்கிய சாதனை படைத்துள்ளார். அருந்ததி ராய், கிரண் தேசாயைத் தொடர்ந்து புக்கர் பரிசினை பெறும் மூன்றாவது இந்தியப் பெண்மணியாகிறார் பானு முஷ்டாக். இந்த வருடத்திற்கான சர்வதேச புக்கர் பரிசு அவரின் சிறுகதை தொகுப்பான ‘ஹார்ட் லேம்ப்’புக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பரிசினை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சிறந்த கதைகள், சிறந்த ஆங்கில மொழிப்பெயர்ப்பு என்பதற்காக வழங்கப்பட்ட புக்கர் பரிசை மொழிப்பெயர்ப்பாளர் தீபா பாஸ்தியுடன் பானு பகிர்ந்துள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 57 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் இந்த தொகையினை ஆசிரியர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் இருவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ‘‘புக்கர் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானதும், ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் வானத்தை ஒளிரச் செய்வது போல் உணர்ந்தேன்’’ என்று பானு முஷ்டாக் சந்தோஷத்தில் மனம் பொங்க தன் மகிழ்ச்சியினை பகிர்ந்தார்.

‘‘HEART LAMP என்ற என் சிறுகதைத் தொகுப்பு 1990-2023க்கும் இடையில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. கர்நாடகாவில் உள்ள முஸ்லிம் பெண்களின் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த சிறுகதைகளை எழுதினேன். கர்நாடகாவின் ‘ஹாஸன்’ என்ற நகரில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். தாய்மொழி உருது என்றாலும் கன்னடமும் பயின்றேன். நாளடைவில் என்னுடைய உணர்வுகளை எழுத்து மூலம் வெளிப்படுத்தக்கூடிய மொழியாக கன்னடம் மாறியது.

26 வயதில் திருமணமானது. வெளியில் பர்தா அணிந்து என் அடையாளத்தினை மறைத்துக் கொள்வது போல், வீட்டிலும் என் கனவுகளை புதைத்துவிட்டு ஒரு மனைவியாகத்தான் செயல்படுவேன் என்று என் வீட்டில் உள்ளவர்கள் எதிர்பார்த்தார்கள். அது எனக்குள் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனக்கான அடையாளத்தினை நான் புதைத்து விட்டேன் என்ற உணர்வு என்னை அழுத்தியது. விளைவு முதல் பிரசவத்திற்குப் பிறகு எனக்குள் இருந்த அழுத்தம் காரணமாக தீ குளிக்க முயன்றேன். அப்போது வீட்டில் உள்ளவர்கள் காப்பாற்றினார்கள். இருந்தாலும் எனக்குள் இருந்த அந்த அழுத்தம் ஒரு பாரமாகவே இருந்தது. அதை போக்க எழுத ஆரம்பித்தேன். எழுத்து என்னுடைய மன அழுத்தத்திற்கு ஒரு மருந்தாக அமைந்தது. ஆர்வத்துடன் எழுதத் தொடங்கினேன்.

ஒடுக்கப்பட்டவர்கள், கர்நாடகத்தில் நடக்கும் தலித் போராட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புகள், பெண்கள் உரிமை, விவசாயிகள் இயக்கம் போன்ற செயல்கள் என்னை மிகவும் பாதித்தன. அதனை என் எழுத்துக்கள் மூலம் பிரதிபலித்தேன். என் எழுத்துக்கள் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களுடன் சேர்ந்து நிற்பது போன்ற உத்வேகத்தினை கொடுத்தது. என்னுடைய கதைகள் பெரும்பாலும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வலி, சவால்களைப் பற்றிதான் இருக்கும். குறிப்பாக மதம், கலாச்சாரம் அவர்களை மௌனமாக்கப் பயன்படுத்தப்படும் போது, நிஜ வாழ்க்கையிலும் ஊடகங்களிலும் நான் அறிந்த விஷயங்கள் என் கதைகளுக்கு ஒரு உணர்வினை வடிவமைத்தன’’ என்றவர், எழுத்தாளர் மட்டுமில்லை பயிற்சி பெற்ற வழக்கறிஞர், பத்திரிகையாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

‘‘கரி நாகரகலு என்ற தலைப்பில் நான் எழுதிய கதை ஒன்று இயக்குனர் கிரிஷ் காசரவள்ளியால் விருது பெற்ற திரைப்படமாக மாறியது. எனது படைப்புகள் உருது, இந்தி, தமிழ், மலையாள மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ‘ஹார்ட் லாம்ப்’ என்ற தலைப்பில் முழு நீள சிறுகதைகளின் தொகுப்பாக தீபா பாஸ்தி அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்டது. என்னுடைய எழுத்துக்கள் மூலம் நான் பெண்களுக்காக குரல்களை கொடுத்தேன், குறிப்பாக என் சமூகப் பெண்கள்.

அதனால் நிறைய பிரச்னைகள் மற்றும் மரண அச்சுறுத்தல்களையும் சந்தித்தேன். சவால்கள், எதிர்ப்புகள் இருந்த போதிலும் நான் என் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. மதம், சமூகம், அரசியல், பெண்களை நாகரிக அடிமைகளாக மாற்றுவது, அவர்களின் வலி, துன்பம், அர்த்தமற்ற வாழ்க்கை, ஆற்றாமை இவை தான் என்னை எழுதத் தூண்டுகின்றன. அதற்கான வெற்றிதான் இந்த புக்கர் பரிசு’’ என்றார் பானு முஷ்டாக்.

மொழிப்பெயர்ப்பாளர் தீபா பாஸ்தி...

‘‘பானுவின் கதைகளை மொழிப்பெயர்க்கும் முன் அவரின் அனைத்து கதைகளையும் பொறுமையாக படித்து பார்த்தேன். அதன் பிறகு எதை மொழிப்பெயர்க்கலாம் என்று தீர்மானிக்கும் சுதந்திரத்தை எனக்கு பானு கொடுத்திருந்தார். மேலும் என்னுடைய மொழிப்பெயர்ப்பிலும் அவர் தலையிடவில்லை. பானு சார்ந்திருக்கும் சமூகத்தைப் பற்றி எனக்கு அதிகளவு தெரியாது. அதனால் அது குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு அவர்களின் சமூகம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனால் கதையின் ஆழத்தை புரிந்துகொள்ள முடிந்தது. பானு பயன்படுத்திய மொழி லாவகத்தையும் அதன் நோக்கத்தையும் தெரிந்துகொண்டு அதனை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்க முடிந்தது.’’

தொகுப்பு :கண்ணம்மா பாரதி