Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு வேலையை துறந்தேன்... சமூக சேவையில் இறங்கினேன்!

நன்றி குங்குமம் தோழி

‘ஏழை எளியவர்களுக்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை. அதற்கு உதாரணமாக இருக்கவே விரும்புகிறேன். காரணம், சமூக சேவை செய்வதையே எனது வாழ்வின் பெரிய லட்சியமாக நினைக்கிறேன். சிறுவயது முதலே எனக்கு அதில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகம்’’ என்கிறார் நரிக்குறவர் சமூகத்திற்காக அவர்களது வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கான வாழ்நாள் பணிகளை செய்து வரும் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியினை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பிரபா வாசுகி.

நரிக்குறவர்கள், கலைக்கூத்தாடிகள், பூம்பூம்மாடு வைத்திருப்பவர்கள், இருளர் போன்ற எளிய மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்தி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தன் சமூகப் பணிகளை துவங்கியுள்ளார் பிரபா. 14 வயதில் துவங்கிய இவரின் சேவை கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்காக தனது அரசுப் பணியை துறந்து முழு நேரமாக GATE TRUST (GYPSY& Tribals Empowerment) என்ற அமைப்பினை துவங்கி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நரிக்குறவர்கள் நிலை குறித்தும் அவர்களது வாழ்வாதார பணிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.

*சமூக சேவைகளில் ஆர்வம்...

எனது தந்தை பாதிரியாராக இருந்தவர். அவருக்கும் சேவை செய்வதில் நாட்டம் அதிகம். அவர்களை பார்த்து வளர்ந்த எனக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் ஏற்பட ஆச்சரியம் இல்லை. என் சிறு வயதில் அப்பாவுடன் பயணித்த காலத்தில் நரிக்குறவர் இன மக்கள் நிலை கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன். அதுகுறித்து என் தந்தையுடன் நிறைய விவாதிப்பேன். அப்போது அவர் சொன்ன ஒரே விஷயம்தான், ‘நீ வளர்ந்து பெரியவளானதும் இவர்கள் நிலை மாற உன்னால் முடிந்த உதவிகளை செய்’ன்னு சொன்னார்.

அவர் அப்போது கூறியது என் மனதில் பதிந்துவிட்டது. படித்து முடித்த பிறகு தபால் அலுவலகத்தில் நிரந்தர பணி கிடைத்தது. பணியில் ஈடுபட்டாலும், சேவைகள் குறித்த சிந்தனை இருக்கும். பணியில் இருந்து கொண்டே பகுதி நேரமாக சேவை செய்ய முடியாது. அதற்கு முக்கிய காரணம் நேரமின்மை. வேலையை விட்டு விட தீர்மானித்தேன். அப்போது பலரும் அரசு வேலை கிடைப்பதே கடினம் என அறிவுரைகளை கூறினார்கள். நான் பிடிவாதமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேவையில் இறங்கினேன். இன்று வரை என்னுடைய சமூகநலப்பணிகளை வெற்றிகரமாக செய்து வருகிறேன். என் கணவர் மற்றும் குழந்தைகளும் என்னுடைய சேவைக்கு முழு ஆதரவு அளிப்பது மட்டுமில்லாமல் எனது சேவைகளில் பங்கு பெறவும் செய்கிறார்கள்.

*நரிக்குறவர்களின் தேவைகள் என்ன?

நரிக்குறவர்கள் வசிக்க குடியிருப்புகளோ, கழிவறைகள் வசதிகளோ இல்லை. பெரும்பாலான நரிக்குறவர்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மத்தியில் கல்வி அறிவு தேவை என்பது குறித்த விழிப்புணர்வு கிடையாது. ஒரு சிலர் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர முழு சமூகத்தில் கல்வி மேல் பெரிய ஈடுபாடு இல்லை. இந்த நிலையை மாற்றுவதற்கான முழு முயற்சிகளை செய்து வருகிறேன்.

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான நிலையான வாழ்வாதாரம் தேவை என்பதால், சிறு தொழில் குறித்த பயிற்சிகளுக்கான ஆலோசனைகளை செய்து வருகிறேன். இவர்கள் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை இடைநிறுத்தம் செய்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், கல்வி அவசியம் என்று வலியுறுத்தி வருகிறேன். படிக்காமல் வளர்ந்த பிள்ளைகளுக்கு சுய தொழில் செய்வதற்கான உதவிகளை செய்து தருகிறேன்.

*இவர்களின் நிலை மாறியுள்ளதா?

ஓரளவு மாறியிருக்கிறது என்று சொல்லலாம். தற்போது இந்த சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். படித்தவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். சிலர் கைத்ெதாழில் கற்றுக்கொண்டு ஓட்டல், பேக்கரி, அழகு நிலையங்களில் வேலை செய்கிறார்கள். அவர்களின் இந்த மாற்றத்தினை நிலையானதாக மாற்ற வேண்டும். அதற்கு என் சேவையினை விரிவுப்படுத்த வேண்டும்.

*உங்களின் பணி!

படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். படிக்காதவர்களுக்கு அவர்கள் கைத்தொழில் செய்ய உரிமம் பெற்றுத் தருகிறேன். மேலும், தொழில் துவங்க தேவையான சான்றிதழ்களையும் அவர்களுக்கு பெற்றுத்தருவது போன்ற பல்வேறு உதவிகளை செய்து தருகிறேன். டிடர்ஜென்ட் லிக்விட் தயாரிப்பு, துடைப்பம் போன்றவற்றை தயாரித்து, வருமானம் ஈட்ட உதவுகிறோம்.

குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கும் திட்டம் மூலம் சுண்டல், முட்டை போன்றவற்றை வழங்கி வருகிறோம். இவர்களின் தொழிலான ஊசி மணி, பாசி விற்பனைகளோடு செயற்கை ஆபரணப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சிகளை வழங்கி அதனை விற்பனை செய்வதற்கான ஸ்டால்களை அமைத்து தருகிறோம். பொது இடங்களில், சந்தைகளில், கண்காட்சிகளில் இவர்களது ஸ்டால்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலமாக இவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இவர்களுக்காக நான் பயணிக்க வேண்டிய தூரங்களும் செய்ய வேண்டிய பணிகளும் நிறைய இருக்கிறது என்கிறார் பிரபா வாசுகி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்