Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாற்பது வயதில்தான் தொழிலை துவங்கினேன்!

நன்றி குங்குமம் தோழி

கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பினை பொறுத்தமட்டில் நிறைய கிரியேட்டிவிட்டி மற்றும் ஐடியாக்கள் தேவை. அதனை சிறப்பாக செயல்படுத்தினாலே போதும் வாடிக்கையாளர்களிடையே நமது தயாரிப்புகளுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். கேக் தயாரிப்பை போலவே அதனை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதும் வாடிக்கையாளர்கள் சேவைகளும் நமக்கான பெரிய விற்பனை வாய்ப்பினை பெற்றுத் தரும். தயாரித்த சில மணி நேரங்களில் ஃப்ரெஷ்ஷாக அனுப்பி வைப்பதும் முக்கியமான ஒன்று என கேக் தயாரிப்பின் நுணுக்கங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கேக் மற்றும் குக்கீஸ் வகைகளை தயாரித்து வரும் சித்ரா.

கேக் தொழில்...

நான் படித்தது இன்டீரியர் டிசைன் மற்றும் சைக்காலஜி. திருமணமானதும் குழந்தைகள், குடும்பம் என பிஸியாக இருந்தேன். 41 வயதில்தான் கேக் தயாரிப்பதற்கான முறையான பயிற்சியினை எடுத்தேன். அதன் பிறகுதான் கேக் செய்யவே துவங்கினேன். பத்து வருடங்களாக வீட்டிலேயே கேக் தயாரித்து விற்பனையும் செய்து வந்தேன். அதனையே முழு நேர தொழிலாக துவங்கினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது.

அதில் உருவானது தான் எனது ‘எஸ் வீ கேக்’ கிளவுட் கிச்சன். தற்போது மூன்று வருடங்களாக கேக் தயாரிக்கும் தொழிலில் முழுமையாக இறங்கி உள்ளேன். எனது கேக்கின் சுவை, தனித்தன்மைக்காகவே பல்வேறு வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதில் எனக்கு பெருமிதங்கள் இருக்கிறது. அதிலும் கஸ்டமைஸ்டாக தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்களுக்கான வரவேற்புகள் என்பது இன்றைய நவீன காலகட்டத்தில் மிக அதிகமாகவே இருக்கிறது. கேக் மட்டுமல்ல இதர பேக்கரி பொருட்களையும் ஆரோக்கியமான வகையில் பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். கஸ்டமைஸ் கேக், வெட்டிங் கேக், பர்த்டே கேக், மேக்ரோன்ஸ், பிரட், பிரௌனி,ஜார் கேக் போன்றவற்றை தயாரித்து வழங்குகிறேன்.

நான் தயாரித்த கேக்குகளை ஆன்லைன் மூலமாகத்தான் விற்பனைசெய்ய துவங்கினேன். குறிப்பாக சமூகவலைத்தளத்தில்தான் பிசினஸினை துவங்கினேன். மேலும் என் கேக்கினை சாப்பிட்டு பிடித்தவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்க இணையம் மட்டுமில்லாமல் வாய் வார்த்தையாகவும் என்னுடைய பிசினஸ் வளரத் துவங்கியது. தற்போது மில்லட், கோதுமை மற்றும் சுகர்ப்ரீ கேக்குகள், கெமிக்கல் ப்ரீ குக்கீஸ் போன்றவற்றை தயாரித்து வருகிறேன்.

உங்கள் தயாரிப்புகள் குறித்து...

எனது சிக்னேச்சர் டிஷ் ரோஸ் மில்க் அண்ட் பிஸ்தா கேக், ஃபிளவர்ஸ் கேக், பட்டர் ஸ்காட்ச் அண்ட் கேரமல் சாக்லேட் கப் கேக்குகள் மற்றும் கோதுமை, ராகி குக்கீஸ் போன்றவைகள்தான். பெரிய கேக்குகளுக்கான ஆர்டர் வந்தால் அதனை நேரில் சென்று தான் செட் செய்வோம். இதுவரை அதிகபட்சமாக எட்டு கிலோ அளவில் ஒரு கேக்கினை தயாரித்து இருக்கிறேன். அதேபோல் பிறந்தநாள் அல்லது பார்ட்டி போன்றவற்றுக்கு டெசர்ட் டேபிளும் அமைத்து தருகிறோம்.

எதிர்கால திட்டங்கள்...

கேக் தயாரிப்பு குறித்து தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும். கடை ஒன்றை அமைத்து அதில் கேக்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதும் என்னுடைய எதிர்கால திட்டம். தற்போது கிளவுட் கிச்சன் முறையிலும் கேக்குகளை நாங்க வழங்கி வருகிறோம். அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் எங்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுவாக வீகன் பொருட்களுக்கான வரவேற்பு வெளிநாடுகளில் மட்டுமே அதிகமாக இருந்தது. தற்போது இந்தியா போன்ற நாடுகளிலும் வீகன் உணவினை விரும்புகிறார்கள். அதனையும் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது.

பெண்களுக்கு உங்களின் அட்வைஸ்...

இந்தத் தொழில் பொறுத்தவரை முதலில் சிறிய முதலீட்டில் ஆரம்பியுங்கள். கேக் தயாரிக்க முறையான பயிற்சி அவசியம். அதனை தரமான இடங்களில் கற்றுக் கொள்ளுங்கள். கொஞ்சம் அனுபவத்துடன் உழைப்பையும் சேர்க்க தொழில் நம் வசப்படும். கேக் தயாரிக்க தேவையான உபகரணங்கள் வாங்க குறைந்தபட்சம் ரூ.25,000 தேவைப்படும். இது ஒருமுறை இன்வெஸ்ட்மென்ட்தான். அதன் பிறகு நமது தயாரிப்புகள் சிறந்ததாக இருந்தால் வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவார்கள். தன்னம்பிக்கையுடன் துவங்குங்கள் வெற்றி நிச்சயம் என்கிறார் சித்ரா.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்