Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திரமாக இருக்கிறேன்...வீட்டிலும் வெளியிலும்...

நன்றி குங்குமம் தோழி

 

சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா

சினிமாவின் அடுத்த களம் என்றால் அது சின்னத்திரைதான். பிரபல நடிகர், நடிகைகள் கூட இப்போது தங்களின் நடிப்பினை சின்னத்திரை பக்கம் திருப்பி உள்ளனர். தினமும் காலை முதல் இரவு வரை ஷூட்டிங் இருந்தாலும், வீட்டில் உள்ள பெண்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கக்கூடிய கருவி இதுதான். அதில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ தொடரில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ஐஸ்வர்யா. இதில் டாக்டராக நடிக்கும் இவர் மலையாள சின்னத்திரையிலும் தனக்கென ஒரு அடையாளத்தினை பதிவு செய்துள்ளார்.

‘‘பள்ளியில் படிக்கும் போதே நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தாலும், என்னுடைய அந்தக் கனவு மிகவும் தாமதமாகத்தான் நிறைவேறியிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் எங்களைப் போல் சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குடும்பம், வேலை என்று அதிக பொறுப்புகள் எங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. காரணம், எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும், அதை லாவகமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெண்களுக்கு ஒரு வரமாக இறைவன் வழங்கியிருக்கிறார்’’ என்பதை உறுதி செய்தார்.

‘‘நான் பிறந்தது மதுரையில். அப்பா கேரளத்தைச் சேர்ந்தவர். அம்மா மதுரையில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மதுரையில் படித்தேன். எனக்கு சினிமா பார்க்க பிடிக்கும். அதனாலே படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு நாங்க கேரளம், பாலக்காடு அருகே திருவில்வாமலா என்ற ஊருக்கு இடம் மாறினோம். அப்பா அங்குள்ள மிகவும் பழமையான கோவிலில் புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அம்மா மூலம் அப்பாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். ஆனால் அதெல்லாம் சரிப்படாது என்று சொல்லிட்டார். என் விருப்பத்தை பொட்டலமாக கட்டி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டேன். ஒரு மனத் திருப்திக்கு பரத நாட்டியம் கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். இதற்கிடையில் திருமணமானது. எனக்கு மூன்று குழந்தைகள்.

என் கணவருக்கு மலேசியாவில் வேலை என்பதால் அங்கு செட்டிலானேன். அங்கு பரதம் சொல்லிக் கொடுத்தேன். இப்போது துபாயில் வேலை மாற்றலானது. நான் மூன்று ஆண்டுகள் அங்கு இருந்தேன். அதன் பிறகு என்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கே வந்திட்டேன்’’ என்றவர் நடிக்க வந்தது பற்றி கூறினார்.‘‘துபாயில் வசித்த போது முகநூல் பக்கத்தில் என்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்தேன். அதைப் பார்த்த கேரளத்தைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சின்ன வயசில் நான் விரும்பிய விஷயம். அப்ப அப்பா அனுமதி தரவில்லை. திருமணமாகி பத்து வருஷம் கழித்து வாய்ப்பு வந்திருக்கிறது.

கணவரிடம் அனுமதி கேட்ட போது, பல யோசனைக்குப் பிறகு சம்மதம் சொன்னார். ஜாப் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து மற்றொரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் வெளியாக தாமதம் ஏற்பட்டது. இதனால் நான் சோர்ந்து போனேன்.

அந்த சமயத்தில் அங்குள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்று தமிழ்நாட்டின் சுற்றுலா தொடர்பான செய்திகளை தயாரித்து யூடியூபில் வெளியிட்டு வந்தது. அந்த செய்திகளை தமிழில் வர்ணனை வழங்க என்னை அணுகினார்கள். நானும் செய்து கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தொடர் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு சில எபிசோட்கள் நடித்து முடித்துவிட்டேன்.

இதைத் தொடர்ந்து ‘சிங்கப் பெண்ணே’ தொடரில் வாய்ப்பு கிடைத்து, அதில் நடித்து வருகிறேன். மேலும் சமயபுரம் மாரியம்மன் தோற்றத்தில் போட்டோஷூட் ஒன்றை புகைப்பட கலைஞர் எடுக்க விரும்பினார். அதற்காக மாரியம்மன் போல் வேடமிட்டு போட்டோஷூட் எடுத்துக் கொடுத்தேன்’’ என்றவர் சின்னத்திரை படிப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘சென்னையில் படப்பிடிப்பு என்பதால், ஒவ்வொரு முறையும் திருச்சூரிலிருந்து சென்னைக்கு வருவேன். இங்கு ஹாஸ்டலில் தங்கிக் கொள்வேன். காலை எட்டு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கும். இரவு பத்துமணி வரை நடக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளை விட்டு வரும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் போது, அவர்கள்தான் என் உலகம். நான் இல்லாத நாட்களில் என் அம்மாதான் அவர்களை பார்த்துக் கொள்கிறார். என்னைப் பொறுத்தவரை கேரக்டர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய விருப்பம் காலதாமதமாக கிடைத்தாலும், நல்ல நல்ல கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தேவை. சின்னச் சின்ன தேவைக்கு கணவரை எதிர்பார்க்க முடியாது. பெண்கள் சம்பாதித்தால் அவர்களுக்கு மட்டுமில்லை குடும்பத்திற்கும் பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். நடிப்பதும் மற்ற தொழில் போன்றதுதான். இதனால் எனக்கு பொருளாதார சுதந்திரமும் கிடைக்கிறது. பலர் திரைக்குப் பின்னால் தவறு நடக்கும் என்று நினைக்கிறார்கள். வேலைக்கு போகும் பெண்களும் பிரச்னைகளை சந்திக்கத்தான் செய்கிறார்கள். நாம் சரியாக இருந்தால் எல்லாமும் சரியாக நடக்கும். என் மேல் என்னை விட என் கணவருக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன்... சுதந்திரமாக இருக்கிறேன்... வீட்டிலும் வெளியிலும்...’ என்கிறார் ஐஸ்வர்யா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி