நன்றி குங்குமம் தோழி
‘‘ கொக்கு பற... பற... மைனா பற... பற... என்று விளையாடிய பால்ய நாட்களை யாரும் மறந்திருக்க முடியாது. பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு காலம் காலமாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு ‘காக்கா... கிளி பாரு’ என்று சோறு ஊட்டுவது முதல் அவற்றை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது என நம்முடைய வாழ்வில் பறவைகளோடு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
பறவைகள் இல்லையென்றால் மரங்கள் இல்லை...
மரங்கள் இல்லாமல் மழை இல்லை. இயற்கையின் சமநிலையை காப்பதில் முக்கிய காரணிகளாக பறவைகள் செயல்படுகின்றன. உணவுச் சங்கிலியில் முதல் இடத்தில் உள்ளது பறவைகள்தான். பறவைகளைக் காக்க வேண்டியது நமது முதல் கடமை. பறவைகளின் அதீத இறப்பு நமக்கு இயற்கை எழுப்பும் எச்சரிக்கை ஒலி’’ என்கிறார் பறவையியல் ஆர்வலர், ஆய்வாளர் கிருபா நந்தினி. வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் பறவைகள் ஆய்வில் இருந்தவருடன் பேசியதிலிருந்து…
‘‘கோவை மாவட்டம், பொள்ளாச்சி பக்கத்துல காளியப்ப கவுண்டன் புதூர்தான் சொந்த ஊர். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணில வளர்ந்திருந்தாலும், எல்லோரையும் போல சாதாரணமா வாழ்க்கையை வாழக் கூடாதுன்னு நினைச்சேன். காரணம், என் சித்தப்பா. என் வாழ்க்கை பாதையின் முக்கிய நபர் அவர்தான். முற்போக்கு சிந்தனையாளர். புத்தக வாசிப்பையும் சொல்லித் தந்தது அவர்தான். சின்ன வயசில் இருந்தே அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஏதாவது சாதிக்கணும்னு என்னை ஊக்கப்படுத்தியவரும் அவர்தான்’’ என்று கூறும் கிருபா கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் உயர் கல்வி படித்திருக்கிறார்.
‘‘வீட்டில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எப்படியாவது முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. பள்ளியில் படிக்கும் போது என் பாடப் புத்தகத்தில் டாக்டர் கிருபா நந்தினின்னு எழுதி வைப்பேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். இளைங்கலை பட்டம் படிக்கும் போது எங்க கல்லூரியில் நடைபெற்ற NCC முகாம் என்னை முற்றிலும் மாற்றியது.
அதில் நடை பெற்ற பயணங்கள், அறிவியல் கலந்துரையாடல்கள் மற்றும் பொது பேச்சு எனக்குள் இருந்த பயத்தை நீக்கியது. முதுகலை பட்டப் படிப்பில் மாநில அளவில் நான்காவது இடம் பெற்றேன். பிறகு ‘பழக் கழிவுகளில் இருந்து இறால்களுக்கு தீவனம்’ தயாரிப்பது பற்றி ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றேன். அது எனக்கு மனநிறைவை தரவில்லை. எனக்கு களப்பணி மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது’’ என்றவர் அதற்கான தேடலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
‘‘கோவையில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் பறவைகள் குறித்த ஆய்வுக்கான மத்திய அரசின் திட்டத்திற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்திருந்தது. அதைப் பாத்துட்டு போனேன். இந்தியா முழுவதும் பறவைகள் இறப்புக்கு என்ன காரணம் என்பதே அந்த ஆய்வின் நோக்கம். பறவைகள் இறந்த இடத்தில் நேரில் சென்று அந்த சூழலை ஆராய்ந்து, பறவைகளுக்கு உடற்கூறு செய்வது என்னுடைய பணியாக இருந்தது. இந்த பத்து வருடத்தில் இரண்டாயிரம் பறவைகளுக்கு உடற்கூறு ஆய்வு செய்திருக்கிறேன்.
பறவைகளை உடற்கூறு செய்யும் போது அதன் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை சேகரித்து அதில் ரசாயனம் கலந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். விலங்கியல் படிச்சிருப்பதால், எனக்கு இந்தப் பணி மிகவும் பிடித்திருந்தது. இதில் இணைந்த போதுதான் நான் முனைவர் பட்டத்திற்காக பதிவு செய்தேன். நான் சேகரித்த தரவுகளை என்னுடைய முனைவர் ஆய்விற்காக பயன்படுத்திக் கொண்டேன். பறவைகளின் உறுப்புகளை பாதிக்கும் ரசாயன மாசுபாடு பற்றிதான் என் ஆய்வுகள் இருந்தது. குறிப்பாக பூச்சிக்கொல்லி தெளித்த தானியங்களை சாப்பிடுவது பறவைகளின் இறப்புக்கு முக்கிய காரணம் என்று என்னுடைய ஆய்வு மூலம் கண்டறிந்தேன். மேலும், உணவுச் சங்கிலியும் இந்த பாதிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
ரசாயனம் தெளித்த பயிர்களை பூச்சிகள் மற்றும் எலிகள் சாப்பிடும். அதனை பறவைகள் சாப்பிடுவதாலும் இறப்பு ஏற்படுகிறது. மேலும், ெதாழிற்சாலையில் இருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகள் கலந்த நீர்நிலைகளில் வாழும் மீன்களை பறவைகள் சாப்பிடுவதாலும் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரசாயனமே பறவைகளின் எதிரி என்பதுதான் என்னுடைய ஆய்வின் முடிவு. தற்போது தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தினை பலர் பின்பற்றுவதால், பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளது’’ என்றவர், பறவைகளின் பெயர்களுக்கான காரணங்களை சுவாரஸ்யத்துடன் ‘புள்ளினங்கான்’ என்ற புத்தகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
‘‘ஆந்தைகள் மூடநம்பிக்கைக்காக அழிக்கப்படுகின்றன. கிளிகள் ஜோசியத்திற்காக தேடித் தேடி பிடிக்கப்படுகின்றன. காத்தாடி நூலில் தடவப்பட்டிருக்கும் கண்ணாடி துகள்கள் பறவைகளின் கழுத்தை பதம் பார்க்கிறது. இவ்வாறு பறவைகளுக்கு மனிதர்களால் ஏதோ ஒரு வகையில அச்சுறுத்தல்கள் தொடர்கிறது. பறவைகள் இறப்பு குறித்த உண்மையான காரணத்தை வெளியுலகத்திற்கு சொல்லும் போது பல அச்சுறுத்தல்கள், மிரட்டல்களையும் சந்தித்தேன். அதனால் பொது வெளியில் புனைப்பெயரில்தான் எழுதினேன்.
பொதுவாக ஆராய்ச்சி துறைகளில் பெண்கள் அதிகம் ஈடுபட மாட்டாங்க. நான் செய்யும் வேலையை பார்த்த பலரும் கிண்டல் செய்திருக்கிறார்கள். நான் அதை கவனத்தில் கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை என்னுடைய ஆய்வுகள் காகிதமாக இருக்கக் கூடாது. அதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தற்போது தமிழ்நாடு வனத்துறையோடு இணைந்து குறிப்பிட்ட மாவட்டங்களில் அழிந்து வரும் உயிரினங்கள், விலங்குகளை பாதுகாக்கும் முறைகள் மற்றும் விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறேன். பறவைகள் முக்கியத்துவம் குறித்த கருத்துகளை கதை வடிவில் மாணவர்களிடம் சேர்க்கிறேன். விழிப்புணர்வு நாடகங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் என மாணவர்களை வழி நடத்தி வருகிறேன். மேலும், நான் சொன்ன கதைகளை புத்தகமாகவும் எழுதி இருக்கிறேன்.
பறவைகளுக்கும் வாழ்க்கை இருக்கு. அவற்றின் உயிர்ப்பு மனித குலத்தின் நீட்சி என்பதை பலர் அறியாமல் அவற்றை துன்புறுத்தி வருகிறார்கள். இந்தியாவின் பறவை மனிதர் ‘சலீம் அலி’ அவர்கள் தொடுத்த கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். மனிதர்களின் நலனுக்காக பறவைகளோடு பயணிக்கிறேன்” என்கிறார் பறவைகளின் காதலியான கிருபா நந்தினி.
தொகுப்பு: கலைச்செல்வி

