நன்றி குங்குமம் தோழி ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான். சகோதர, சகோதரியாக தன் இளமைப் பருவத்தை அக்குழந்தை கடந்தாலும் வளர வளர அவர்களுக்கென உறவுகள் கூடவே ஒட்டிக் கொள்கின்றன. ஒரு பெண் குழந்தை பெற்றோருக்கு...
நன்றி குங்குமம் தோழி
ஒரு குழந்தை பிறந்து முதுமையை அடையும் வரை அவர்களுக்கு எத்தனையோ உறவு முறைகள் அடைமொழிகளாக அடைவது என்பது நம் மனித சமூகத்தின் இயற்கை நியதிதான். சகோதர, சகோதரியாக தன் இளமைப் பருவத்தை அக்குழந்தை கடந்தாலும் வளர வளர அவர்களுக்கென உறவுகள் கூடவே ஒட்டிக் கொள்கின்றன. ஒரு பெண் குழந்தை பெற்றோருக்கு மகளாக, சகோதரியாக இருந்தாலும், திருமண பந்தம் ஏற்படும் போது, மனைவி, அண்ணி, நாத்தனார், சித்தி, அத்தை என வெவ்வேறு உறவுமுறைகளை தனக்குள் அடக்கிக் ெகாள்கிறாள். அதே பெண் தாயாக மாறி ஒரு சந்தர்ப்பத்தில் மாமியாராக, பாட்டியாக தன்னை புதுப்புது உறவு முறைகளுக்குள் புகுத்திக் கொள்கிறாள்.
ஆண்களும் அப்படித்தான், பள்ளிப்பருவ இளமைக் காலத்தினை கடந்து வாலிபம் அடையும் போது அவனின் பருவம் மற்றும் உருவத்தில் மாற்றம் ஏற்படும். பிறகு குடும்பஸ்தனராக மாறும் பொழுது புதுப்புது உறவுகளை ஏற்பார்கள். கணவனாக, அப்பாவாக, மைத்துனனாக, மாமாவாக, சித்தப்பாவாக, பெரியப்பாவாக என பல்வேறு உறவுமுறைகளைத் தாங்கிப்பிடித்த பின்தான் முதுமை எட்டிப் பார்க்க ஆரம்பமாகிறது. பட்டங்கள் பெற, பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும். உறவு முறைப் பட்டங்கள் தானே வந்து சேரும். வசதிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உறவு முறைகள் நமக்கு அமைந்துவிடும். காலம் காலமாக இந்த உறவு முறைகளை நாம் கட்டிக் காக்கிறோம்.
எழுபது வயதான பெரியவர் ஒருவர் தன் வாழ்வின் அனைத்து பருவங்களையும் தன் குடும்பத்திற்காக உழைத்தார். தம்பி, தங்கைகள் படிக்க வேண்டும் என்பதால் தன் படிப்பினை தியாகம் செய்தார். இன்று எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இவருக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் உடன் பிறப்புக்களும் உறவுகளும் கண்முன் தோன்றி மறைந்தனர். அந்தக்கால பாச உணர்வுகளை அனுபவித்திருந்த அவருக்கு, காலத்தின் மாற்றம் நல்ல படிப்பினையை தந்தது. பல முதியவர்களைத் தாங்கிப் பிடித்தார்.
இன்று அதன் பலனாக அவர் உடல் நிலை சரியில்லாத போது, உறவினர் ஒருவர் அவரை வந்து பார்த்து சென்றார். மற்றவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். உடல்நலத்தைக் கவனிக்க சொல்லி அறிவுரைகளை கூறினார்கள். சிலர், ‘உதவிக்கு ஆள் வைத்துக்கொள்வதுதானே!’ என்று ஆலோசனை வழங்கினார்கள். மொத்தத்தில் பிறரை கவனிக்க யாருக்குமே நேரம் கிடையாது. அனுபவங்கள் நிறைய கிடைக்கும் போதுதான், மனிதர்களின் குணமும் வெளிப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டார் பெரியவர். தினமும் நடைப்பயிற்சியில் நண்பராகிப் போன ஒருவர், பல நாட்கள் இவரைக் காணாமல், அவரைப் பார்க்க வந்தார்.
ஆச்சரியம் என்னவென்றால், இவரின் நடைப்பயிற்சி நண்பரின் வயது தொண்ணூறு. உடல் பலமும், மன பலமும், பண பலமும் இருக்கும் வரை வாழ்க்கை கவலையில்லாமல் ஓடுகிறது. சறுக்கல் ஏற்படும் போது, அதே வயதுடையவர்கள் புரிந்து நடப்பார்கள். நாமும் நம் வயதினை சேர்ந்தவர்களுடன் நட்போடுப் பழகி உறவாக்கிக் கொள்ளலாம். அந்தக்கால சாப்பாடும், அரவணைப்பும், குதூகலமும் எவ்வளவு சம்பாதித்தாலும் கிடைப்பதில்லை.
நாமும் காலத்திற்கேற்றபடி அனுசரித்துச் சென்றால்தான் மரியாதை நம்மைத் தேடி வரும். வயதிற்கேற்றாற் போல் சமூக ஊடகங்களில் குழு அமைத்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உறவுகள் வளர்ந்தாலும், அவை உணர்ச்சியுடன் காணப்படுகிறதா என்பது கேள்வியாகத்தான் உள்ளது. பெரியவர்களோடு அமர்ந்து பேசி, அவர்கள் அனுபவங்களைக் கேட்கவும், பழமையை அறிந்து கொள்ளவும் யாருக்கும் நேரமில்லை.
தொலைத் தொடர்புகளும், சமூக ஊடகங்களும் வசதி இல்லாத காலகட்டத்தில் நம் குடும்பப் பெரியவர்கள்தான் அனைத்தையும் நமக்கு விளக்கினார்கள். அவர்களுடன் செலவழித்த நேரம் நமக்குப் பாசத்தோடு அன்பின் மகத்துவமும் புரிந்தது. செயல்முறை வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக் ெகாண்டோம். ஆனால், இன்று சின்னச் சின்ன விஷயங்களுக்கு மனஸ்தாபங்கள் ஏற்படுகிறது. அடி, உதை வாங்கி வளர்ந்த காலத்தில், அனைத்தையும் பாசத்துக்கு முன் துச்சமாக விட்டோம். ஆனால், இன்று நாம் சிறியவர்களிடம் கூட பார்த்துப் பேச வேண்டும்.
வயதையொத்தவர்களிடம் நெருங்கிப் பழகும் போது நல்ல புரிதல் ஏற்படும். குறிப்பாக ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் பேசும்போது அது சுவாரஸ்யமாக அமைந்துவிடும். அதனால் தானோ என்னவோ சமீப காலங்களில், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அடிக்கடி ஒன்றாகக்கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ‘அலுமினிமீட்’ நடத்தி மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய நட்புகளால் கிடைக்கும் மகிழ்வு உறவை விட மேலானதாகி விடுகிறது. தனிமையைப் போக்கிக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் நமக்கு வரமாகக் கிடைக்கின்றன. உறவுகள் ஒத்துப் போகாத சமயத்தில் நமக்கு நட்பே உறவாக அமைகிறது.
பாசம், அன்பு என்பது மொழி, இனம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. காலங்கள் மாறினாலும், உறவு முறைகள் மாறிவிட்டாலும் காலத்திற்கேற்றபடி, பிறருடன் அனுசரித்துச் செல்லும் போது, நம்மைச் சுற்றி பலர் உறவுகளாக அமைந்து விடுகிறார்கள். அதனால்தான் நாம் சமயங்களில் உடன் பிறவா சகோதரர், சகோதரி என்றெல்லாம் கூறுகிறோம். மூதாதையர்கள் காலத்தில், ஒருவர் படுக்கையில் விழுந்து விட்டால், உறவினர்தான் அவர்களை தூக்கி, எடுத்து சாப்பாடு தந்து உடல் நலத்தில் முழு சேவையும் செய்து வந்தார்கள். இன்று அனைத்திற்கும் வீடு தேடி வந்து சேவை செய்யும் மையங்கள் உள்ளன.
சாப்பாடு முதல் மருந்து, மாத்திரைகள் வரை கொண்டு வந்து தருகிறார்கள். அனுசரணையும், ஒத்துப் போகும் மன திடமும் இருந்துவிட்டால் போதும். பிறரை குறை கூறுவதை விட, கிடைக்கும் பாக்கியங்களைப் பெற்றுக் கொண்டு, பிறருக்கு சிரமம் தராமல் வாழும் வாழ்க்கை என்றுமே தித்திக்கும். பிறருக்கு பாரமாக இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக உறவுகள் நம்மைத் தேடி வரும்.
இன்றைய சூழலில், பெரியவர்கள் வீட்டில் தனித்து இருக்க முடியவில்லை. தங்களுக்கு பொழுது போகும் விதத்தில், கோவில், கடைத்தெரு என்று நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. முன்கூட்டி சொல்லாமல் எந்த உறவினர் வீட்டுக்கும் போக முடியாது. யாரேனும் நம் வீட்டிற்கு வருவதானாலும் சொல்லி விட்டு வரக்கூடிய நிலை. நம் பெரியோர்கள் காலத்தில் திடீர் விருந்தாளிகள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து நம்மை மகிழ்ச்சியில் அதிர்ச்சி தந்தனர். வார விடுமுறை நாட்களில் சிறியவர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.
பெரியவர்களும் பொழுதுபோக்கிற்கு தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நல்ல உத்தியோகம் பார்த்து ஓய்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அனைத்து நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வாழ்க்கையை சுகமாக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். நட்பில் தொடரும் உறவு பேதமின்றி வளர்கிறது. தங்கள் உடல் நலம் குறித்தும், எங்கெல்லாம் ‘மெடிக்கல் கேம்ப்’ நடக்கிறது என்பது பற்றியெல்லாம் கூட அலசுகிறார்கள். காலம் மாறினாலும், வெவ்வேறு விதங்களில் உறவுகள் மலரும். அது வயதையொத்தும் இருக்கும் என்பதுதான் உண்மை.
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்