Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் ஆளுமைகள்!

நன்றி குங்குமம் தோழி

சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கான வாழ்த்துச் செய்தி மட்டுமல்ல... ஆயிரமாயிரம் பெண்கள், தங்களது அடிப்படை உரிமைகளைப் பெற போராடிய வரலாறு. பெண் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகவும், பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை நிரந்தரம், பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை என பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வீதியில் இறங்கி, போர்க்குணமுள்ள ஓர் ஆர்ப்பாட்டத்தை தன்னெழுச்சியோடு நடத்திய நாள். போராட்டத்தின் இறுதியாய் கிடைத்த வெற்றியே உலக மகளிர் தினம். மகளிர் தினத்தில் தமிழக வரலாற்றில் மறைக்கப்பட்ட முக்கியமான பெண் ஆளுமைகள் மூவர் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.கொள்கை சார்ந்த வாழ்க்கை என்பது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதல்ல... விரும்பி ஏற்கும்படி செய்வது என்ற வாக்கியங்களுக்கு ஏற்ப, தந்தை பெரியாரின் கொள்கைகளில் முழுமையான ஈடுபாடு கொண்டு, அவரது புரட்சிகரமான செயல்பாடுகளுக்கு, அவரின் குடும்பத்தில் துணையாக நின்ற பெண்கள் இருவர். ஒருவர் பெரியாரின் உடன்பிறந்த இளைய சகோதரி எஸ்.ஆர்.கண்ணம்மாள். இவரின் துணிவும், தலைமைப் பண்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இன்னொருவர் பெரியாரின் மனைவி அன்னை நாகம்மையார்.இவர்களுடன் தன் சுய அறிவாலும், அநீதிகளுக்கு எதிரான போராட்ட குணத்தாலும், சுயமரியாதை இயக்க வரலாற்றில் தன்னை இணைத்துக்கொண்ட பெண் தலைவர்களில் மிக முக்கியமானவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

எஸ்.ஆர்.கண்ணம்மாள்

ஆங்கிலேய அரசை எதிர்த்து ஒரு பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட முதல் பெண் பத்திரிகையாளர் இவர் என்றால் நம்ப முடிகிறதா? இவருக்கு முன் பத்திரிகை நடத்தியதற்காகவோ, அரசாங்கத்தை எதிர்த்துத் தலையங்கம் வெளியிட்டதற்காகவோ பெண்கள் யாரும் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றார்களா எனத் தேடினால், 1933ம் ஆண்டுக்கு முன்னால் எந்தப் பெண்ணும் பத்திரிகை நடத்தி சிறைத் தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை.செல்வ வளமிக்கக் குடும்பத்தின் கடைசிப் பெண் குழந்தையாக 1891ல் பிறந்து, செல்லமாக வளர்க்கப்பட்டவர் கண்ணம்மாள். அந்தக் காலத்தில் வீடே பஜனை மடமாய் இருந்த குடும்பத்தில், பெண் ஒருவர் சாஸ்திரங்களை மறுப்பதும், பழமை என்ற பெயரால் பெண்களை அடிமைப்படுத்துவதை எதிர்ப்பதும் எளிதான காரியம் அல்ல. ஆனால் இத்தகைய மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்ட முதல் சுயமரியாதை வீராங்கனையாக வரலாற்றில் மிளிர்கிறார் கண்ணம்மாள்.இன்றைய காலத்தில் சாராயக்கடைகள் முன்னால் பெண்கள் போராட்டம் நடத்துவதும், கடையை இழுத்துப் பூட்டுப் போடுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரு நூற்றுாண்டிற்கு முன்னால், கள்ளுக்கடை மறியல் நடந்த போது, பெரியாரின் மனைவி நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்துக்குத் தலைமை ஏற்று, பெருங்கிளர்ச்சியுடன் போராட்டத்தை ஈரோட்டில் நடத்தினார்கள். ஈரோட்டில் நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.1934ல் ‘ஈரோடு அர்பன் வங்கி’ இயக்குனர் தேர்தல் நடந்த போது, தேர்தலில் நின்று போட்டியிட்டு, அதன் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர். அதேபோல் ஈரோடு நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகரசபை செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டினார்.பல சீர்திருத்தத் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், அவரது வீட்டிலேயே பல திருமணங்களும் நடைபெற்றுள்ளன. முன்னோடி பெண் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர். கண்ணம்மாள் 1971ல் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்தார்.

அன்னை நாகம்மையார்

பெரியாரின் உறவினர்களில் அதிகம் வசதியில்லாத ஒரு குடும்பத்தில் 1885ல் நாகம்மாள் பிறந்தார். அந்தக் கால வழக்கப்படி 13 வயதில் பெண்ணுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. நாகம்மாள் மனதிலோ பெரியாரை மணக்க ஆசை. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்ய முயன்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்ல, 1898ல் தந்தை பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் திருமணம் நடைபெற்றது. பெரியாரை மணந்த பிறகு அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யும் நகை, புடவை ஆடம்பரத்தை விட்டொழித்தவர் நாகம்மாள்.அண்ணல் காந்தி முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில், பெரியார் சிறை சென்றவுடன், நாகம்மையார் ‘அதே போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவேன்’ என்று ஆங்கிலேய அரசை எதிர்த்து களத்துக்கு வந்தார். நூற்றுக்கணக்கான பெண்களுடன் மறியல் போராட்டத்தில் இறங்கினார். ஒத்துழையாமை இயக்கம் நாகம்மையாரின் தலைமையில் புதிய எழுச்சியை ஈரோட்டில் கண்டது. அவருடன் இணைந்து நின்றார் பெரியாரின் இளைய சகோதரி கண்ணம்மாள்.ஏராளமான பெண்கள் நாகம்மையார், கண்ணம்மாளுடன் மறியல் செய்ய ஈரோட்டில் திரண்டனர். தடை உத்தரவை மீறினர். அவர்களைத் தடுக்கமுடியாமல், காவல்துறை அதிகாரிகள் திகைத்தனர். நாகம்மையாரும் அவருடன் மறியல் செய்தவர்களும் கைது செய்யப்பட்டதால் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானது. அந்தப் போராட்டத்தின் வேகத்தை தடுக்க முடியாது என்பதால், அப்போது போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஈரோட்டில் மட்டும்

நீக்கப்பட்டது.சுயமரியாதை இயக்கத்தின் பிரசார ஆயுதமான ‘குடி அரசு’ ஏட்டின் பதிப்பாளராக 1924ல் தன்னைப் பதிவு செய்தவர் நாகம்மையார். 1928ல் ‘ரிவோல்ட்’ ஆங்கில இதழை நடத்த மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்குச் சென்று சட்டப் பத்திரங்களைத் தாக்கல் செய்தார். இதற்காகப் பலமுறை அவர் நீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது. ஒரு தமிழ் ஏடு மற்றும் ஆங்கில இதழ் இரண்டுக்கும் பத்திரிகை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும், அவற்றை வெளியிட்ட அச்சகத்தின் உரிமையாளராகவும் திகழ்ந்த முதல் பெண் தலைவர் அன்னை நாகம்மையார்.தாலி என்பது ‘அடிமைச் சின்னம்’ என்ற கொள்கையின் அடையாளமாகத் தாலியை அகற்றிய முதல் சுயமரியாதை இயக்க வீராங்கனையாக, தன் கணவரை, ‘தோழர் ராமசாமி அவர்களே!’ என்று அழைத்தவர். சுயமரியாதைத் திருமணங்களுக்கு அவரே தலைமை தாங்கி இருக்கிறார்.1924ல் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் ஈழவ மக்களின் அடிப்படை உரிமைக்காகப் பெரும் போராட்டம் நடந்தது. அன்று வைக்கத்தில் ஓங்கி ஒலித்தது நாகம்மையாரின் குரல். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த அன்னை நாகம்மையாரின் சாதனைகளும் போராட்டங்களும் நம்மை வியக்க வைக்கின்றன என்றால் மிகையாகாது. உறுதிமிக்க எண்ணம் கொண்ட நாகம்மையார் 1955 மே 11ல் காலமானார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

ஆடம்பரம் இல்லாத உடை, குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, மத அடையாளங்கள் இல்லாத நெற்றி, ஆழமான சிந்தனையை வெளிப்படுத்தும் விழிகள், இயல்பான தோற்றம்... இவைதான் ராமாமிர்தம் அம்மையாரின் அடையாளங்கள். திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, மூவலூரைச் சேர்ந்த சின்னம்மாளின் ஒரே மகள் ராமாமிர்தம். 1883ல் பிறந்த ராமாமிர்தத்தின் பெற்றோர் இருவரும் தேவதாசிக் குடும்ப மரபில் வந்தவர்கள். தேவதாசி குடும்பத்தில் பெண்களுடைய வாரிசுகள்தான் தாசியாக வேண்டும். ஆண்களுடைய வாரிசுகள் தேவதாசியாவதை குலதர்மம் அனுமதிக்கவில்லை. ஆனாலும் தேவதாசி முறையை இழிவென்று உணர்ந்து இருவரும் ஏற்க மறுத்ததால், சமூகம் அவர்களை வறுமையில் தள்ளியது. குடும்பத்தின் வறுமையைத் தீர்க்க முடியாத கிருஷ்ணசாமி ஓர் இரவில் தன் மனைவியையும், மகளையும் விட்டுவிட்டு குடும்பத்தைவிட்டே வெளியேறினார். தாயும் மகளும் வாழ வழி தெரியாது தவித்தபோது கிருஷ்ணசாமியிடம் இருந்து கடிதம் வந்தது. சென்னையில் ஒரு வீட்டில் சம்பளமில்லாத வேலையாளாக இருப்பதாகவும், சாப்பாடு மட்டும் கிடைக்கிறது என்றும் எழுதியிருந்தார். தடுமாறிக் கொண்டிருந்த சின்னம்மாள் மகளின் வயிற்றுப் பசியை தீர்க்க முடிவு செய்து, மூவலூரில் இருந்த ஆச்சிக்கண்ணு என்கிற தேவதாசியிடம் பத்து ரூபாயும் ஒரு பழைய புடவையையும் பெற்றுக் கொண்டு ராமாமிர்தத்தை தத்துக் கொடுத்துவிட்டார். இசையிலும் நடனத்திலும் தேர்ந்த ராமாமிர்தம், பொட்டுக்கட்டி தேவதாசியாக வேண்டும் என்ற வளர்ப்புத்தாய் ஆச்சிக்கண்ணுவின் கட்டளையை மறுத்தார். தேவதாசியாக வாழ்வது எவ்வளவு வெறுக்கத்தக்க வாழ்க்கை என்பதையும், அடுத்து பொட்டுக் கட்டப்பட்டால், தான் விலைமகளைப்போல் வாழநேரும் என்பதையும் உணர்ந்திருந்தவர், தன் வளர்ப்புத் தாயின் ஏற்பாடுகளை மறுத்து, தான் விரும்பிய, தனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர் சுயம்பு பிள்ளையை மணந்தார்.ராமாமிர்தம் பள்ளிக்குச் செல்லவில்லை எனினும் வீட்டிலேயே அடிப்படைக் கல்வி கற்றவர். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்றவர். தொடர்ந்து சமூக அறிவை வளர்த்துக்கொள்ள உலக வரலாற்றையும் சமயங்களைப் பற்றியும் ஆழ்ந்து கற்றுள்ளார். நாளிதழ்கள் முதல் வடமொழி நூல்கள் வரை படிக்கும் பழக்கம் கொண்டவர். தொடர்ந்து காங்கிரஸ் இயக்கப் பிரசாரத்தை மேடைகளில் முழங்கினார். பட்டாடைகளை ஒதுக்கி கதர் துணியை உடுத்தினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரசில் அன்று ஊர் ஊராகச் சென்று மேடைதோறும் உரையாற்றிய முதல் பெண் பேச்சாளராக திகழ்ந்தார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.‘குடி அரசு’ இதழில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காக ‘தேவதாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதுடன், மயிலாடுதுறையில் மாயவரம் இசை வேளாளர் மாநாட்டை நடத்திக் காட்டினார். தேவதாசி முறையை ஒழிக்கப் போராடியவர்கள், தேவதாசிப் பெண்களின் பரிதாப நிலையை மட்டும் பேசிய நிலையில், ராமாமிர்தம் அம்மையாரோ, பாதிக்கப்பட்ட ஆண்களின் குடும்பங்களைப் பற்றியும் கவலை கொண்டார். தான் கண்ட பல்வேறு நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய நாடக நூல்தான் ‘தாசிகளின் மோசவலை’, ‘மதிபெற்ற மைனர்.’ பிறகு ‘தமயந்தி’ என்ற நாடகத்தினை தொடர்கதையாகவும் எழுதினார்.தேவதாசி முறையை ஒழிக்க வேண்டியதற்கான காரணங்களை மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அதே சமூகத்தவர் சிலர் மேடையேறி அம்மையாரின் நீண்ட தலைமுடியை வெட்டி எறிந்தனர். ஒருமுறை அவரின் உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது குடிப்பதற்கு பால் கொடுக்க, கொஞ்சம் பாலைக் குடித்ததும் வாய் அமிலம் பட்டது போல் எரிந்து, முகம் வீங்கி மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாலில் நஞ்சு கலந்தது தெரிந்த பின்னும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார் அம்மையார்.தமிழ்நாட்டில் இவரின் பெயரில்தான் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் கல்வி உதவித் திட்டம்’ தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(தகவல் ஆதாரம்: வழக்கறிஞர் ‘அருள்மொழி’ எழுதிய ‘திராவிடப் போராளிகள்’ நூலில் இருந்து...)

இவருக்கு முன் பத்திரிகை நடத்தியதற்காகவும், அரசுக்கு எதிராய் தலையங்கம் வெளியிட்டதற்காகவும் எந்தப் பெண்ணும் பத்திரிகை நடத்தி சிறைத் தண்டனை பெறவில்லை.

அண்ணல் காந்தி முன்னெடுத்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில், பெரியார் சிறை சென்றவுடன், நாகம்மையார் ‘அதே போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவேன்’ என்று ஆங்கிலேய அரசை எதிர்த்து களத்துக்கு வந்தார்.

தேவதாசி முறையை ஒழிக்கப் போராடியவர்கள், அவர்களின் பரிதாப நிலையை மட்டும் பேசிய நிலையில், ராமாமிர்தம் அம்மையாரோ, பாதிக்கப்பட்ட ஆண்களின் குடும்பங்களைப் பற்றியும் கவலை கொண்டார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்